PUBLISHED ON : ஜூலை 14, 2025 12:00 AM

பொ.ஜெயராஜ்,
பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளாவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: தி.மு.க., தலைவர் ஸ்டாலினை சந்தித்த ம.தி.மு.க., பொதுச்செயலர்
வைகோ, 'தி.மு.க., அரசுக்கு எதிராக, இதுவரை ஒரு வார்த்தை கூட விமர்சனம்
வைத்ததில்லை; வைக்கவும் மாட்டேன். தி.மு.க.,வுக்கு பக்கபலமாக இருப்பேன் என
கருணாநிதிக்கு அளித்த உறுதிமொழியை என்றும் காப்பேன்' என்று ஸ்டாலின் கையில்
சத்தியம் அடிக்காத குறையாக கூறியுள்ளார்.
எல்லாம் எதற்காக, கூடுதலாக ஒன்றிரண்டு சீட்டுகள் பெறவே!
பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, 2013ல் நடைபயணம் மேற்கொண்டவர்
வைகோ. இன்று, மதுவிலக்கு குறித்து மட்டுமல்ல; கள்ளச்சாராய மரணங்கள்,
லஞ்சம் - ஊழல், கனிமவளக் கொள்ளை என எந்த பிரச்னை குறித்தும் பேசுவது இல்லை.
கடந்த 1980களில் தி.மு.க., - எம்.பி., யாக இருந்த வைகோ, இலங்கை
தமிழர் களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து, பார்லிமென்டையே திரும்பிப் பார்க்க
வைத்தவர்.
அவரது திறமையை கண்டு, தன் மகன் ஸ்டாலினுக்கு போட்டியாக
வந்து விடுவாரோ என்ற அச்சத்தில், வைகோ மீது கொலை பழி சுமத்தி,
தி.மு.க.,விலிருந்து வெளியேற்றினார் கருணாநிதி.
அதற்காக துவண்டு
விடாமல், ம.தி.மு.க., என்ற கட்சியை ஆரம்பித்து, தி.மு.க.,வையும், வாரிசு
அரசியலையும் கடுமையாக விமர்சித்து வந்தார். 'இலங்கை தமிழர்களை பாதுகாக்க
தவறிய கருணாநிதி தமிழினத் தலைவர் அல்ல; தமிழின துரோகி' என்றார்.
இப்படி
துடிப்புமிக்க தலைவராக வலம் வந்த வைகோ, இன்று, கருணாநிதியின் வாரிசிடம்
ஒரு சில சீட்டுகளுக்காக சரணாகதி அடைந்து கிடப்பதை பார்க்கும்போது, காமெடி
நடிகர் விவேக் ஒரு படத்தில் கூறுவது போல், 'எப்படி இருந்தவர் இப்படி ஆகி
விட்டாரே' என்று தான் நினைக்கத் தோன்றுகிறது!
தடை விதிக்க வேண்டும்!
கே.ரங்கராஜன், சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: புரட்சி பாரதம் கட்சி தலைவரும், திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ஜெகன் மூர்த்தியை, தற்போது காவல் துறை தேடி வருகிறது.
தமிழகத்தின் சாபக்கேடே இதுதான்... குற்றம் செய்த அரசியல்வாதிகளை கைது செய்யப் போனால், ஒன்று முன் ஜாமின் வாங்கி விடுவர் அல்லது தலைமறைவாகி விடுவர்.
தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி, இரு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். ஸ்காட்லாந்து போலீசுக்கு நிகரான தமிழக காவல் துறையால், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பின், அவராகவே நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இத்தகைய குற்ற பின்னணி உள்ளவர்கள் தான் எம்.எல்.ஏ.,வாகி கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டும், ரவுடிகளை அடியாட்களாக வைத்துக்கொண்டும் அதிகாரம் செய்கின்றனர்.
ரவுடிகளும், அடிதடிகளில் இறங்கி அவர்களை சந்தோஷப்படுத்துகின்றனர்.
காவல் துறையால் தேடப்படும் நபர்களோ, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல், கொலை, பாலியல் வழக்கில் தொடர்பு உள்ளவர்களோ தேர்தலில் நிற்க, தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும்.
அத்துடன், ஒரே குடும்ப பின்னணியில் உள்ளவர்கள் கவுன்சிலர், எம்.எல்.ஏ., - எம்.பி., பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடாது என்றும் சட்டம் கொண்டு வர வேண்டும்.
அப்போது தான் மக்கள் சுதந்திரமாக செயல்பட முடியும்!
சட்டம் - ஒழுங்கு சூப்பர்!
பி.எஸ்.ரங்கசாமி, சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஒருவரை கொலை செய்ய வேண்டும் என்றால், ஒரு நொடியில் சுட்டு கொன்றிருக்கலாம் அல்லது 'அவரே போலீஸ் துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுட்டுக் கொண்டார்' என்று சொல்லி, அவரது கதையை முடித்து இருக்கலாம்.
எதற்காக மிருகத்தனமாக அடித்து கொல்ல வேண்டும்? திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் உடலில், 45 இடங்களில் காயம், காதுகளில் ரத்தம். விரல்களை வளைத்து உடைத்து இருக்கின்றனர், போலீசார்.
ஒரு திருட்டு புகாருக்கு இவ்வளவு கொடூர தண்டனையா? இஸ்லாமிய நாடுகளில் கூட இம்மாதிரி அடக்குமுறை இருக்காது.
இதுபோன்று, அண்ணா பல்கலை மாணவி பாலியல் குற்றவாளியிடம் ஏன் நடந்து கொள்ளவில்லை?
கடைசியில், அரசின் நிர்வாக தவறை மூடி மறைக்க, அஜித்குமாரின் தம்பிக்கு அரசு வேலை, நிலம் கொடுத்துள்ளனர்!
திராவிட மாடல் ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு அபாரம் தான் போங்கள்!
சிலைகளால் என்ன பயன்?
கு.அருண், கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கழகங்களின் ஆட்சியில் சிலைகள் வைப்பதும், மணிமண்டபங்கள் அமைப்பதும் தொடர் கதையாக உள்ளது. இதை தங்கள் அரசின் சாதனையாக வேறு கருதுகின்றனர்!
தற்போது, தி.மு.க., ஆட்சியில் கடந்த நாலரை ஆண்டுகளில், 63 சிலைகள் மற்றும் 11 மணிமண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
இதனால், மக்களின் வரிப்பணம் பல கோடிகள் வீணாகி உள்ளது. உண்மையில், சுதந்திர போராட்ட தியாகிகள், தமிழ் மொழி உயர்வுக்கு பாடுபட்டோர் வரலாற்றை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்று அரசு நினைத்திருந்தால், அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி பாடத்தில் பதிவு செய்திருப்பரே, இப்படி சிலைகளை நிறுவியிருக்க மாட்டார்கள்!
ஏற்கனவே, பொது இடங்களில் உள்ள சிலைகளை அகற்ற உயர் - உச்ச நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளபோதும், அதை கண்டுகொள்ளாமல் மேலும் சிலைகளை அமைத்து வருகின்றனர்.
அதற்கு பதில் தடுப்பணைகளையும், அணைகளையும் கட்டி அவற்றிற்கு அவர்கள் பெயர்களை சூட்டி இருந்தால், அது அவர்கள் புகழை நினைவு கூரச் செய்வதுடன், விவசாயிகள், பொதுமக்களுக்கு பயன்பட்டிருக்கும்; மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியும் மேம்பட்டிருக்கும்!
அத்துடன் காலம் உள்ளளவும் ஆட்சியாளர்களும் மக்களின் மனதில் நிறைந்திருப்பர்.
அதைவிடுத்து சிலைகள் அமைப்பதால் என்ன பயன்? அரசு சிந்திக்குமா?