PUBLISHED ON : ஜன 30, 2025 12:00 AM

ஆர்.பஞ்சநாதன், விழுப்புரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் ஆகியும், பணம் கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய நிலையில் தான், தி.மு.க., உள்ளது' என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
மூன்றாண்டுகள் அல்ல; 30 ஆண்டுகள் ஆனாலும், பணம் கொடுக்காமல் கழகத்தால் ஓட்டு வாங்க முடியாது என்பதே நிதர்சனம்!
அதனால் தான், ஆரம்ப காலத்தில் தங்கள் வேட்பாளர்களை செலவு செய்ய வைத்து, ஓட்டுகளை அறுவடை செய்தனர்; பின், கையிருப்பு கரைவதை தவிர்க்க, வாக்குறுதி என்ற கான்செப்டில், 'இலவசம்' என்ற லேபிளை ஒட்டி, கைக்காசை காபந்து பண்ணி, அரசு கருவூலத்தில் இருந்தே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
இலவச பஸ் பயணம், மகளிர் உரிமைத் தொகை என்றும், எதிர்காலத்தில் ஓட்டுகளை அறுவடை செய்ய வசதியாக, கல்வி உதவித்தொகை, மாணவர் உதவித்தொகை போன்றவற்றை வாரி வழங்கி வருகின்றனர்.
வீட்டில் பெரியவர்கள் வெளியே கிளம்பும் போது, சிறு பிள்ளைகளுக்கு, 'ஏதாவது வாங்கி சாப்பிடு' என்று சொல்லி, சில்லரை காசுகளை கொடுத்துவிட்டு செல்வது வழக்கம்.
இப்பழக்கம் அப்படியே நீடித்து, என்றைக்காவது பெரியவர்கள் காசு கொடுக்கவில்லை என்றால், அப்பிள்ளைகள் அழுது அடம்பிடித்து, ஆகாத்தியம் செய்வர்; போற காரியம் உருப்படாது என்று சாபம் கூட கொடுப்பர்.
கழகத்தின் நிலைமையும் அப்படித்தான் உள்ளது.
ஓட்டுக்கு பணம் கொடுத்து பழக்கப்படுத்தி விட்டனர்; பணம் வாங்காமல் வாக்காளர்கள் கழகத்திற்கு ஒரு ஓட்டுக் கூட போட மாட்டார்கள்.
இதில், நடுநிலை வாக்காளர்கள் என்று ஒரு கேட்டகிரி உள்ளது. இவர்கள், 'நாம் ஓட்டளிக்கும் வேட்பாளர்கள் வெல்லப் போவதில்லை; அதனால், தோல்வியடையும் வேட்பாளருக்கு ஏன் ஓட்டு போடு வானேன்' என்று உயரிய சிந்தனையில், ஓட்டுச்சாவடிக்கே வர மாட்டார்கள்!
நிதர்சனம் இவ்வாறு இருக்கையில், திராவிட கட்சியினரால், துட்டை வெட்டாமல் ஓட்டு வாங்க முடியுமா?
துணிச்சல் ஏன் இல்லை?
எம்.பெர்லின்
பிரபு, காட்டாத்துறை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: ஈரோடு கிழக்கில் பிப்., 5ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான, அ.தி.மு.க., போட்டியிடவில்லை.
'தேர்தல்
நேர்மையாக நடக்காது; அதனால் போட்டியிடவில்லை' எனும் காரணத்தை சொல்லி,
தேர்தலில் இருந்து விலகிக் கொண்டார், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி.
கூடவே, நோட்டாவுக்கு ஓட்டுக் கேட்டுள்ளார்.
இதை எப்படி அ.தி.மு.க.,உறுப்பினர் ஏற்றுக்கொள்வர்?
இது
ஒருபுறம் இருக்க, மத்தியில் ஆட்சியில் இருக்கும், பா.ஜ., தலைமையிலான தேசிய
ஜனநாயகக் கூட்டணியும், இடைத்தேர்தல் போட்டியில் இருந்து, 'ஜகா' வாங்கி
விட்டது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கூட, தேசிய ஜனநாயகக் கூட்டணி
சார்பில், பா.ம.க., போட்டியிட்டது.
வெற்றி - தோல்வி பாராமல்,
அனைத்து கட்சிகளும் இடைத்தேர்தலில் போட்டியிட்டு இருக்க வேண்டும்; யாரும்
போட்டியிடாததால், தி.மு.க.,விற்கு வெற்றி உறுதியாகி விட்டது.
இதன் வாயிலாக, '2026 தேர்தலிலும் நாங்கள் தான் ஜெயிப்போம்' எனச் சொல்லி, தி.மு.க.,வினர் பிரசாரத்தை துவங்குவர்.
எது எப்படியோ, ஈரோடு கிழக்கில் தி.மு.க.,வை எதிர்கொள்வதால், சீமான் தினமும் தலைப்புச் செய்திகளில் இடம்பெறுகிறார்.
வெற்றி பெறுவது கடினம் என தெரிந்தாலும், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகளை சீமான் சரியாக பயன்படுத்தி வருகிறார்.
இந்த துணிச்சல் ஏன் மற்ற கட்சியினருக்கு இல்லை?
எ து அறிவியலுக்கு ஒவ் வாதவை?
ரா.ஷண்முகசுந்தரம்,
அவிநாசி, திருப்பூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மாட்டு
கோமியத்தில் காய்ச்சலை குணப்படுத்தும் மருத்துவ தன்மை உள்ளது' என்று சென்னை
ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி சொன்னதும் தான் சொன்னார்... திராவிட கூட்டம்
ஒன்று, பகுத்தறிவு பலகையை துாக்கிக் கொண்டு புறப்பட்டு விட்டது.
இவர்கள்
அறிவரா... உலகின் விலை உயர்ந்த, 'கோபி லுவாக்' எனப்படும் காபி, புனுகு
பூனையின் மலத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது என்பதும், ஒரு கப் காபியின்
விலை, 7,000 ரூபாய் என்பதையும்?
இதேபோன்று, 'பிளாக் ஐவரி' என்ற காபி, யானையின் மலத்தில் இருந்து தயாரிக்கப்படுவதாக கூறுகின்றனர்.
ஏன்... நாம் அன்றாடம் பயன்படுத்தும் தேன், தேனீக்கள் பூக்களில் சர்க்கரை நீரை சேகரித்து எடுக்கும் வாந்தி தானே!
தேனீக்களின் வாந்தி என்று, இந்த பகுத்தறிவுபகலவர்கள் எவரும் தேனை பயன்படுத்துவதே இல்லையா?
மேற்கண்ட பொருட்களின் மருத்துவ குணங்கள் உலகளாவிய அளவில் ஒத்துக்கொள்ளப்பட்டு பயன்பாட்டில் உள்ளன என்பதை இவர்கள் அறியவில்லையா?
இதுபோன்று தான் கோமியமும்!
இதற்கு ஆதாரமாக ஐந்து ஆராய்ச்சி கட்டுரைகளை கோடிட்டு காட்டியுள்ளார், ஐ.ஐ.டி., இயக்குனர்.
அதனால், எதையும் முழுதாகப் படிக்காமல், வாய்க்கு வந்ததை உளறாதீர்கள்!
முடிந்தால்
மேற்கண்ட பொருட்களை பயன்படுத்தும் நாடுகளிடம், இவை அறிவியலுக்கு ஒவ்வாதவை
என்று உங்கள் வீரத்தை காட்டுங்களேன், பார்க்கலாம்!
மவுனம் காப்பது ஏன்?
வே.ஹென்னிங்ஸ்,
சுந்தராபுரம், கோவை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ-மெயில்' கடிதம்:
இடைத்தேர்தல் என்றாலும், பொதுத்தேர்தல் என்றாலும், 100 சதவீதம்
வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்று விரும்புகிறது, தேர்தல் ஆணையம்;
அதை விளம்பரப்படுத்தவும் செய்கிறது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு
இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 'இண்டியா' கூட்டணி சார்பில் தி.மு.க.,வும்,
அதை எதிர்த்து, நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது.
ஆனால்,
அ.தி.மு.க., - பா.ஜ., - தே.மு.தி.க., - பா.ம.க., ஆகிய கட்சிகள்
போட்டியிடவில்லை; தாங்கள் போட்டி இடவில்லை என்றாலும், அந்தந்த கட்சிக்கு
வாக்களிக்க விரும்பும் வாக்காளர்கள், தி.மு.க.,வுக்கு வாக்களிப்பதா, நாம்
தமிழர் கட்சிக்கு வாக்களிப்பதா என்பதைச் சொல்ல வேண்டுமல்லவா?
அவ்வாறு சொல்லாமல் மவுனம் காப்பது, தேர்தல் ஆணையத்தின், 100 சதவீத வாக்களிப்பு என்ற குறிக்கோளை முறியடிக்க நினைக்கும் செயல் அல்லவா?
எனவே,
தேர்தலில் போட்டியிடாத கட்சிகள், தங்கள் மவுனத்தைக் கலைத்து, யாருக்கு
வாக்களிப்பது என்பதை அறிவிக்க வேண்டும்; ஜனநாயகத்தில் இதுவே நாணயமான
செயலாகும்!