sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

ஊழலற்றவர் செய்த செயலில் தவறில்லை!

/

ஊழலற்றவர் செய்த செயலில் தவறில்லை!

ஊழலற்றவர் செய்த செயலில் தவறில்லை!

ஊழலற்றவர் செய்த செயலில் தவறில்லை!

4


PUBLISHED ON : செப் 21, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 21, 2024 12:00 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கு.அருண், புவனகிரி, கடலுார் மாவட்டத்தில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பிரதமர் நரேந்திர மோடி, விநாயகர் சதுர்த்தியின் போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டுக்கு சென்று பூஜையில் பங்கேற்றது, மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கி விட்டது.

'நேர்மையான தலைமை நீதிபதியாக இருந்திருந்தால், பிரதமர் மோடியை அழைத்து இருக்கக் கூடாது' என்று, அனைத்து எதிர்க்கட்சிகளும் விமர்சனம் செய்து வருகின்றன.

உண்மையில் ஒவ்வொரு நீதிபதியும், நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கும் போது, மதம், ஜாதி பார்க்காமல், நேர்மையான முறையில் தீர்ப்பு வழங்க வேண்டும்; தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் தங்களது வீடுகளில், அவர்கள் சார்ந்துள்ள மதரீதியான வழிபாடுகளை தனக்கு வேண்டிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடுவதற்கு எந்தவொரு தடையும் இல்லை.

அந்த வகையில் பிரதமர் மோடி, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வீட்டில்நடந்த விநாயகர் பூஜையில் கலந்து கொண்டு சிறப்பித்தது சரியே. இதை வைத்து அரசியல் செய்வது சரியல்ல.

அனைத்து எதிர்க்கட்சிகளும் சுயலாபம்கருதி, இவ்விஷயத்தில் அரசியல் சர்ச்சையைஉருவாக்குவது அழகல்ல.

நீதிபதிகள் கூடுதல் ஒழுக்கமும், நேர்மையும், தேசப்பற்று கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம்.

நேர்மையான நீதிபதிகள், நேர்மையற்ற அரசியல் கட்சித் தலைவர்களுடன் உறவு வைத்துக் கொள்வதைத் தான் தவிர்க்க வேண்டுமே தவிர, 140 கோடி மக்களின் பிரதமராகவும், எந்த ஊழல் குற்றச்சாட்டும்இல்லாதவராகவும் உள்ள மோடியை வீட்டுக்கு அழைத்து, விநாயகர் பூஜை செய்துள்ளது, பாராட்ட வேண்டிய விஷயம்.



சாத்தியமே இல்லை மதுவிலக்கு!


என்.தொல்காப்பியன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நாடு முழுதும் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால், தமிழகம் அதற்கு ஆதரவுதரும்' என்கிறார் சபாநாயகர் அப்பாவு; இதிலிருந்தே தமிழகத்தில் மதுவிலக்கு அமலுக்கு வர சாத்தியமே இல்லை என்பது வெட்ட வெளிச்சம் ஆகி விட்டது.

தி.மு.க., தலைவர்கருணாநிதியிடம், மூதறிஞர்ராஜாஜி எவ்வளவோ கெஞ்சியும், அதற்கு அவர் ஆதரவு தராமல், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க முடிவு செய்த வரலாறு அனைவரும் அறிந்ததே!

கருணாநிதி காலத்தில் திறக்கப்பட்ட கடைகள்,எம்.ஜி.ஆர்., ஆட்சியிலும்,ஜெயலலிதா ஆட்சியிலும்தொடர்ந்து நடத்தப்பட்டு, இன்று, ஆண்டுக்கு 40,000 கோடி ரூபாய் வருவாயை ஈட்டித் தருகின்றன.

இந்த அளவுக்கு வருமானம் கிடைக்கும் போது, மதுக்கடைகளை மூட திராவிட மாடல் அரசு எப்படி சம்மதிக்கும்?

தமிழகத்தில் மீண்டும்மதுவிலக்கு அமல்படுத்துவது, தலைவர் கருணாநிதிக்கு செய்யும்துரோகம் என்று ஸ்டாலின்நினைத்தால், அதைத் தவறு என்று எப்படி சொல்ல முடியும்?

திருமாவளவன் போன்றஅரசியல்வாதிகள், மது ஒழிப்பு மாநாடு நடத்துவதால் தமிழகத்தில் மதுவுக்கு எதிராக பெரிய அளவில் புரட்சியே உருவாகப் போவதில்லை; வழக்கம் போல டாஸ்மாக்அமோக வருவாய் ஈட்டித் தரும்.

தமிழகத்தில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை எப்படி தடுத்து நிறுத்த முடியாதோ, அதைப் போல மது விற்பனையையும் தடுத்து நிறுத்த முடியாது.

'நாய் விற்ற காசு குரைக்காது என்ற பழமொழி போல, சாராயம் விற்று அதன் வாயிலாக கிடைக்கும் காசும் நாறாது' என்று அரசின், 'மைண்ட் வாய்ஸ்' கேட்காமல் இல்லை.

எனவே, தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமே இல்லை.



புராணத்தை மேற்கோள் காட்டிய 'பகுத்தறிவு!'


வ.ப.நாராயணன்,ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ- - மெயில்' கடிதம்: -----------------------------------------------------------------------அமெரிக்காவிலிருந்து திரும்பிய முதல்வர்ஸ்டாலின், கேரள மக்களின்ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறார். தமிழக மக்கள் கொண்டாடும் விநாயகர்சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை; அது போகட்டும்; விஷயத்தைக்கேளுங்கள்...

ஸ்டாலின், ஓணம் பண்டிகைக்கு கேரள மக்களுக்கு வாழ்த்து சொல்லியதோடு நிறுத்தியிருக்கலாம்; ஆனால், தேவையில்லாமல், திருமாலின் தசாவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாகஒரு கருத்தைக் கூறி இருக்கிறார்.

நல்லாட்சி செய்த மகாபலியை நேருக்கு நேர் நின்று வீழ்த்த முடியாமல், சூழ்ச்சியால் வீழ்த்தியதாக, திருமால் அவதாரம் எடுத்த காரணத்தை முழுதும் அறியாமல், அரைவேக்காட்டுத்தனமாக, ஹிந்துக்கள் மனம் புண்படும்படியாகக் கருத்து கூறியுள்ளார்.

பிரகலாதனின் பேரனானமகாபலி சக்ரவர்த்தி நல்லாட்சிப் புரிந்தவன் தான்; அதில் சந்தேகமில்லை. அவன் அந்நாட்டு மக்களை எந்தக் குறையும் இல்லாமல் செழிப்போடு தான் வைத்திருந்தான். அதே சமயம், 'தான்' என்ற அகங்காரம் கொண்டான். தன்னை வெல்ல மூவுலகிலும் யாருமில்லை என்று ஆணவம் கொண்டான்.

அவனது கர்வத்தை அழிக்கத் தான், திருமால், வாமன அவதாரம் எடுத்ததாகப் புராணம் கூறுகிறது. புராணக் கதைகளில் நம்பிக்கையற்ற முதல்வர், அவற்றில் வரும் மகாபலி கதாபாத்திரத்தை மட்டும் நம்புவது ஏன்?

இறைவனின் காலடி தலை மேல் பட்டதும், மகாபலியின் கர்வம் முற்றிலும்அழிந்தது. கர்வம்அழிந்ததும் அவன் தவறை உணர்ந்து, அந்த நாளை அந்நாட்டு மக்கள்அவன் நினைவாகக் கொண்டாட வேண்டுமென்று அந்த இறைவனிடம் மகாபலியே வேண்ட, அவன்கோரிக்கையை ஏற்கிறான் இறைவன்.

எனவே, மகாபலியின்விருப்பப்படிதான் ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தன்று, ஓணம் பண்டிகையை கேரளமக்கள் கொண்டாடி வருகின்றனர்.

'பகுத்தறிவு'வாதிகள்,நாள் நட்சத்திரத்தில் நம்பிக்கையற்றவர்கள் என்று கூறிக்கொள்கின்றனர்; ஆனால், அதை மேற்கோள் காட்டி பேசுகின்றனர்... என்னே விந்தை இது!

அண்ணாதுரை,கருணாநிதி போன்றோர் கதை வசனம் எழுதிய சினிமாக்கள் கூட, கற்பனையானகட்டுக் கதைகள் தான். ஆனால் அந்த சினிமாக்கள் சொல்லும் நல்ல கருத்தையும்,நீதியையும் யாரேனும் ஏற்க மறுத்தனரா?

ஒருவன் எவ்வளவு பலசாலியாக இருந்தாலும், கர்வம் கொண்டு விட்டால் அழிந்து விடுவான் என்பதை தான் வாமன அவதாரம் உணர்த்தும் நீதி.

தான் ஹிந்துக்களுக்கும்,ஹிந்துக் கடவுளுக்கும் விரோதியல்ல என்றும், தன் மனைவி ஹிந்து ஆலயங்களுக்குச் சென்று வருகிறார் என்றும் கூறிய இதே முதல்வர் தான், தற்போது ஹிந்துக்கள் மனம் புண்படும் விதமாகதிருமால் அவதாரத்தைத்தரம் தாழ்த்திப் பேசுகிறார்.

நல்லா வேலை செய்யுதுபா, 'பகுத்தறிவு!'








      Dinamalar
      Follow us