/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
அதிகாரிகளின் தில்லாலங்கடி வேலைகள்!
/
அதிகாரிகளின் தில்லாலங்கடி வேலைகள்!
PUBLISHED ON : அக் 07, 2025 12:00 AM

க.சிவக்குமார், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நாடு முழுதும் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும்படி 2020ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. அமைக்கப்பட்டுள்ள, 'சிசிடிவி' கேமராக்களிலும் ஒலியை பதிவு செய்யும் வசதி இல்லை. பல நேரங்களில் கேமராக்கள் செயல்படாமல் உள்ளன. காரணம் கேட்டால் தொழில்நுட்ப கோளாறு என்கின்றனர் போலீசார். 'சிசிடிவி' பழுதுபடாமல் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...' என்று கூறியுள்ளனர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.
கடந்த, 27 ஆண்டுகளாக, 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தும் பணியில் வல்லுநராக உள்ளேன் என்பதால், இதை கூறுகிறேன்...
பொதுவாக ரெக்கார்டர்கள் செயல் இழந்தாலும், 'ஹார்டு டிஸ்க்' எனப்படும் பதிவுகள் உள்வாங்கும் கருவி உள்ளது. அதுவும் செயலிழந்தால், 'கிளவுட் ஸ்டோரேஜ்'ல் பதிவுகளை சேமிக்கலாம்.
இத்தனை வசதிகள் இருந்தும், ஒரு பிரச்னை என்றதும் 'சிசிடிவி' கேமராக்கள் செயல் இழந்து விட்டது என்று கூறுகின்றனர் என்றால், அது வெறும் சப்பை கட்டு தான்!
அரசுத் துறை அலுவலகங்களில் கேமரா பொருத்திய அனுபவம் உள்ளதால் சொல்கிறேன்... அங்கு உயரதிகாரிகள் தங்கள் முகமோ, பணிபுரியும் இடமோ பதிவாகதபடி தான் பொருத்த சொல்வர்.
காவல் நிலையங்களில் ஆய்வாளர்களுக்கு சாதகமாக கேமராவை மட்டும், 'ஆன், ஆப்' செய்ய தனி சுவிட்ச் பொருத்தி, அவர்கள் வசதிக்கேற்ப, 'ஆன், ஆப்' செய்து கொள்வர்.
தனக்கோ, தன் காவல் நிலையத்திற்கோ களங்கம் வரும் வேளையில், மொத்தமாக செயலிழக்கச் செய்தும், மெயின் சுவிட்சை, 'ஆப்' செய்தும் விடுவர்.
இப்படி, 'ஊருக்கு தான் உபதேசம்; உனக்கு இல்லை' என்ற வாசகத்திற்கு ஏற்ப, காவல்துறையின் வசதிக்குத் தான், 'சிசிடிவி'யே தவிர, காவல் துறைக்கு இல்லை.
இந்நிலையில், 'சிசிடிவி' கேமராவை பழுதுபடாமல் இயக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மனித தலையீடே இல்லாமல் கட்டுப்பாட்டு அறையை உருவாக்கினால் பிரச்னைக்கு தீர்வாகும் என, உச்ச நீதிமன்றம் கருதுகிறது.
என்னதான், செயற்கை நுண்ணறிவான, 'ஏ.ஐ' தொழில்நுட்பம், ஐ.ஐ.டி., சாப்ட்வேர் தொழில்நுட்பம் உபயோகப்படுத்தினாலும், தமாசு நடிகர் வடிவேல் ஒரு படத்தில், 'அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்' என்று கூறுவது போல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்லும் மின்விநியோகத்தை தடை செய்தாலே போதும்; அனைத்து கேமிராக்கள், ரெக்கார்டர்கள், சர்வர்களை செயலிக்க செய்யலாம்.
இதில், ஏ.ஐ., தொழில்நுட்பமாவது, ரோபோ கண்காணிப்பாவது?
திருடராய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது!
lll
இதுவும் நாட்டிற்கு செய்யும் சேவை தான்! எஸ்.ஸ்ரீனிவாசன், சென்னையில்
இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் நாடு சுயசார்பு அடைவதற்கான
பல்வேறு முயற்சிகளையும், அதற்கான திட்டங்களையும் வகுத்துக்
கொண்டிருக்கிறார், பிரதமர் மோடி.
முக்கியமாக, 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் வாயிலாக, நமக்கு வேண்டிய பொருட்களை நம் நாட்டிலேயே தயாரிக்க வேண்டும்.
இதன் வாயிலாக, எதிர்காலத்தில் இந்தியா, தனக்கு வேண்டிய அனைத்தையும் தானே
உற்பத்தி செய்து கொள்ளும் திறனை பெறும். எந்த நாட்டையும் சாராமல் சுயமாக
முன்னேறக் கூடிய திறமையையும் பெறும்.
இன்று இந்தியர்களின்
வாங்கும் திறன் பல மடங்கு அதிகரித்துள்ளது. அப்படி வாங்கக்கூடிய பொருள்கள்
அனைத்தும் நம் நாட்டு தயாரிப்பாக இருக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின்
முக்கிய நோக்கம்.
இத்திட்டம் நிறைவேற, மூன்றாவது துாண் என்று
வர்ணிக்க கூடிய ஊடகங்களும் துணை நிற்க வேண்டும். அவ்வகையில், 'தினமலர்'
நாளிதழ் பிரதமரின் திட்டத்திற்கு உறுதுணையாக, 'அரட்டை' என்ற இந்திய
செயலிக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதை மக்களிடையே கொண்டு சேர்க்க முயற்சி
எடுத்துள்ளது.
வெளிநாட்டு தயாரிப்பான, 'வாட்ஸாப்' செயலியை
இந்தியாவில் பல கோடி பேர் பயன்படுத்துகின்றனர். அதன்வாயிலாக வரும் வருமானம்
முழுதும் வெளிநாடுகளுக்கே சென்று விடுகிறது.
மாறாக, நம் இந்திய
தயாரிப்பான, 'அரட்டை' யை மக்களிடையே பிரபலப்படுத்தினால், அந்த வருமானம் நம்
நாட்டிற்குள் இருக்கும்; அப்பணம், இங்கு பல வேலை வாய்ப்பையும்
உருவாக்கும்.
இன்று பல லட்சம் பேர், 'அரட்டை' செயலியை
பின்பற்றுவதற்கு 'தினமலர்' பத்திரிகையின் இத்தகைய முன்னெடுப்புகளும் ஒரு
காரணமாக அமைந்துள்ளது.
இதுபோன்று ஒவ்வொருவரும், நம் நாட்டு
தயாரிப்பு பொருட்களை பயன்படுத்த துவங்கினால், விரைவில் நம் நாடு தற்சார்பு
பொருளாதாரத்தில், பிற நாடுகளால் அசைக்க முடியாத சக்தியாக வலுப்பெற்று
விடும்.
எனவே, நாட்டிற்கு செய்யும் சிறு சேவையாக, நம் தயாரிப்பு
பொருட்களை வாங்கி, நம் நாட்டின் தொழில் வளத்தை பெருக்கி, அதன்வாயிலாக
நாமும் வளம் பெறுவோம்!
lll
பழைய ஓய்வுதியம் எப்போது?
எஸ்.செபஸ்டின், சிவகாசியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய
திட்டத்தை அமல்படுத்துவதாக கூறி, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில்
அமர்ந்தது, திராவிட மாடல் அரசு.
ஆனால், ஆட்சியில் அமர்ந்தபின் அது குறித்து கண்டுகொள்ளவில்லை. கேட்டால் நிதி பற்றாக்குறை என்று கதை கூறுகின்றனர்.
அரசின் நிதி நிலைமையை ஆராய்ந்து பார்த்து, தாங்கள் தேர்தல் அறிக்கையில்
கூறிய வாக்குறுதிகளில் எதை செய்ய முடியும், எதையெல்லாம் செய்ய முடியாது என
ஆய்வு செய்து, செய்ய முடியாததற்கு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரி,
தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு, மறு தேர்தலை அறிவித்திருக்க
வேண்டும்.
அதை விடுத்து, நான்கரை ஆண்டுகளாக தாங்கள் கொடுத்த
வாக்குறுதிகளை கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு, 2026 தேர்தலை முன்னிட்டு,
ஐ.ஏ.எஸ்., அதிகாரி ககன்தீப் சிங் பேடியின் தலைமையில் ஓர் ஆய்வுகுழு
அமைத்து, தற்காலிக அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது, தி.மு.க., அரசு.
கைப்புண்ணைப் பார்ப்பதற்கு கண்ணாடி எதற்கு?
ஏற்கனவே, பல ஆண்டுகளாக கொடுத்து வந்த ஓய்வூதியத்தை அப்படியே கொடுக்கவோ
அல்லது சில மாற்றங்கள் செய்து கொடுக்கவோ, ஆய்வுக் குழு எதற்கு?
ஆய்வுக்குழு, ஆணையம் என்பதெல்லாம் தாமதப்படுத்தும் யுக்தி என்பது தெரியாத அளவுக்கு, அரசு ஊழியர்கள் என்ன சின்னப் பிள்ளைகளா?
தி.மு.க., அரசு ஏழை, எளிய மக்களை வேண்டுமானால் ஏமாற்றலாம்; ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் ஏமாற்ற முடியாது.
அவ்வாறு ஏமாற்றி, 2026 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து விடலாம் என முதல்வர் ஸ்டாலின் எண்ணினால், அது பகல் கனவே!
lll