தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்!

 பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்!

 பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்!


PUBLISHED ON : மார் 31, 2026 03:46 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 31, 2026 03:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எல்.எம்.ராஜ், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசியலில், 'மாற்று அரசியல்' என்ற முழக்கத்துடன் களமிறங்கிய, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தற்போது, திராவிட அரசியலின் சதுரங்க ஆட்டத்தில், ஒரு தியாகியாக மாற்றப்பட்டிருப்பது, அவரது ஆதரவாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தொகுதி பங்கீட்டின் போது, தன்னிடம், 'சீட்' கேட்டு வருவோருக்கு, சீட் கொடுக்க முடியாத சூழல் வந்தால், 'தொகுதி யில் இடம் தர முடியவில்லை என்றாலும், என் இதயத்தில் என்றும் இடம் உண்டு' என்று கூறி, அனுப்பி விடுவார்.

இன்று அதே பாணியை கடைப்பிடிக்கிறார், அவரது தனயன் ஸ்டாலின்!

வெகுஜன மக்களின் மனதில் பதிந்த நட்சத்திர முகமான கமல்ஹாசனை, வெறும் இரண்டு சீட்டுகளுக்குள் சுருக்கி, அதையும், சொந்த சின்னத்தில் நிற்க விடாமல், உதயசூரியன் சின்னத்திலேயே நிற்க கட்டாயப்படுத்தியது, ஒரு கட்சியின் அடையாளத்தையே அழிக்கும் முயற்சி என்றே கூற வேண்டும்.

ஆனால், அது குறித்து கண்டுகொள்ளாமல், 'என் சகோதரனிடம் போய், எனக்கு என்ன வேண்டும் என்று கேட்பது என் சுயமரியாதைக்கே கேடு' என்று, தேர்தல் களத்தில் இருந்து ஒதுங்கிவிட்டார், கமல். உடனே, 'அடடா... என்னே ஒரு தியாகம்!' என்று அவரைப் புகழ்ந்து தள்ளி, அந்த இரண்டு தொகுதிகளையும், தங்கள் கணக்கில் சேர்த்துக் கொண்டது, தி.மு.க.,

என்னே ஒரு அரசியல் சாணக்கியத்தனம்!

அண்ணன் - -தம்பி பாசத்திற்காக கமல் எதையும் கேட்காமல் இருக்கலாம். ஆனால், அவரை நம்பி கட்சியில் இருக்கும் தொண்டர்கள் இன்று ஏமாற்றத்தில் உள்ளனரே... அவர்களுக்கு என்ன பதில் கூறப்போகிறார் கமல்?

இப்படி, 'பாசமலர்' சிவாஜி கணேசன் வேடம் தான் தனக்கு, 'சூட்' ஆகும் என்றால், எதற்கு கட்சி ஆரம்பிக்க வேண்டும்? தி.மு.க.,வில் ஒரு தொண்டனாக இணைந்திருந்தால், இதே ராஜ்யசபா பதவி கிடைத்திருக்குமே!

இப்போது, அரசனை நம்பி புருஷனை இழந்த கதையாக, கமல்ஹாசனை நம்பி சொத்துகளை விற்று கட்சி பணி செய்த தொண்டர்கள் அல்லவா நடுத்தெருவில் நிற்கின்றனர்!

தன் கட்சி தொண்டர்களின் எதிர்காலத்தை உறுதி செய்ய வேண்டிய ஒரு தலைவர், அதை செய்ய தவறியதுடன், 'பதவி முக்கியமல்ல, கொள்கை தான் முக்கியம்' என்று பூசி மெழுகுவது சரியா?

தி.மு.க.,வை எதிர்த்து கட்சி துவக்கிய போது, இந்த கொள்கை எங்கே போனது?

தி.மு.க.,வை எதிர்க்கும் போது ஒரு கொள்கை; அக்கட்சியுடன் கூட்டணி வைக்கும் போது ஒரு கொள்கை என்று சமயத்திற்கு ஏற்ப கொள்கை வேறுபடுமா என்ன?

இதற்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்!



போர் நிரந்தர தீர்வு அல்ல! எஸ்.ராதிகா, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஈரானுக்கு எதிராகப் போரை துவங்கி, இன்று, இக்கட்டான சூழலில் அமெரிக்கா தடுமாறி வருவதைப் பார்க்கும்போது, 'வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

ஈரானின் அதிரடியான பதில் தாக்குதல்கள், வளைகுடா நாடுகளில் மிகப்பெரிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.​

முக்கியமாக, உலக நாடுகளின் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்யும், 'ஹார்முஸ் ஜலசந்தி' வழியாக வரும் எண்ணெய் கப்பல்களை ஈரான் தடுத்து நிறுத்தியுள்ளது.

இதனால், உலகெங்கும் எரிபொருள் வினியோகம் பாதிக்கப்பட்டு, பொருளா தாரச் சரிவு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. ​

இச்சூழலை சமாளிக்க முடியாமல் ஜப்பான், சீனா, இலங்கை போன்ற நாடுகளிடம் உதவி கோரியது, அமெரிக்கா.

ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட தங்கள் போர்கப்பல்களை அனுப்ப வேண்டும் என, அமெரிக்கா விடுத்த கோரிக்கையை, அந்நாடுகள் நிராகரித்துவிட்டன.

இதில் வேடிக்கை என்னவென்றால், அமெரிக்காவின் பலமாக கருதப்படும், 'நேட்டோ' நாடுகளும் கைவிரித்து விட்டது தான்!

தங்கள் நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொருளாதாரச் சூழலை முன்னிறுத்தி, அமெரிக்காவின் இப்போர் முனைப்பிற்கு, ராணுவ ரீதியாக உதவ அந்நாடுகள் முன்வரவில்லை.

வல்லரசு நாடு என்று மார்தட்டிய அமெரிக்கா, இன்று ஒருபுறம் ஈரானின் ஆவேசத்தையும், மறுபுறம் நேட்டோ உள்ளிட்ட நட்பு நாடுகளின் ஒத்துழைப்பின்மையையும் கண்டு நிலைகுலைந்து நிற்கிறது.

போர் என்பது எப்போதும் தீர்வல்ல என்பதையும், ஒரு நாட்டின் ஆதிக்கத்தை மற்ற நாடுகள் கண்மூடித்தனமாக ஆதரிக்காது என்பதையும், சர்வதேச அரசியல் நகர்வுகள் மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தி விட்டன!



முகஸ்துதி மூடர்கள் அடங்குவர்! ஏ.அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகமெங்கும் பல்வேறு பகுதிகளில், 1.68 லட்சம் சுவர் விளம்பரங்கள் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.

கடை தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதையாக, அடுத்தவர் கஷ்டப்பட்டு கடனை வாங்கி வீடு, கடைகள், வணிக வளாகங்கள் கட்டினால், அதன் சுவரை அரசியல் கட்சிகளின் அடிபொடிகள் தங்கள் ஏகபோக உரிமையாக நினைத்து, 'வருங்கால நட்சத்திரமே, வாகை சூடிய வீரனே, வாளேந்தா மன்னனே, வறட்சியை போக்கிய வானமே' என்று, தங்கள் இஷ்டத்திற்கு கிறுக்கி வைக்கின்றனர்.

அதுவும், அரசு கட்டடங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் உள்ள பாலங்களின் பக்கவாட்டு சுவர்கள் என்றால், அது அவர்களது பாட்டன் வீட்டு சொத்து போல், 'இந்த சுவர் உனக்கு, அந்த சுவர் எனக்கு' என்பது போல் பங்கு பிரித்துக் கொள்கின்றனர்.

இதை கட்டுப்படுத்த எந்த அரசியல் கட்சியும் முன்வராது. காரணம், இந்த சுவர் விளம்பரங்கள் வாயிலாக, ஈயாத உலோபி கர்ணனாகவும், மூடர்கள் அரசியல் சாணக்கியர்களாகவும், ஓரிரு சீட்டுக்கு பிரதான கட்சியின் வாசலில் வீழ்ந்து கிடப்பவர்கள் மாவீரர்களாகவும் வலம் வருகின்றனரே... அந்த பொய் புகழ்ச்சி தரும் போதை அவர்களுக்கு ரொம்பவே தேவைப்படுகிறது.

அதனால், இந்த காட்டுப் பூனைகளுக்கு தேர்தல் ஆணையம் தான் கடிவாளம் போட வேண்டும். வீட்டு உரிமையாளர் அனுமதியின்றி விளம்பரம் செய்தாலோ, பொது இடங்களை இதுபோன்ற விளம்பரங்களால் அசிங்கப்படுத்தினாலோ சம்பந்தப்பட்ட கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும்.

மேலும், சுவர் விளம்பரத்தை சுத்தம் செய்ய, ஒரு சதுர அடிக்கு, 200 ரூபாய் வீதம் அபராதம் விதிக்க வேண்டும்.

அபராதம் கட்ட மறுத்தால், ஒரு சதுர அடிக்கு ஒருநாள் சிறைவாசம் என்று சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே, சுவர் விளம்பரத்தில் பொய் புகழ் காணும் அரசியல்வாதிகளும், முகஸ்துதி செய்ய சுவர்களை பயன்படுத்தும் மூடர்களும் அடங்குவர்!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us