PUBLISHED ON : செப் 01, 2026 12:00 AM

எஸ்.ராமச்சந்திரன், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தி.மு.க., இன்று எதிர்க்கட்சியாக அமர்ந்திருப்பதற்கு, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூ., மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளே காரணம். எங்களை போல், தனித்து போட்டியிட்டு, தி.மு.க.,வால், 50 தொகுதிகளில் வெற்றி பெற முடியுமா?' என்றும், 'சென்னையில், 16 தொகுதிகளில், 14ல் தி.மு.க., தோல்வி அடைந்துள்ளது.
கூட்டணிக் கட்சிகளின், 15 சதவீத ஓட்டுக்கள் இல்லையென்றால், இந்த இரண்டு தொகுதிகளில் கூட, தி.மு.க., வெற்றி பெற்றிருக்காது' என்று சட்டசபையில், தி.மு.க.,வை விளாசியுள்ளார், பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.
'ஆட்டுக்கு வாலை அளந்து வெச்சவன் புத்திசாலி; அவனவன் எல்லையை புரிந்து கொண்டவன் மேதாவி' என்பது போல், தமிழக வெற்றிக் கழகத்திற்கு கூட மக்கள் முழுமையான வெற்றியை தரவில்லை. 108 இடங்களைத் தான் தந்துள்ளனர்.
தி.மு.க., கூட்டணியில் நின்று வென்ற காங்கிரஸ், வி.சி.க., முஸ்லிம் லீக் கட்சிகளின் தயவில் தான், தற்போது, த.வெ.க., ஆட்சியில் அமர்ந்துள்ளது.
அதனால், த.வெ.க., அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும் வெற்றி குறித்து பெருமை கொள்ளாமல், எதிர்க்கட்சிகளின் தோல்வியை ஏளனம் செய்யாமல், தங்களுக்கு கிடைத்துள்ள வெற்றியை ஆக்கப்பூர்வமான செயல்களை செய்து, மக்கள் மனதில் நிரந்தர இடத்தை பிடிக்க முயற்சி வேண்டுமே தவிர, எதிர்க்கட்சிகளை ஏளனம் செய்வதில் நேரத்தை செலவிடக் கூடாது.
நிலை உயரும்போது பணிவு வேண்டும்; அதுதான் மற்றவர்கள் மத்தியில் நமக்கான மதிப்பை பல மடங்கு உயர்த்தும். அதைவிடுத்து, பெருமையில் திளைத்துக் கொண்டிருப்பது செயல்களை தான் பலவீனப்படுத்தும்!
------
தவறுகளை எப்போது ஒத்துக்கொள்ள போகிறீர்கள்?
சி.ஸ்ரீதேவி, பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளாவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தி.மு.க., பார்க்காத வெற்றியும் இல்லை; தோல்வியும் இல்லை. தேர்தலில் தான் தோல்வி அடைந்திருக்கிறோமே தவிர, நிரந்தரமாக அல்ல' என்று, தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
ஸ்டாலின் பேச்சு கேட்க நன்றாகத் தான் இருக்கிறது; ஆனால், தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல், 'தி.மு.க.,வுக்கு ஓட்டு போடாதவர்களுக்கு நல்ல சாவே வராது' என்று தி.மு.க.,வினர் வசைபாடுவது ஏன்?
இதற்கு முன் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்ற போதெல்லாம், ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மீது குறை சொல்லாமல், மகிழ்வுடன் வெற்றியை ஏற்றுக்கொண்ட ஸ்டாலின், இப்போது தோல்விக்கு மட்டும் ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மீது பழி சொல்லி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது ஏன்?
'தி.மு.க.,வின் தோல்விக்கு பல காரணங்கள் உண்டு; அதில் நிர்வாகிகளின் செயல்பாடுகளும் ஒன்று. தனி மனிதர்களின் தவறுகள், 75 ஆண்டு கட்சியை பாதிக்கின்றன' என்றும் கூறியுள்ளார், ஸ்டாலின்.
கடந்த 2021 சட்டசபை தேர்தல், 2019 மற்றும் 2023 ஆண்டுகளில் நடைபெற்ற பார்லிமென்ட் தேர்தல்களில் கிடைத்த வெற்றிக்கு, உதயநிதியின் உழைப்பு தான் காரணம் என்று பலரும் புகழ்ந்தீர்கள். அப்படியிருக்கும் போது இப்போதைய தோல்விக்கு மட்டும் நிர்வாகிகள் மீது பழி சுமத்துவது நியாயமா?
தி.மு.க.,வில் உழைப்பவர்கள் பல ஆண்டுகளாக உழைத்துக் கொண்டே இருக்க, கட்சி தலைவரின் மகன் என்பதற்காக உதயநிதிக்கு அமைச்சர், துணை முதல்வர் பதவிகளை அள்ளிக் கொடுத்து அழகு பார்த்ததும் கூட, கட்சி தலைவர் என்ற தனிமனிதரின் தவறு தானே?
சனாதன தர்மத்தை ஒழிக்கப் போவதாக கூறி, ஹிந்துக்களின் வெறுப்பை சம்பாதித்தது, உதயநிதி என்ற தனி மனிதர் செய்த தவறு தானே?
இப்போதும் கூட, தி.மு.க.,வில் எத்தனையோ திறமையான, அனுபவமிக்க பலர் இருக்க, எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவியை உதயநிதிக்கு தானே வழங்கியுள்ளார், ஸ்டாலின்!
'நம் தவறுகளை, முதலில் நாம் வெளிப்படையாக ஒத்துக்கொள்ள வேண்டும்' என்று கூறியுள்ள முன்னாள் முதல்வரே... உங்கள் தவறுகளை ஒத்துக்கொண்டு, அதில் எப்போது மாற்றம் செய்யப் போகிறீர்கள்?
-----
சூழ்ச்சிக்கு இரையாகாதீர்கள்!
க.சண்முகசுந்தரம், பொள்ளாச்சியில் இருந்து எழுதுகிறார்: சமீபத்தில், 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக, டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில், மாணவர் போராட்டம் நடந்தது. இதில் தேச விரோத சக்திகள் உட்புகுந்து, சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக காவலர்களை கண்மூடித்தனமாக தாக்கியதில், நுாற்றுக்கும் மேற்பட்டோர் காவலர்கள் படுகாயமடைந்தனர்.
ஆனால், அவர்களுக்கு பரிந்து பேச இங்கு எவரும் இல்லை. ஆனால், கூட்டத்தை கலைக்கவும், வன்முறை வெறியாட்டத்தை தடுக்கவும் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையை விமர்சித்து, அதில் அரசியல் ஆதாயம் தேடுகின்றனர், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர்.
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக, காங்கிரசை நம்பிய மக்கள், அவர்கள் கைகளில் நாட்டை கொடுத்திருந்தனர்.
அவர்கள் என்ன செய்தனர்...
தங்கள் குடும்பத்தை வளப்படுத்த, காங்., தலைவர்கள் பலர், அன்னிய சக்திகளுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து வந்தனர்.
கடந்த 2014க்கு பின் தான், நாடு உண்மையான வளர்ச்சி பாதைக்கு திரும்பியது. இன்று உலக நாடுகள் வியப்புடன் பார்க்கும் வகையில் இந்தியா அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை நோக்கி செல்கிறது.
மத்தியில் உள்ள பா.ஜ., ஆட்சியை தங்களால் அகற்ற முடியாது என்பதை உணர்ந்து, எதிர்க்கட்சியினர் மாணவர்கள் போர்வையில், கரப்பான் பூச்சி என்ற இயக்கத்தை பின்புறம் இருந்து இயக்கி வரு கின்றனர்.
வரும் 2029 பார்லிமென்ட் தேர்தலில், கரப்பான் பூச்சி இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி, அதனுடன் கூட்டணி வைத்து ஆட்சியை கைப்பற்றவும் திட்ட மிடுகின்றனர்.
இவர்கள் கைகளில் நாடு சென்றால், மீண்டும், 100 ஆண்டுகளுக்கு பின், நம் நாட்டின் வளர்ச்சி சென்று விடும் என்பது சர்வ நிச்சயம்.
மக்கள் தான் இந்த சூழ்ச்சி வலைக்குள் சிக்காமல், உண்மையிலேயே எவர் இந்நாட்டின் மீது பற்றுக் கொண்டு நாட்டின் வளர்ச்சிக்காக பாடு பாடுபடுகிறாரோ அவருக்கு ஓட்டளித்து, நாட்டை தீய சக்திகளின் பிடியிலிருந்து காக்க வேண்டும்!
