sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை!

/

கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை!

கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை!

கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை!

1


PUBLISHED ON : ஜூன் 27, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூன் 27, 2025 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

என்.வைகைவளவன், மதுரையில் இருந்துஅனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., கூட்டணியில் இருக்கும் கட்சிகள்,தங்களுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கேட்க ஆரம்பித்து விட்டன.

முதன் முதலில் இதற்கு பிள்ளையார் சுழி போட்டது காங்கிரஸ் தான்!

அதையே, தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், வி.சி., மற்றும் ம.தி.மு.க., போன்ற கட்சிகள் பிடித்துக் கொண்டு அதிக தொகுதிகள் கேட்டு அடம்பிடிக்க ஆரம்பித்து விட்டன.

சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க, இதுபோன்ற கூட்டணி பேரங்கள் நடப்பது இயல்புதான். தி.மு.க.,வும் தொகுதி பங்கீட்டின் போது, பெட்டியை கொடுத்து, இக்கட்சிகளின் வாயை அடைத்து விடும்.

அப்புறம் என்ன... 'மதச்சார்பின்மையே நம் கொள்கை; பிரிவினை சக்திகள் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது. அதனால், நாம் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைந்து தி.மு.க., வெற்றிக்கு பாடுபடுவோம்' என்று கம்பி கட்டும் கதைகள் கூறுவர்.

இதுதானே, கடந்த அத்தனை தேர்தல்களிலும் தமிழக மக்கள் பார்த்து சலித்துப்போன அரசியல் நாடகம்!

இந்நிலையில், பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி நிச்சயம் சட்டசபை தேர்தலில்வெற்றி பெறும் என்கிறார், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

அவர் கூறிவதுபோல், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால், அது ரொம்ப நாளைக்கு நீடிக்காது!

காரணம், இங்கு கூட்டணி வைத்து ஜெயித்தாலும், தனி ஆவர்த்தனமே செல்லுபடியாகும்!



நடைமுறைக்கு வருமா?


வி.எச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: -----------------தமிழக ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு கழகம், 2013 -- 14ல் இச்சமூக மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த திட்டம் அறிவித்தது.

அதன்படி, ஆண்டுதோறும், 50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்களை தேர்வு செய்து, பொறியியல் மற்றும் ஐ.ஐ.டி.,யில் இளங்கலை பொறியியல் படிப்புக்கான நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற, சிறப்பு பயிற்சி தருவதாக தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வீதம், பயிற்சி அளிக்கும் நிறுவனங்களுக்கு மாநில அரசே கட்டணம் செலுத்தும் என்றும் கூறப்பட்டது. பின், நிர்வாக காரணங்களை கூறி, அத்திட்டம் கைவிடப்பட்டது.

சமூகத்தில் பின்தங்கிய பிரிவு மாணவர்களின் உயர்படிப்புக்கு, 'நான் முதல்வன்' திட்டம் வழிவகுத்தாலும், மேற்படி திட்டத்தை செயல்படுத்தியிருந்தால், பலநுாறு ஆதிதிராவிடமற்றும் பழங்குடி மாணவர்கள் ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி.,களில் படித்திருப்பர்.

'பட்டியலின மக்களின்பாதுகாவலர்கள்' என்று தங்களை கூறிக் கொள்ளும் கட்சிகள் கூட, இத்திட்டத்தை செயல்படுத்த மாநில அரசிடம் வற்புறுத்தவில்லை.

எனவே, வரும் கல்வி ஆண்டிலாவது இத்திட்டத்தை செயல்படுத்தி, பின்தங்கிய ஏழை மாணவர்களின் வாழ்வில் அரசு, ஒளியை ஏற்படுத்த வேண்டும்!



தரத்தை உயர்த்த முனைப்பு காட்டுங்கள்!


டாக்டர் டி.ராஜேந்திரன், மருத்துவக் கல்லுாரி பேராசிரியர், அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் எவருடைய ஆட்சியில், அதிக மருத்துவக் கல்லுாரிகள் துவங்கப்பட்டன என்று இரு திராவிடக் கட்சிகளும் சண்டை போடுகின்றன.

அதேநேரம், கட்டமைப்பு வசதிகள், கல்வியின் தரம், ஆசிரியர் பற்றாக்குறைபோன்ற விஷயங்கள் குறித்து கவலைப்படுவதாக தெரியவில்லை.

தேசிய மருத்துவ ஆணையம், இதுபோன்ற குறைகளை சுட்டிக்காட்டி, இங்குள்ள, 36 அரசு மருத்துவக்கல்லுாரிகளில், 34 கல்லுாரிகளுக்கு இந்த ஆண்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இவற்றில் மிகப்பழமை வாய்ந்ததும், பிரசித்தி பெற்றதுமான ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரியும் அடங்கும்!

இதன் காரணமாகவே, கடந்த ஆட்சியில் துவங்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லுாரிகளில் கூடுதலாக, 500 மாணவர்கள் சேர்க்கைக்கும் ஒப்புதல் கிடைக்கவில்லை.

இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில்மருத்துவக் கல்லுாரிகள் உள்ள மாநிலம் தமிழகம்.அதேநேரம், நுாற்றுக்கணக்கான பேராசிரியர்கள், இணை பேராசிரியர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், மாணவர்களின் கல்வித் தரம் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.

சமீபத்தில், தமிழகத்தில் வட மாவட்டத்தில் உள்ள ஓர் அரசு மருத்துவக்கல்லுாரிக்கு இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நடத்த தேர்வாளராக சென்றிருந்தேன்.

அங்கு குறிப்பிட்ட துறையில், துறைத்தலைவர், பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் பதவிகளில் எவருமே இல்லை. துணை பேராசிரியர் ஒருவர் தான் துறைக்கு பொறுப்பு வகிக்கிறார்.

மாணவர்களின் கல்வித்தரமோ படு மோசமாக இருந்தது. 15 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட கல்லுாரியின் நிலையே இதுதான் என்றால், புதிய கல்லுாரிகளின் நிலை எந்த அளவு மோசமாக இருக்கும்...

உலக சுகாதார நிறுவனத்தின் விதிப்படி, 1,000 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் மருத்துவர்களின் எண்ணிக்கை இருக்கவேண்டும்.

நம் நாட்டில் சராசரியாக, 836 பேருக்கு ஒரு மருத்துவர் என்று இருந்தாலும், உத்தர பிரதேசத்தில், 2,363 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்திலும், நாகாலாந்து - 4,056, ஜார்க்கண்ட் - 8,000 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலையில் தான் மருத்துவர்கள் உள்ளனர்.

அதேநேரம், கர்நாடகாவில், 457 பேருக்கு ஒருவர்; தமிழகத்தில், 495 பேருக்கு ஒரு மருத்துவர் என, நாட்டிலே அதிக மருத்துவக் கல்லுாரி மற்றும்மருத்துவர்கள் எண்ணிக்கை கொண்ட மாநிலங்களில், முதல் இரண்டு இடத்தில் இவ்விரு மாநிலங்களும் இருக்கின்றன.

எனவே, மத்திய அரசு தமிழகம், கர்நாடகா, மஹாராஷ்டிரா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களுக்கு புதிய மருத்துவக்கல்லுாரிகளுக்கு அனுமதி கொடுப்பதை நிறுத்திவிட்டு, நாகாலாந்து, மிசோரம், அருணாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட் போன்ற பின்தங்கிய மாநிலங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

தமிழகத்தில், 70க்கும் மேற்பட்ட மருத்துவக்கல்லுாரிகள் உள்ளன. 30க்கும் மேற்பட்ட அரசு மருத்துவக் கல்லுாரிகளிலோ தரம் இல்லை.

எனவே, கல்லுாரிகளின் எண்ணிக்கையை பெருக்குவதில் கவனம் செலுத்தாமல், குறைபாடுகளை நீக்கி, மருத்துவக்கல்வியின் தரத்தை உயர்த்துவதில் ஆட்சியாளர் முனைப்பு காட்டவேண்டும்!








      Dinamalar
      Follow us