தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ எம்ஜிஆருக்கு பக்கபலமாக இருந்த, 'தினமலர்' நாளிதழ்!

 எம்ஜிஆருக்கு பக்கபலமாக இருந்த, 'தினமலர்' நாளிதழ்!

 எம்ஜிஆருக்கு பக்கபலமாக இருந்த, 'தினமலர்' நாளிதழ்!


PUBLISHED ON : செப் 11, 2026 01:49 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 11, 2026 01:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தினமலர்' நாளிதழ் பவள விழா சிறப்பு தபால் தலையை, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சென்னையில் வெளியிட்டுள்ளார்.

இவ்விழாவில், 'தினமலர்' நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின், 'டி.வி.ஆர்., வாழ்க்கை வரலாறு' காணொளியில், '1967 முதல் 1976- வரை, தி.மு.க., அரசு, தினமலர் நாளிதழுக்கு பல்வேறு பொருளாதார நெருக்கடியை கொடுத்தது; 1977ல் எம்.ஜி.ஆர்., முதல்வராக பதவியேற்றபின்தான், நிலைமை சீரா னது' என்ற தகவல் மனதை நெகிழ வைத்தது.

'தினமலர்' நாளிதழின் பொருளாதார நிலைமை சீரானதுக்கு காரணம், அப்பத்திரிகையின் மீது எம்.ஜி.ஆர்., கொண்டிருந்த தீராத நன்றி தான்!

கடந்த 1972ல் எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.,வை துவக்கிய போது, சில நாளிதழ்கள், 'நடிகர் கட்சி' எனக் குறிப்பிட்டே செய்திகள் வெளியிட்டன.

அ.தி.மு.க.,வை முழுமையான அரசியல் கட்சியாக ஏற்றுக் கொண்ட ஒரே நாளிதழ், தினமலர் மட்டும்தான்!

அ.தி.மு.க., கட்சி அறிவிப்புகள், எம்.ஜி.ஆரின் பேச்சுகள், அறிக்கைகள் எல்லாம் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இருந்த, பி.டி.ஐ., நிறுவனம் வாயிலாக அனுப்பினாலும், அ.தி.மு.க.,வின் செய்திகள் முழுமையாக வராது.

அதனால், அ.தி.மு.க., செய்திகளுக்கு என்றே தனியாக ராஜாராம் என்ற நிருபரை நியமித்தார், டி.வி.ஆர்., சென்னை அண்ணா சிலை பாரகன் தியேட்டர் அருகில், ஒரு வீட்டின் முதல் மாடியில், ஓர் அறையை வாடகைக்கு எடுத்து, அதில் ராஜாராமை தங்க வைத்தார். கூடவே, உடனுக்குடன் செய்திகளை அனுப்ப, ஒரு டெலிபிரின்டரையும் வாங்கி கொடுத்தார்.

எம்.ஜி.ஆர்., பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் உடன் சென்று, செய்தி சேகரிக்க வேண்டும் என்றும் ராஜாராமுக்கு உத்தரவிட்டிருந்தார், டி.வி.ஆர்.,

எம்.ஜி.ஆரின் உத்தரவின்படி அ.தி.மு.க., என்ற கட்சியை முதன் முதலில் அறிவித்த அனாகாபுத்துார் ராமலிங்கத்தின் தம்பி தண்டபாணியும், நடிகர் குண்டு கருப்பையா மகன் சாமிநாதனும் அ.தி.மு.க., தலைமைக் கழக செய்திகளை சைக்கிளில் எடுத்துச் சென்று, ராஜாராமிடம் கொடுப்பர்.

அவர், செய்திகளை உடனே அனுப்ப, தினமலர் நாளிதழின் வாயிலாக தென்மா வட்டம் முழுதும், அ.தி.மு.க., குறித்த செய்தி கள் மக்களுக்கு உடனுக்குடன் கிடைத்து விடும்.

இப்படிதான், அ.தி.மு.க.,வின் கொள்கை, கோட்பாடுகளும், எம்.ஜி.ஆரின் திட்டங்களும் மக்களிடையே சென்றன.

கடந்த 1977-ல் எம்.ஜி.ஆர்., முதல்வரான பின், ஈரோடு பதிப்பு வெளியீட்டு விழாவில், 'அ.தி.மு.க.,வின் செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்த்து, நான் ஆட்சி அமைக்க பெரிதும் உதவியவர் அய்யா டி.வி.ராமசுப்பையர்; அவருக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை' என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டார், எம்.ஜி.ஆர்.,

எனவே, எம்.ஜி.ஆரின் அரசியலுக்கும், மக்களுக்கும் இடையில் ஒரு பாலமாக இருந்து, அ.தி.மு.க.,வின் வளர்ச்சிக்கு பேருதவி செய்த, 'தினமலர்' நாளிதழின் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரையும், தினமலர் நாளிதழையும், என்னைப் போன்ற எம்.ஜி.ஆர்., விசுவாசிகள் என்றென்றும் மறக்க மாட்டோம்!

கோவை ரயில்வே கோட்டம் அமையுமா?


கே.சண்முகசுந்தரம், லட்சுமி புரம், பொள்ளச்சியில் இருந்து எழுதுகிறார்:

தெற்கு ரயில்வே மிக நீண்ட காலமாக கேரள ரயில்வே அதிகாரிகளின் பிடியில் இருந்து வருவதால், பொள்ளாச்சிக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பயன்கள் சரிவர கிடப்பதில்லை.

அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்த ஓர் இயற்கை எழில் சூழ்ந்த நகரம், பொள்ளாச்சி. ஆனால், பாலக்காடு ரயில்வே கோட்ட அதிகாரிகளின் மாற்றாந்தாய் மனப்பான்மையால், இந்நகரின் ரயில் போக்குவரத்து வளர்ச்சி, செயற்கையாக தடுக்கப்பட்டு வருகிறது.

காரணம், பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளில், 22 கி.மீ., துாரம் பாலக்காடு கோட்டத்தில் இணைந்திருப்பதால்!

இதனால், மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பொள்ளாச்சி - பெங்களூர்; பொள்ளாச்சி - சென்னை விரைவு ரயில் சேவை என்பது கானல் நீராகவே உள்ளது.

பாலக்காடு கோட்டத்திலிருந்து மங்களூர் பகுதியை பிரித்து, தென்மேற்கு ரயில்வேயை சேர்ந்த மைசூர் கோட்டத்துடன் இணைக்க, ரயில்வே போர்டு முடிவு செய்திருக்கும் நிலையில், தெற்கு ரயில்வேயைச் சேர்ந்த பாலக்காடு கோட்டத்திலிருந்து பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளை, அதாவது, 22 கி.மீ., துாரமே உள்ள மிகச்சிறிய ஒரு பகுதியை மதுரை ரயில்வே கோட்டத்துடன் இணைக்க கூடாதா?

அவ்வாறு பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளை மதுரை கோட்டத்துடன் இணைக்கும் போது, கூடுதல் ரயில் சேவைகள் கிடைக்கும்; இதனால், மக்களுடன் சேர்த்து ரயில்வே ஊழியர்களும் பயனடைவரே!

சென்னைக்கு அடுத்ததாக பெரிய நகரமாகவும், மருத்துவம் மற்றும் தொழில் துறை வளர்ச்சி நிறைந்த நகரமுமாக கோவை விளங்குவதால், எதிர்கால தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் வைத்து, கோவை ரயில்வே கோட்டம் அமைய வேண்டும்.

எந்த அளவு கோட்ட எல்லைகள் குறைக்கப்படுகிறதோ, அந்தளவு ரயில்வே துறை வளர்ச்சியடையும். பயணியர் எண்ணிக்கை உயர்வதுடன், ரயில்வே துறைக்கும் வருமானம் பெருகும்.

எனவே, தமிழக முதல்வர் இதை கவனத்தில் கொண்டு, கோவை ரயில்வே கோட்டம் அமைக்க சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்!

ஆட்டோக்கள் ரசீதும் தர வேண்டும்!



ஆர்.ஜெயபிரகாஷ், சென்னையில் இருந்து எழுதுகிறார்: சென்னையில் ஆட்டோ கட்டண உயர்வுகோரி, ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன.

அவர்கள் குறைந்தபட்ச கட்டணம், 60 முதல் 70 ரூபாய் வரை கேட்கின்றனர்; பொதுமக்களோ, கட்டண உயர்வு, 50 ரூபாயாக இருக்க வேண்டும் என்கின்றனர்.

பல ஆண்டுகளாக ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படவில்லை என்பது உண்மை தான் என்றாலும், சென்னையில் எந்த ஒரு ஆட்டோ ஓட்டுநரும் மீட்டர் போட்டு கட்டணம் வாங்குவதில்லை. 1 கி.மீ., துாரம் என்றாலும், 100 ரூபாய்க்கும் குறைவாக கேட்பதில்லை.

குறிப்பாக, சென்னை எக்மோர், சென்ட்ரல் மற்றும் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் வர இரு மடங்கு கட்டணம் வசூலிக்கின்றனர்.

இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆட்டோ கட்டணங்களை உயர்த்தினால், கட்டாயம் மீட்டர் போட்டு, அதன்படி தான் கட்டணம் பெற வேண்டும் என்று அரசு உத்தரவிட வேண்டும்.

மேலும், இக்கட்டணத்திற்கான ரசீதும் இயந்திரம் வாயிலாக தர அரசு உறுதி செய்ய வேண்டும்.

அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் நியாயமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் என்பது, அசந்தால் ஆளையே முழுங்குவது போல் உள்ளது.

எனவே, ஆட் டோ கட்டணத்தை அரசு உயர்த்தினால், மீட்டர் போட்டு கட்டணத்திற்கான ரசீதை கொடுக்கும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us