PUBLISHED ON : பிப் 10, 2025 12:00 AM

கு.காந்தி
ராஜா, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'வேங்கை வயலில்
நீதி கிடைக்காவிட்டால், அப்பகுதி மக்கள் மதம் மாறுவதை தவிர வேறு வழியில்லை'
என்று, தன் வேடத்தைக் கலைத்து உண்மை முகத்தை வெளிப்படுத்தியுள்ளார்,
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்.
இவர், தலித்
முன்னேற்றத்திற்கான தலைவர் அல்ல; அவர்களை மதம் மாற்ற, இஸ்லாமிய - கிறிஸ்துவ
அமைப்புகளுக்கு வேலை செய்யும் ஏஜன்ட் என்பது, இதன் வாயிலாக வெட்ட
வெளிச்சமாகி விட்டது.
வேங்கைவயல் பிரச்னையில் நீதி கிடைக்கவில்லை என்றால், தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வோம் என்று சொல்ல வேண்டியது தானே...
அப்படிச்
சொன்னால், தி.மு.க., தயவால் கிடைத்த எம்.பி., - எம்.எல்.ஏ., அதிகாரம், பண
பலன்கள் கிடைக்காமல் போய்விடுமே, எப்படி சொல்வார்? அதற்குப் பதிலாக,
அப்பாவி மக்களை மதம் மாற்றினால், இரட்டிப்பு லாபம் என்று நினைத்து விட்டார்
போலும்!
இன்று, நீலிக்கண்ணீர் வடிக்கும் இவர், இப்பிரச்னை நடந்து
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், அம்மக்களுக்கு நேர்ந்த கொடுமைக்காக,
எத்தனை முறை போராட்டங்கள் நடத்தினார்? தி.மு.க., அரசுக்கு ஏதாவது அழுத்தம்
கொடுத்தாரா?
வி.சி., - எம்.எல்.ஏ.,க்கள் இதுகுறித்து சட்டசபையில்
எத்தனை முறை பேசினர்? இப்பிரச்னையை பார்லிமென்ட் கொண்டு சென்றாரா,
சி.பி.ஐ., விசாரணை வேண்டி கோரிக்கை வைத்தாரா?
தன் இன மக்களுக்கு, திருமா என்ன செய்தார்?
சீட்டுக்கும், நோட்டுக்கும் பெட்டிப் பாம்பாய் அடங்கி, ஸ்டாலின் காலடியில் தானே கிடக்கிறார்!
பாதிக்கப்பட்ட
மக்களே இன்று குற்றவாளிகளாக ஆக்கப்பட்டுள்ளனர்... இப்போதும், தி.மு.க.,
அரசின் அராஜகப் போக்கை கண்டிக்க துணிவில்லை. மாறாக, காவல் துறையை
கைகாட்டிவிட்டு, அக்கட்சியோடு ஒட்டி உறவாடுகிறார்.
நிகழ்ந்த
கொடுமைக்கு எதிராக எதுவுமே பேசாமல், செய்யாமல் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல்
அடிமை போல இருந்துவிட்டு இப்போது, கிறிஸ்துவ மிஷினரிகளின் கைக்கூலியாக,
மதமாற்றம் தான் தீர்வு என்கிறார்.
எல்லா பிரச்னைக்கும் மதமாற்றம் தான் தீர்வு என்றால், தன்னை தலித்துகளின் காவலன் என்று சொல்லிக் கொண்டு திருமா எதற்கு இருக்கிறார்?
தனித்தொகுதியில் நின்று கல்லா கட்டவா?
கட்சி
துவங்கி எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன; இதுவரை அம்மக்களின் வாழ்வாதாரத்தை
உயர்த்த ஒன்றும் செய்யவில்லை. ஆனால், இன்று, இம்மண்ணோடு கலந்த அம்மக்களின்
இன அடையாளத்தை அழிக்கும் வேலையில் இறங்கியுள்ளார்.
இவரா தலித்துகளின் தலைவர்?
மதுரைக்காரர்களிடம் கதை விடாதீர்!
ஜி.ரங்கநாதன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மதுரையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறித்து, அம்மாவட்ட கலெக்டர் சங்கீதா புதிதாக ஒரு கதை சொல்லியுள்ளார்.
பொதுவாக, கலெக்டர்கள் தங்கள் மாவட்ட பணிகளை சிறப்பாக செய்வதிலும், புகார் எதுவும் இல்லாத வகையில் பணியாற்றுவதிலும் தான் கவனம் செலுத்துவர். ஆனால், தமிழகத்தில் ஆட்சி செய்வது திராவிட மாடல் அரசு அல்லவா... ஆகவே, '144 தடை உத்தரவு குறித்து மதுரை மக்களுக்கு கதை ஒன்று சொல்லுங்கள்' என பணித்திருப்பர் போலும்!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடந்ததாகவும், அதில் பங்கேற்ற கட்சியினரும், மக்களும், 'வெளி ஆட்களை அனுமதிக்காதீர்கள்; உள்ளூர் மக்கள் மதநல்லிணக்கமாக, ஒற்றுமையாக உள்ளோம்' என்றனராம்... அ.தி.மு.க., அந்த விண்ணப்பத்தில் கையெழுத்திடவில்லையாம்; ஆனாலும், சம்மதம் தெரிவித்தனராம். பா.ஜ., மட்டுமே பங்கேற்கவில்லை. அதனால்தான் வெளியூர் நபர்களை தடுக்க, பிப்., 3 - 4 என இரு நாட்கள்,144 தடை உத்தரவு பிறப்பித்தாராம்!
நீதிமன்ற உத்தரவு பெற்ற ஒரு மணி நேரத்தில், லட்சக்கணக்கான மக்கள் கூடினரே... வெளியூரிலிருந்து அவ்வளவு பேர் ஒரே நேரத்தில் வர முடியுமா என்பதைக் கூட அறியாமல், 'உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்; தடை உத்தரவு பிறப்பித்தேன்' என்று கதையளக்கிறார், கலெக்டர்.
சரி... 144 தடை உத்தரவு இருக்கும்போது, அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு நடந்த ஊர்வலத்துக்கு மட்டும் எப்படி அனுமதி கொடுத்தாராம்... அந்த நேரத்திற்கு மட்டும் தடை உத்தரவை நீக்கி விட்டாரோ?
இந்த அக்கறையை, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின்ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி மற்றும் அவர் கட்சியை சார்ந்தோர் மலையில் அசைவ உணவு சாப்பிட்டபோது, அதை தடுப்பதில் காட்டியிருந்தால், இந்த ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்து இருக்காதே!
கலெக்டர் சங்கீதா, தமிழகத்தில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் கதை விடலாம்; ஆனால் மதுரையில் விடாதீர்கள். அது, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இடம்; மதுரைத்தமிழன் அஞ்சா நெஞ்சன். தன் உயிரினும் மேலாய், தன் மொழியையும், மதத்தையும் நேசிப்பவன் என்பதை மறந்து விடாதீர்கள்!
தோல்வியை சந்திக்க நேரிடும்!
என்.தொல்காப்பியன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வரும் 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சிக்கு வர, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'ஐடியா திலகம்' பிரசாந்த் கிஷோரிடம் ஆலோசனை கேட்கப் போகிறாராம்; 400 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டிருக்கிறதாம்.
இதுகாறும் அவர் கொடுத்த ஐடியாவில், மத்தியில், பா.ஜ., பீஹாரில் நிதிஷ், மேற்கு வங்கத்தில்மம்தா, தமிழகத்தில் ஸ்டாலின் ஆகியோர் ஆட்சியைப் பிடித்திருக்கின்றனர்; உண்மைதான்!
ஆனால், அந்த ஐடியா திலகம், 'ஜன் சுராஜ்' என்ற கட்சியைத் துவக்கி, பீஹார் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, படுதோல்வி அடைந்து விட்டாரே?
இப்பேர்பட்டவரிடம் ஐடியாக்கள் கேட்டால், சட்டசபை தேர்தலில், பழனிசாமி எப்படி ஆட்சிக்கு வர முடியும்?
ஆறு மாதங்கள் தமிழகம் முழுதும் சுற்றி வந்து சூறாவளி பிரசாரம் செய்யவும், பழனிசாமி திட்டமிட்டிருக்கிறாராம்.
என்னதான் சூறாவளி பிரசாரம் செய்தாலும், பலமான கூட்டணி இன்றி, ஒரு பருப்பும் வேகாது.
ஜெயலலிதா போல, தானும் செல்வாக்கு பெற்ற தலைவர் என, பழனிசாமி நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், நிதர்சனத்தை புரிந்து கொண்டால், கூட்டணியை பலமாக அமைத்தால், வெற்றி பெறலாம். இல்லையேல், தி.மு.க., அமைத்துள்ள பலமான கூட்டணி முன், தோல்வியைத் தான் சந்திக்க நேரிடும்.

