/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
'வக்கிர நிவர்த்தி'க்கு வழி இல்லை இனி
/
'வக்கிர நிவர்த்தி'க்கு வழி இல்லை இனி
PUBLISHED ON : ஜன 08, 2024 12:00 AM

எஸ்.சுப்பிரமணி, சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தை மாதம் முதல் தேதியன்று, கண்கண்ட தெய்வமாகவும், விவசாயத்துக்கும், மக்களின் வாழ்வாதாரத்துக்கும் பேருதவியாகவும் இருக்கும் சூரியனை வணங்கி, போற்றும் விதமாக கொண்டாடப்படுவது தான் பொங்கல் பண்டிகை.
குறிப்பாக பொங்கல் பண்டிகை என்பது ஹிந்துக்கள் கொண்டாடும் ஒரு முக்கியமான பண்டிகை.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கூட, இந்த தைத் திங்கள் பொங்கல் பண்டிகைக்கு, மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து, தமிழர் திருநாள் என்று நாமகரணம் சூட்டியதோடு, தமிழ் மாதப்பிறப்பையே, சித்திரை மாதத்திலிருந்து தை மாதத்திற்கு மாற்ற முயன்று, தோல்வியை தழுவினார்.
அப்படிப்பட்ட பொங்கல் பண்டிகையை, தமிழகத்தில் மட்டுமல்லாது, பாரதம் முழுதும் வாழும் ஹிந்து மக்கள் மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடுவதும் வழக்கம்.
தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கும் கழகங்கள், இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் சில மளிகை பொருட்களையும், கரும்புத் துண்டையும், 1,000 அல்லது 2,000 ரொக்கம் வழங்குவதை, வாடிக்கையாக வைத்திருக்கின்றன.
அரசு அளிக்கும் இந்த தொகுப்பை கொண்டு தான், தமிழகத்தில் வாழும் அனைத்து மனித ஜீவராசிகளும், சூரியனுக்கு படையல் வைத்து, 'பொங்லோ பொங்கல்' என்று கூவி, கொண்டாடி மகிழ வேண்டும்.
இப்படி கொண்டாடப் படும் பண்டிகையில் ஆகச் சிறந்த விசேஷம் என்னவென்றால், அது திராவிட மாடல் கழக அரசானாலும் சரி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசானாலும் சரி...
ஆகச் சிறந்த இந்த பரிசை, ஆட்சியாளர் தன் திருமுகம் அச்சிடப்பட்ட பையில் தான் கொடுப்பர்; அதுவும் யாருக்கு... பொங்கலுக்கும், சூரிய விழாவுக்கும் சம்பந்தமே இல்லாத, மாற்று மத பிரஜைகளுக்கு!
இந்த வக்கிரத்தனம் நிவர்த்தியாக வழியே இல்லை இனி!
தி.மு.க.,வில் ஐக்கியமாகலாம் பன்னீர்!
என். மல்லிகை மன்னன்,
மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பொதுச் செயலர்
பதவியிலிருந்து பழனிசாமி தானாகவே விலகும் வரை, என் தர்மயுத்தம் தொடரும்'
என்று, சபதம் செய்திருக்கிறார் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்.
பழனிசாமி
முறைப்படி பொதுக்குழுவைக் கூட்டித் தான், அ.தி.மு.க.,வின் பொதுச் செயலர்
ஆனாரே தவிர, தனக்கு தானே பொதுச்செயலர் என்று பட்டம் சூட்டிக் கொள்ளவில்லை.
அவர்
பொதுச் செயலர் ஆனதை, தேர்தல் கமிஷனும் அங்கீகரித்து, தேர்தலில் போட்டியிட
இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்திக் கொள்ளவும், பழனிசாமிக்கு அனுமதியும்
அளித்துள்ளது.
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பெரும்பாலானோர், இன்றும் பழனிசாமியை தான் ஆதரிக்கின்றனர்.
அ.தி.மு.க., தொண்டர்களில் பெரும்பான்மையோர், அவர் பக்கம் இருக்கின்றனர்.
அ.ம.மு.க.,
கட்சியை துவக்கிய தினகரன் பக்கம், எந்த எம்.எல்.ஏ.,வும் செல்லவில்லையே...
மேலும், தொண்டர்கள் ஆதரவும், எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவும் இல்லாமல் தானே
தினகரனும், பன்னீர்செல்வமும் இருக்கின்றனர்.
இந்த லட்சணத்தில், துணை
முதல்வர் பதவி என்ற, 'டம்மி பதவி' தனக்கு வலுக்கட்டாயமாக வழங்கப்பட்டதாக,
பன்னீர்செல்வம் இப்போது கதை விடுகிறார். ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை,
அமைச்சர்கள் டம்மியாக, ஜீரோக்களாகத் தானே நடத்தப்பட்டனர்?
பன்னீர்செல்வம்
எத்தனை தர்மயுத்தம் நடத்தினாலும், பழனிசாமி பொதுச்செயலர் பதவியை ராஜினாமா
செய்யமாட்டார். மக்கள் செல்வாக்கை இழந்துவிட்ட பன்னீர்செல்வம், எவ்வளவு
தான் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும், மீண்டும் அ.தி.மு.க.,வில் பழைய
செல்வாக்கை அடைய முடியாது.
தர்ம யுத்தம் நடத்துவதற்கு பதிலாக,
தி.மு.க.,வில் ஐக்கியமாகி, கருணாநிதியின் புகழ் பாடினால், எம்.எல்.ஏ.,
பதவியாவது பன்னீர்செல்வத்திற்கு கிடைக்கும்.
திறமையானவரை மதிக்காத காங்கிரஸ்!
என்.ஏ.நாக சுந்தரம், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காங்கிரஸ் கட்சி, 'நாங்கள் விடுதலைக்கு போராடிய பெரிய சக்தி... தேச நலன், தேச பற்று மிக்கவர்கள்' என, பேசுவது வாடிக்கை; ஆனால், பேசிய பேச்சுகளை சரியாக ஆராய்ந்தால் மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம் தெரியும்.
'காங்கிரஸ் கட்சி இன்று பலவீனமடைய, ராஜிவின் மனைவி, மகள், மகன் தான் காரணம்' என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. காங்கிரஸ் தான் நாட்டை ஆள வேண்டும்; அது ராஜிவின் வாரிசாக இருக்க வேண்டும் என, சில காங்கிரஸ்காரர்கள் விரும்புகின்றனர்.
'ராகுல் பிரதமரானால், நாம் நிறைய ஆதாயப்படலாம்' என்ற நப்பாசையில், துதி பாடும் கூட்டமும், சோனியா, பிரியங்கா, ராகுல் பின்னால் சுற்றி வருகிறது.
ஆனால், 'ஆளும் பிரதமர் மோடியை எதிர்க்க துணிவான, தகுதியான பிரதமர் வேட்பாளர் காங்கிரஸ் கட்சியில் இல்லை என, காங்கிரஸ் கட்சியினரே பேசுகின்றனர்' என்று, தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் மகனான கார்த்தி பேசியது, தமிழக காங்கிரஸ் கட்சியினரை கொதிப்படைய வைத்து விட்டது.
தலைமையை மதிக்காத கார்த்தியை, கட்சியை விட்டு நீக்க வேண்டும் அல்லது போராட்டம் என, காங்கிரஸ் கோஷ்டிகளில் ஒரு பிரிவு எதிர்ப்பு தெரிவிக்கிறது.
'தமிழகத்தில் காங்கிரஸ், தன்மானத்துடன் அரசியல் செய்தால் மட்டுமே, காங்கிரஸ் கட்சி வளரும். தி.மு.க., ஆட்சியில் நடைபெறும் குறைகளை வெளிப்படுத்தினால் தான், காங்கிரஸ் மக்கள் கவனத்தை பெரிதும்ஈர்க்கும்.
'அவ்வாறு இல்லையெனில், தி.மு.க.,வின் கூட்டு களவாணி கட்சி காங்கிரஸ் என்ற முத்திரை நீங்காது' என்பதை உணர்ந்து, கார்த்தி துணிச்சலுடன் தி.மு.க.,வுக்கு எதிராக பேசினார்.
ஆனால், கூட்டணி என்ற அடிமைத்தன விசுவாசத்தை காட்ட, கார்த்தி மீது நடவடிக்கை என்பது, 'நல்லதுக்கு காலமில்லை' என்பதையே உணர்த்துகிறது.
திறமையான காங்கிரஸ்காரன் கட்சியை வளர்ப்பதை பிடிக்காதவர்கள் இருக்கும் வரை, தமிழக காங்கிரஸ் உருப்பட போவதில்லை.