தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/  ராகுல் போற்றும் பெண் உரிமை!

 ராகுல் போற்றும் பெண் உரிமை!

 ராகுல் போற்றும் பெண் உரிமை!


PUBLISHED ON : ஆக 31, 2026 12:36 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 31, 2026 12:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கே.என்.ஸ்ரீதரன், கலிபோர்னியா மாகாணம், அமெரிக்காவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

மஹாராஷ்டிராவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், 'ஒரு பெண், சிறுவயதில் தந்தையின் கட்டுப்பாட்டிலும், இளமையில் கணவன் மற்றும் முதிய வயதில் மகனின் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டும்; அவள் ஒருபோதும் சுதந்திரமாக இருக்கக் கூடாது' என்று, ஹிந்து மத நுாலான, 'மனுஸ்மிருதி'யில் சொல்லப்பட்டுள்ளது. இது, வெட்கக்கேடானது. பெண்கள் இந்த அடிமை விலங்கை உடைத்து வெளியே வரவேண்டும்' என்று பேசியுள்ளார், காங்கிரஸ் எம்.பி., ராகுல்.

ஒரு பெண் மகளாக, மனைவியாக, தாயாக இருப்பது அந்த பெண்ணின் அடையாளம்; இது எப்படி அடிமைத்தனம் ஆகும்?

பெண்களின் முன்னேற்றத்துக்கு இந்த அடையாளம் எப்படி தடையாக இருக்க முடியும்?

கல்விக்கு சரஸ்வதி, செல்வத்துக்கு லட்சுமி, வீரத்துக்கு துர்கா என்று பெண் தெய்வங்களை வழிபட வைத்தது தான், சனாதன தர்மம்.

நவீன இந்தியாவில் பெண்கள் உயர் பதவிகளிலும், ஏன் ராணுவத்திலும் கூட பணிபுரிந்து வருகின்றனர். இன்று பெண் உரிமைக்கு குரல் கொடுக்கும் ராகுலுக்கு, 1985ல் இவர் தந்தை ராஜிவ் ஆட்சியில் நடந்த, ஷா பானு வழக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை!

மத்திய பிரதேசம் இந்துாரை சேர்ந்த, 62 வயது ஷா பானுவை, அவரது கணவன், மூன்று முறை, 'தலாக்' கூறி விவாகரத்து செய்தார். அவர், தனக்கும், தன் ஐந்து குழந்தைகளுக்கும் ஜீவனாம்சம் தரக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். நீதிமன்றமும் அப்பெண்ணுக்கு மாதந்தோறும் , 500 ரூபாய் வழங்க உத்தரவிட்டது.

அதை எதிர்த்து, அவரது கணவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, 'சி.ஆர்.பி.சி., சட்டப்பிரிவு 125 என்பது, மதம் கடந்து அனைத்து பெண்களுக்கும் பொருந்தும்; விவாகரத்து பெற்ற பெண் மறுமணம் செய்யும்வரை அவருக்கு ஜீவனாம்சம் தர வேண்டியது கணவரின் கடமை' என்று கூறி, தீர்ப்பு வழங்கியது.

அப்போது மத்தியில், 400க்கும் அதிகமான இடங்களுடன் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்தார், ராஜிவ்.

ஆரம்பத்தில் இத்தீர்ப்பை வரவேற்ற ராஜிவ், முஸ்லிம் பழமைவாதிகள் இத்தீர்ப்பை எதிர்த்து போராட்டம் நடத்தவே, இஸ்லாமியர்களின் ஓட்டு வங்கியை இழந்து விடுவோமோ என்று பயந்து, 'முஸ்லிம்களைச் சீர்திருத்துவது காங்கிரஸின் வேலையல்ல' என்று கூறி, 'முஸ்லிம் பெண்கள் விவாகரத்து உரிமைகள் பாதுகாப்பு சட்டம், 1986' என்ற சட்டத்தை பார்லிமென்டில் நிறைவேற்றினார்.

இச்சட்டத்தின்படி, விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண்ணுக்கு, அவர் கணவர், மூன்று மாதங்களுக்கு மட்டுமே ஜீவனாம்சம் தர வேண்டும். அதன்பின், அப்பெண்ணை பராமரிக்கும் பொறுப்பு, அவரது உறவினர்களுக்கோ அல்லது வக்ப் வாரியத்திற்கோ உரியது!

இப்படி ஒரு சட்டம் இயற்றி, உச்ச நீதிமன்றம் இஸ்லாமிய பெண்களுக்கு வழங்கிய ஜீவனாம்ச உரிமையை, ஓட்டு வங்கி அரசியலுக்காக காவு கொடுத்த கட்சி தான், காங்.,

அதனால், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனுஸ்மிருதியை நினைத்து ராகுல் வெட்கப்படுவதை காட்டிலும், ஓட்டு வங்கிக்காக இஸ்லாமிய பெண்களுக்கு கிடைக்க இருந்த உரிமையை தடுத்த தன் தந்தை ராஜிவ் குறித்து வெட்கப்பட வேண்டும்!

சமீபத்தில், கர்நாடக காங்., அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட போது, அதில் ஒரு பெண்ணுக்கு கூட அமைச்சர் பதவி கொடுக்கவில்லை.

இதுதான் ராகுல் போற்றும் பெண் உரிமையோ?

குற்றங்களை தடுக்க உதவும்!


அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 'சி.சி.டி.வி.,' கேமராக்கள் விரைவில் பொருத்தப்பட்டு, பள்ளிகளின் செயல்பாடுகள் கண்காணிப்பு செய்யப்படும்' என்று சட்டசபையில் கூறியுள்ளார், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்.

தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பறையிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் தாளாளர் களால் கண்கா ணிப்பு செய்யப்படுகிறது.

ஆனால், அரசுப் பள்ளி களில் இதுபோன்று வசதி இல்லாததால், மாணவியர் மீதான பாலியல் அத்துமீறல்கள், ஆசிரியர்கள் மீதான தாக்குதல்கள், மாணவர்களிடையே ஜாதி ரீதியான மோதல்களை ஆரம்பத்திலேயே கண்டறிய முடிவதில்லை.

தற்போது, ஒவ்வொரு பள்ளியின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள், நடைபாதைகள் என, நான்கு எல்லைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை கூறியுள்ளது.

அதையே, ஒவ்வொரு வகுப்பறைகளிலும் பொருத்த வேண்டும்.

அப்போதுதான், ஆசிரியர்கள் மற்றும் மாண வர்கள் தங்கள் கடமையை சரிவர செய்கின்றனரா என்பதையும், வகுப்பறையில் நடக்கும் ஒழுங்கீனமான செயல்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுக்க முடியும்.

இந்த, 'சி.சி.டி.வி.,' கேமராக்கள் பள்ளிகளில் பொருத்தப்பட்டு, பள்ளிக் கல்வித்துறையின் நேரடிக் கண்காணிப்பு மையம் வாயிலாக கவனிக்கப்படும் என்று கூறியுள்ளது, பள்ளிகளில் நிகழும் பல குற்றங்களை தடுக்க உதவும். மாணவர்களும் பாதுகாப்பாக கல்வி கற்பர்; பெற்றோரும் நிம்மதியாக இருப்பர்!

முறைகேடுகள் இருக்காது


! வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன், தன் பணிக்காலத்தில் தேர்தல் ஆணையத்தில் பல அதிரடி மாற்றங்களை செய்தவர்.

தேர்தல் கமிஷனின் அதிகாரங்கள் என்னவென்று மக்களுக்கு பறைசாட்டியவர்; அவரது அதிரடி நடவடிக்கைகளை கண்டு, வேட்பாளர்கள் தவறு செய்யத் தயங்கினர். இன்று கூட, தேர்தல் கமிஷன் என்றால், சட்டென்று பெரும்பாலோருக்கு ஞாபகத்திற்கு வருவது சேஷனின் பெயரே!

அதேபோன்று, மறைந்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்; மிகவும் கண்டிப்பானவர்; தவறுகளின் பக்கமே போக மாட்டார், கர்ம வீரர் காமராஜரைப் போல்!

இந்த வரிசையில், இப்போது சேர்ந்திருப்பவர், மஹாராஷ்டிரா மாநிலத்தின் உணவு மற்றும் மருந்து நிர்வாக கமிஷனரும், ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான துக்காராம் முண்டே!

இவர் எவருக்கும் பயப்படாமல், பிரபல உணவு நிறுவனங்கள் மீது திடீர் ஆய்வுகள் மேற்கொண்டு, கலப்படம், சுத்தம், சுகாதாரமின்மை குறைபாடுகளை வெளியே கொண்டு வந்துள்ளார்.

துரதிருஷ்டவசமாக, இந்தியாவில் நேர்மையாக பணிபுரிவோர் பல சிரமங்களை எதிர் கொள்ள நேரிடுகிறது. அதன்படியே துக்காராம் முண்டேயும், தன், 20 ஆண்டு பணியில், 25 முறை பணி இட மாற்றங்களை சந்தித்துள்ளார்.

அனைத்து அரசு அலுவலர்களுமே, சேஷன், துக்காராம் போல் பணியாற்றினால், இந்நாட்டில் ஊழல் மற்றும் முறைகேடுகள் என்பதே இருக்காது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us