PUBLISHED ON : அக் 06, 2026 12:00 AM
ரா.கீதாலட்சுமி, உளுந்துார்பேட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், தொடர்ந்து பள்ளிக்கு வராமல், தேர்வுக்கு வந்த பிளஸ் 2 மாணவர்களிடம், 'ஏன் இவ்வளவு நாட்களாக பள்ளிக்கு வரவில்லை?' என்று கேட்டுள்ளார், தலைமை ஆசிரியர்.
உடனே, அவரது அறைக்குள் புகுந்த மாணவர்கள், தலைமை ஆசிரியரை சரமாரியாக தாக்கி உள்ளனர். சத்தம் கேட்டு ஆசிரியர் ஒருவர் வரவே, தப்பி ஓடி விட்டனராம்!
அரசு பள்ளி மாணவர்களின் ஒழுக்கம் எந்த லட்சணத்தில் இருக்கிறது பாருங்கள்!
ஒருகாலத்தில், மாணவர்கள் வீட்டுப் பாடம் செய்யவில்லை என்றாலோ, வகுப்பில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டாலோ ஆசிரியர்கள் அடி பின்னி எடுத்து விடுவர். மாணவர்கள் அழுது கொண்டே வீட்டில் போய் கூறினால், 'ஆசிரியரிடம் அடி வாங்கும் அளவுக்கு என்ன தவறு செய்தாய்?' என்று கேட்டு, அவர்களும் தங்கள் பங்கிற்கு நான்கு மொத்து மொத்துவர்.
அத்துடனும் விடமாட்டார்கள்; மறுநாள் பள்ளிக்கு வந்து ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு, 'கண்ணை மட்டும் விட்டு, தோலை உரித்து விடுங்கள்' என்று கூறிச் செல்வர்.
இப்படி தவறு செய்யும் மாணவனுக்கு பள்ளியிலும், வீட்டிலும் ஒரு மாதிரியான, 'ட்ரீட்மென்ட்' கிடைத்ததால், மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு கட்டுப்பட்டவர்களாக, தவறு செய்ய அஞ்சுபவர்களாக அன்று இருந்தனர்.
இன்று ஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கும் சுதந்திரம் இருக்கிறதா?
ஒருபுறம், மாணவர்களை கண்டிக்கக் கூடாது என்று கல்வித் துறை, ஆசிரியர்களின் கைகளை கட்டிப் போடுகிறது என்றால், மறுபுறம் பெற்றோரே, 'எங்கள் பிள்ளையை எப்படி கண்டிக்கலாம்' என்று வரிந்து கட்டி, சண்டைக்கு வருகின்றனர்.
ஆசிரியர்கள் என்ன செய்வர்... 'பள்ளிக்கு வர்றாயா... வா; படிக்கிறாயா... படி; படிக்கவில்லையா... என்ன செய்யணுமோ செய்து கொள்; எனக்கு சம்பளமும், சலுகைகளும் வந்தால் சரி' என்ற மனநிலைக்கு வந்து விடுகின்றனர்.
விளைவு... அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரம் நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து வருவதுடன், எங்காவது ஓர் ஆசிரியர் மனச்சாட்சிக்கு கட்டுப்பட்டு, மாணவர்களை நல்வழிப்படுத்த கண்டித்தால், இப்படி தாக்கப்படுகின்றனர்.
இந்த போக்கு மிகவும் ஆபத்தானது; இதன் விபரீதம் புரியாமல், தமிழக அரசும் மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பதற்காக, சிக்கன் பிரியாணி கொடுக்கலாமா, மாட்டுக்கறி பிரியாணி கொடுக்கலாமா என்று ஆலோசிக்கிறதே தவிர, அரசு பள்ளி மாணவர்கள், நல்ல முறையில் கல்வி பயின்று, நல்லொழுக்கம் உள்ள மனிதர்களாக வெளியேறுவதற்காக கல்வி முறையிலும், கற்கும் சூழலையும் மாற்றம் செய்வது குறி த்து யோசிப்பதாக தெரியவில்லை.
அரசு பள்ளிகளை நம்பியுள்ள அடித்தட்டு ஏழை மாணவர்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமாயின், இனியும் காலத்துக்கு உதவாத மொழிக் கொள்கையை பிடித்து தொங்கிக் கொண்டும், சமூக நீதி, சர்க்கரை நீதி என்று வெறும் வாயில் பந்தல் போடாமல், ஆக்கப்பூர்வமான விஷயங்களில் கல்வித் துறை கவனம் செலுத்த வேண்டும்!
----
மதுவை ஒழிக்க முடியாது!
எம்.கலைவாணி, அருப்புக் கோட்டை, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு பதிலாக, மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும் மாற்றத்தை தந்துள்ளது, தமிழக வெற்றிக் கழக அரசு' என்று கூறியுள்ளார், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார்.
தமிழகத்தை, 'மது மிகை' மாநிலமாக மாற்றியதே திராவிடக் கட்சிகளின் முன்னோடிகளான, மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தான் என்பது நாடறிந்த விஷயம்!
அண்ணாதுரை முதல்வராக இருந்தபோது, 'மது விற்பதால் கிடைக்கும் பணம் தொழுநோயாளியின் கையில் உள்ள வெண்ணெய்க்கு சமம்; ஆகவே, மதுவிலக்கு கொள்கையிலிருந்து மாறமாட்டேன்' என்று உறுதியளித்தார். ஆனால், அவரது அரசியல் வாரிசுகளோ, அவரது கொள்கையை காற்றில் பறக்கவிட்டனர்.
தமிழகத்தில், பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த மதுவிலக்கை ரத்து செய்து, கள்ளுக்கடை மற்றும் சாராயக் கடைகளை திறக்கச் செய்தவர், கருணாநிதி.
'என் இறுதி மூச்சு உள்ளவரை மதுவிலக்கு கொள்கையை கைவிடமாட்டேன்; என் அன்னையின் மீது உறுதியளிக்கிறேன்' என்று, 1979-ல் சொன்ன எம்.ஜி.ஆர்., இரண்டே ஆண்டுகளில் பல்டியடிக்க, 1981-ல் மீண்டும் கள்ளுக்கடை, சாராயக்கடைகளுக்கு திறப்பு விழா நடத்தப் பட்டது.
தமிழ்நாடு வாணிபக் கழகம் என்ற, 'டாஸ்மாக்' நிறுவனமே, எம்.ஜி.ஆர்., ஆட்சியில் தான் தொடங்கப்பட்டது.
கடந்த 1983-ல், 'மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்தினால், அரசுக்கு நல்ல வருவாய் கிடைக்கும்' என்ற அருமையான ஆலோசனையை முன் வைத்தவர் கருணாநிதி என்றால், அதை, 2003-ல் முழுமையாக செயல்படுத்தி, மது விற்பனையை அரசுடைமையாக்கிய பெருமையை தேடிக்கொண்டவர், ஜெயலலிதா.
அரசுக்கு வருவாய் ஏற்படுத்தி தருவதோடு, அரசியல்வாதிகள், ஊழல் செய்வதற்கான களத்தையும் உருவாக்கிக் கொடுத்திருக்கிறது டாஸ்மாக் நிறுவனம்.
கடந்த 1971-ல் கருணாநிதியால் நடப்பட்ட மது எனும் விஷச்செடி, இன்று ஆலவிருட்சமாய் வளர்ந்து, தமிழகத்தின் லட்சக்கணக்கான இளைஞர்களை சீரழித்துக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் இன்று, 11 மதுபான தொழிற் சாலைகள் இருக்கின்றன; அத்தனைக்கும் சொந்தக்காரர்கள் தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகளோடு பின்னி பிணைந்து இருப்பவர்கள் தான்!
இவர்களிடம் மதுவை வாங்கி விற்கும் தமிழக அரசுக்கே ஆண்டுக்கு, 45 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் என்றால், உற்பத்தியாளர்களின் லாபத்தைக் கணக்கிட்டால் தலைசுற்றிவிடும்.
இத்தகைய சூழலில் அண்ணாதுரையே மறுபிறவி எடுத்து வந்து ஆட்சி அமைத்தாலும், மது விலக்கை அமல்படுத்தி, மதுவை ஒழிக்கமுடியாது எனும் போது, த.வெ.க., அரசு ஒழித்து விடுமா என்ன?
-----
கம்யூ., கட்சி வீரபாண்டியனின் அபத்தமான ஆசை!
பி.எஸ்.ரங்கஸ்வாமி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று முதல்வர் விஜய் அறிக்கை விட வேண்டும்; அது குறித்து முதல்வர் ஏன் பேசவில்லை' என்று கேள்வி எழுப்பியுள்ளார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் வீரபாண்டியன்.
விஜய் வெற்றி பெற்றதே ஞானேஷ்குமார் தலைமையில், நேர்மையாக தேர்தல் நடந்ததால் தான். அப்படியிருக்கும் போது, அவரை எப்படி பதவி விலக விஜய் வலியுறுத்துவார்?
இப்படி முதல்வர் கூற வேண்டும் என எதிர்பார்ப்பதே வீரபாண்டியனுக்கு அபத்தமாக தெரியவில்லையா?
வீரபாண்டியனுக்கு ஜலதோஷம் பிடித்தால், அவர் தான் கஷாயம் குடிக்க வேண்டுமே தவிர, அண்டை வீட்டுக்காரர்களா குடிப்பர் ?
