PUBLISHED ON : அக் 16, 2025 12:00 AM

'மாடலிங்' துறையில் கலக்கும், திருச்சியைச் சேர்ந்த திருநங்கை ரியானா சூரி: சொந்த ஊர் திண்டுக்கல். பள்ளியில் படிக்கும்போதே என் பாலின மாற்றத்தை உணர்ந்து விட்டேன். ஆனால், என் கல்வி பறிபோய்விடக் கூடாது என, வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.
திருச்சி, செயின்ட் ஜோசப் கல்லுாரியில் இளங்கலை முடித்தேன். கல்லுாரியில் படித்தபோது, நாட்டியத்தில் நுண்கலை படிப்பையும் முடித்தேன். கரகம், காவடி, ஒயில், பறை, சிலம்பம் போன்ற கிராமிய கலைகளையும் கற்றேன்; அதன்பின், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு நடன வகுப்பு எடுத்தேன்.
முதுகலை படிப்பை தொடர்ந்தபோது, அப்பா இறந்து விட்டார். பொருளாதார தேவைக்காக, வேலைக்கு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது என்னை நான் வெளிப்படுத்தியதால், வீட்டில் பிரச்னை ஏற்பட்டது. ஆனாலும், காலச்சூழல் என்னை ஏற்றுக்கொள்ள வைத்தது.
கொரோனா காலத்தில், சக திருநங்கையருடன் சேர்ந்து, 'திரு அவள்' என்ற அமைப்பை தொடங்கி, திருநங்கையருக்கு கல்வி, உணவு போன்ற சமூக சேவைகளை செய்தோம். கொரோனாவிற்கு பின், 'திரு அவள் சுவையான உணவகம்' என்ற பெயரில், தள்ளுவண்டி கடை ஆரம்பித்தோம். பின், 'கேட்டரிங் பிசினஸ்' ஆரம்பித்தோம்.
அடுத்து, 'மாடலிங்' துறையில் இறங்கினேன். 'மிஸ் திருச்சி 2022' போட்டியில், 14 பெண்களுடன் நானும் பங்கேற்றேன். எனக்கு இரண்டாவது இடம் கிடைத்தது.
பெண்களுக்கான போட்டியில் வெற்றி பெற்றது மிகவும் உற்சாகமாக, உத்வேகமாக இருந்தது. அதே ஆண்டு டில்லியில் நடந்த, 'மிஸ் டிரான்ஸ் குயின் இந்தியா' போட்டியில் தமிழகத்தின் சார்பாக கலந்து கொண்டேன்.
இதில், 'மிஸ் டேலன்ட், சவுத் இந்தியா அம்பாசிடர்' ஆகிய இரண்டு பட்டங்களை பெற்றேன்.
கூத்தாண்டவர் கோவிலில் நடந்த, 'மிஸ் கூவாகம் 2022' போட்டியில் பங்கேற்று, இரண்டாம் இடம் பிடித்தேன். 'மிஸ் யுனிவர்ஸ் டிரான்ஸ் இந்தியா 2023'லும் வென்றேன்.
இப்போது, பாரம்பரிய முறையில் மூலிகை குளியல் பொடி தயாரித்து விற்பனை செய்கிறேன்.
கடந்த மாதம் கம்போடியாவில் நடந்த, 'மிஸ்டர் அண்டு மிஸ் மெஜஸ்டிக் இன்டர்நேஷனல்' போட்டிக்கு இயக்குநராக என்னை தேர்ந்தெடுத்தனர். அதில், இந்தியா சார்பாக திருநம்பி, திருநங்கை மாடல்களை தேர்வு செய்யும் பொறுப்பு என்னுடையது.
பொது சமூகம் எங்களை இயல்பாக ஏற்றுக் கொண்டால், எங்களாலும் பிழைக்க முடியும். ஆதரவு தந்தால் தான் முன்னேற முடியும்.
அடிப்படை உரிமைகள் முதல் வாழ்வதற்கான வாய்ப்புகள் வரைக்கும், எங்களை கடுமையாக போராட விடாதீங்க!