/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
முதல்வர் மருந்தகங்கள் மூடப்படுகின்றனவா?
/
முதல்வர் மருந்தகங்கள் மூடப்படுகின்றனவா?
PUBLISHED ON : டிச 11, 2025 03:11 AM

மெது வடையை கடித்தபடியே, ''கபடி வீரரை களமிறக்க போறா ஓய்...'' என, அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''எந்த கட்சியில வே...'' என, பட்டென கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.
''துாத்துக்குடி மாவட்டம், மணத்தி கிராமத்தை சேர்ந்தவர், கபடி வீரர் கணேசன்... 1994ல் நடந்த, ஆசிய விளையாட்டு போட்டிகள்ல இந்திய அணியில விளையாடி, தங்கப் பதக்கம் வாங்கினார் ஓய்...
''இவருக்கு மத்திய அரசு, 'அர்ஜுனா' விருது குடுத்திருக்கு... இவரது வாழ்க்கையை அடிப்படையா வச்சு, சினிமா இயக்குநர் மாரி செல்வராஜ், பைசன் என்ற படத்தை சமீபத்துல எடுத்திருந்தார் ஓய்...
''மணத்தி கணேசன், இப்ப, திருநெல்வேலி மின் வாரிய அலுவலகத்தில், விளையாட்டு அலுவலரா இருக்கார்... பைசன் படத்துக்கு பிறகு, இயக்குநர் மாரி செல்வராஜுடன் சேர்ந்து தமிழகம் முழுக்க போன இவர், தென் மாவட்டங்கள்ல இருக்கிற தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் மத்தியில் பிரபலமாகிட்டார் ஓய்...
''சமீபத்துல, சென்னையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில், இவரை சிறப்பு விருந்தினரா கூப்பிட்டிருந்தா... இவரை, தி.மு.க.,வில் சேர்த்து, சட்டசபை தேர்தல்ல களமிறக்க நினைக்கறா... இதன் மூலமா, 'தென் மாவட்டங்கள்ல இருக்கற தேவேந்திர குல வேளாளர் சமூக ஓட்டுகளை அள்ளிடலாம்'னு ஆளும் கட்சியினர் நினைக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''கடையநல்லுார் தொகுதிக்கு குறி வைக்கிறாங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் போட்டியிட விரும்பும், 39 தொகுதிகள்ல, கடையநல்லுார் தொகுதியும் இருக்கு... இந்த தொகுதியை, 2021 சட்டசபை தேர்தல்ல, தி.மு.க., கூட்டணியில், முஸ்லிம் லீக் கட்சிக்கு குடுத்து, அவங்க தோத்து போயிட்டாங்க...
''காங்கிரசில், தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக் கரசர்னு ரெண்டு பேர் இத்தொகுதிக்கு குறி வச்சிருக்காங்க.. .
''இதுல, பீட்டர் அல்போன்ஸ் உள்ளூர்காரர் என்பதால, அவருக்கு கூடுதல் வாய்ப்பிருக்கு... அதே நேரம், 'நம்ம தொகுதியை தட்டி பறிக்க பார்க்கிறாங்களே'ன்னு முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகள் அதிருப்தியில இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''முதல்வர் மருந்தகங்களை மறந்துட்டாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''விளக்கமா சொல்லும் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''தமிழக மக்களுக்கு குறைந்த விலையில் மருந்து, மாத்திரைகள் வழங்க, 1,000 முதல்வர் மருந்தகங்களை துவங்கினாங்களே... இதுல, 462 மருந்தகங்களை தொழில் முனைவோரும், 538 கடைகளை கூட்டுறவு சங்கங்களும் நடத்துறாங்க பா...
''இதன் நிர்வாகத்தை கூட்டுறவு துறை தான் கவனிக்குது... பெரும்பாலான கடைகள்ல, மக்கள் கேட்கிற மருந்து, மாத்திரைகள் இல்லாததால, யாருமே வர்றது இல்ல பா...
''வாடிக்கையாளர்கள் வராததால, மருந்தகங்களை நடத்த முடியாம தொழில் முனைவோரும், கூட்டுறவு சங்கங்களும் திணறிட்டு இருக்காங்க... இது சம்பந்தமா, அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர்களிடம் முறையிட்டும், அவங்க கண்டுக்கல... 'கூடிய சீக்கிரம், முதல்வர் மருந்தகங்களுக்கு மூடுவிழா நடத்திடுவாங்க'ன்னு கூட்டுறவு துறையில பேசிக்கிறாங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
பேச்சு முடிய, பெஞ்ச் காலியானது.

