PUBLISHED ON : நவ 05, 2026 12:00 AM

ஆர்.மகேசன், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: தமிழகத்தில், ஐந்து சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது.
இந்த ஐந்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றால்தான், முதல்வர் விஜயால், தன் ஐந்தாண்டு ஆட்சியை பிரச்னையில்லாமல் சுமுகமாகக் கொண்டு செல்ல முடியும்.
அதேநேரம், இந்த ஐந்தும் ஏற்கனவே, அ.தி.மு.க.,வினர் வென்ற தொகுதிகள்!
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகள் போல் தேர்தல் முடிவுகள் ஆளுங் கட்சிக்கு சாதகமாக அமைந்தால், அ.தி.மு.க.,பொதுச்செயலர் பழனிசாமிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படுவதோடு, அவரது அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகி விடும்!
மற்றொருபுறம், கடந்த கால ஆட்சியில், தி.மு.க., மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பு இன்னும் குறையவில்லை; இந்நிலையில், முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு, கைது என, தி.மு.க.,வும் பலவீனப்பட்டு வருகிறது.
களத்தில் இருக்கும் மற்றொரு கட்சியான நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் நாகரிகம் அற்ற பேச்சுகளால், தமிழக மக்கள் அவரை ஓரங்கட்டி விட்டனர்.
ஆனாலும், த.வெ.க.,வை வீழ்த்த, அனைத்து எதிர்க்கட்சிகளும் கைகோர்த்து, சீமானை அம்பாசமுத்திரம் தொகுதியில் பொது வேட்பாளராக நிறுத்த முன்வரலாம். அதேநேரம், ஒரு தொகுதியில் சீமானை ஆதரித்துவிட்டு, மற்ற நான்கு தொகுதிகளில் தனித்து நின்றால், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஓட்டுகளைப் பிரித்து, மீண்டும் த.வெ.க.,வே வெற்றிபெறும்!
இந்த நிதர்சனம் அரசியல் அனுபவம் நிறைந்த ஸ்டாலினுக்கும், பழனிசாமிக்கும் தெரியாமலா இருக்கும்... அதனால், சீமானை பொது வேட்பாளராக நிறுத்துவது சந்தேகம் தான்!
மேலும், ஐந்து இடைத்தேர்தல்களிலும், த.வெ.க.,வே வெற்றி பெற்றுவிட்டால், 2031 சட்டசபைத் தேர்தலில், தங்கள் அதிகாரத்தை காப்பாற்ற, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் கூட்டணி அமைத்தாலும் ஆச்சரியமில்லை!
மே.வங்கத்தில், தங்கள் பொது எதிரியான, திரிணமுல் காங்., தலைவி மம்தா பானர்ஜியை வீழ்த்த, ஜென்ம விரோதிகளாக இருந்த காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கைகோர்த்தது போல், தமிழகத்தில் காமராஜரை வீழ்த்த, திராவிட சித்தாந்தங்களுக்கு எதிரியான ராஜாஜியுடன், தி.மு.க., தலைவர் அண்ணாதுரை கரம் கோர்த்ததைப் போல், தமிழகத்தில் மீண்டும் ஓர் அரசியல் மாற்றம் ஏற்படலாம்!
அரசியலில் தான் நிரந்தர நண்பர்களும் இல்லை; நிரந்தர எதிரிகளும் இல்லையே!
lll
