/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
திருப்பரங்குன்றத்தை மார்க்சிஸ்டிடம் 'தள்ளிவிட' தி.மு.க., திட்டம்!
/
திருப்பரங்குன்றத்தை மார்க்சிஸ்டிடம் 'தள்ளிவிட' தி.மு.க., திட்டம்!
திருப்பரங்குன்றத்தை மார்க்சிஸ்டிடம் 'தள்ளிவிட' தி.மு.க., திட்டம்!
திருப்பரங்குன்றத்தை மார்க்சிஸ்டிடம் 'தள்ளிவிட' தி.மு.க., திட்டம்!
PUBLISHED ON : டிச 12, 2025 03:35 AM

குளிருக்கு இதமாக சுக்கு காபியை பருகியபடியே, ''ஏகப்பட்ட பணத்தை முறைகேடு பண்ணிட்டாரு வே...'' என, அரட்டையை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''யாரை சொல்றீங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''பெரம்பலுார் மாவட்டம், கவுல்பாளையம் ஊராட்சியில் ஒரு அதிகாரி இருந்தாரு... இவரது ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், வணிக நிறுவனங்கள் துவங்க, உரிமம் கேட்டு விண்ணப்பிச்சா, உடனே தர மாட்டாரு வே...
''நிறுவனங்கள் சார்புல, 'கவனிப்பு' வந்தா மட்டும் தான், உரிமம் குடுப்பாரு... அதுவும் இல்லாம, ஊராட்சிக்கு வணிக நிறுவனங்கள் கட்டுற வரியில், 1 சதவீதத்தை தொழிலாளர் நலத்துறையின் நிதிக்கு, 'டிடி' எடுத்து, அதுக்கான வங்கி கணக்குல அந்த பணத்தை கட்டணும் வே...
''ஆனா, அதிகாரி அந்த பணத்தை கணக்கு காட்டாம, அவரே எடுத்துக்கிட்டாரு... இந்த மாதிரி ஏகப்பட்ட புகார்கள் போனதால, அதிகாரியை, 'சஸ்பெண்ட்' பண்ணிட்டாவ... கிட்டத்தட்ட மூணு வருஷமா இந்த பதவியில் இருந்த அவர், எத்தனை லட்சம் ரூபாய் சம்பாதிச்சார்னு இப்ப விசாரணை நடக்கு வே...'' என்றார், அண்ணாச்சி.
''ஆனந்தராஜ், இப்படி உட்காரும்...'' என, நண்பருக்கு இடம் தந்த குப்பண்ணாவே, ''பழைய பகையை மறக்கல ஓய்...'' என்றார்.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''போன, 2024ம் வருஷம் நடந்த லோக்சபா தேர்தல்ல, தமிழக, பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டாரோல்லியோ... இவரை எதிர்த்து, தி.மு.க., கூட்டணியில, காங்., சார்பில், ராபர்ட் புரூஸ் போட்டியிட்டார் ஓய்...
''இங்க போட்டியிட திட்டமிட்டிருந்த, தி.மு.க., பிரமுகர்கள் பலரும், இந்த தொகுதி கூட்டணி கட்சிக்கு போயிட்டதால, ராபர்ட் புரூசுக்கு தேர்தல் பணி செய்யாம ஒதுங்கிட்டா... இது, முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு போனது ஓய்...
''உடனே ஸ்டாலின், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை, திருநெல்வேலி தொகுதி பொறுப்பாளரா நியமிச்சு, 'ராபர்ட் புரூசை ஜெயிக்க வச்சிட்டு தான், சென்னைக்கு நீங்க வரணும்'னு சொல்லிட்டார்... அனிதாவும் களத்துல பம்பரமா சுழன்று, ராபர்ட்டை, ஒருவழியா ஜெயிக்க வச்சுட்டார் ஓய்...
''தன் தோல்விக்கு அனிதா ராதாகிருஷ்ணன் தான் காரணம்னு நயினார் கோபத்துல இருக்கார்... வர்ற சட்டசபை தேர்தல்ல, திருச்செந்துார் தொகுதியில், அனிதா மீண்டும் களமிறங்கினா, அவரை தோற்கடிக்க சபதம் போட்டிருக்கார்... அதே போல அனிதாவும், 'திருநெல்வேலி சட்டசபை தொகுதியில் நயினாரை தோற்கடிப்பேன்'னு பதில் சபதம் போட்டிருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''தொகுதியை, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சிக்கு தள்ளிவிட போறாங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''மதுரை, திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏத்துற விவகாரத்தில், ஹிந்துக்கள் அதிருப்தியை, தி.மு.க., சம்பாதிச்சிடுச்சே... மதுரை, எம்.பி.,யா இருக்கிற மார்க்சிஸ்ட் கம்யூ.,வின் வெங்கடேசன் தான், 'கார்த்திகை தீபத்தை கலவர தீபமா மாற்ற, பா.ஜ., முயற்சிக்குது'ன்னு சொல்லி, பிரச்னையை ஆரம்பிச்சி வச்சாருங்க...
''ஏற்கனவே, திருப்பரங்குன்றம் அல்லது மதுரை மேற்கு தொகுதியை, தி.மு.க., கூட்டணியில் கேட்டு வாங்க, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர் திட்டமிட்டிருந்தாங்க... இப்ப, திருப்பரங்குன்றம் தொகுதியை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம், 'தள்ளிவிட' தி.மு.க., தலைமை முடிவு பண்ணிடுச்சுங்க...'' என முடித்தார், அந்தோணி சாமி.
அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.

