PUBLISHED ON : ஜூலை 15, 2025 12:00 AM

ஆர்.ரகுராமன், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சர்க்கார்! திரைப்படத்தில், ஓட்டு போடுவதற்கென்று வெளிநாட்டில் இருந்து வரும் நடிகர் விஜய், தன் ஓட்டை வேறு ஒருவர் போட்டு விட்டதால், சட்டப் போராட்டம் நடத்தி ஓட்டு போடுவதோடு, கட்சி ஆரம்பித்து வெற்றியும் பெறுவார்.
இப்படத்தைப் போன்று கடந்த ஆண்டு, 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற பெயரில் கட்சி துவக்கி, கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தன் பண்ணை வீட்டில் இருந்தபடி கட்சியை இயக்கி வரும் விஜய், தமிழக அரசியலையும், தான் நடித்த சர்க்கார் படம் போலவே எண்ணிவிட்டார் போலும்!
திரைப்படத்தில் எவரோ எழுதிக்கொடுத்த வசனங்களை மனப்பாடம் செய்து, ரசிகர்களின் கைத்தட்டல்களை பெறுவதுபோல், சமீபத்தில் நடந்த த.வெ.க., மாநாட்டில், 'மலிவான அரசியல் ஆதாயங்களுக்காக, மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி, வேற்றுமையை விதைத்து, பா.ஜ., குளிர்காய நினைக்கிறது' என, அரசியல் வசனம் பேசியுள்ளார்.
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது. அங்கெல்லாம் மக்கள் மத ரீதியாக பிளவுபட்டுள்ளனரா என்ன!
'பலசாலியுடன் மோதும் போது, கோழையும் வீரனைப் போல் சித்தரிக்கப்படுகிறான்' என்பது புத்த மதத்தின் ஒரு பிரிவினரான, 'ஜென்' குருமாரின் தத்துவம்.
இதன் அடிப்படையில் தான் இன்று, லெட்டர் பேடு கட்சிகள் கூட மோடியை எதிர்த்து அரசியல் செய்வதாக பெருமை பேசுகின்றன. அக்கூட்டத்தில் புதிதாக சேர்ந்துள்ளவர் தான் நடிகர் விஜய்!
'மனிதருள் மாணிக்கம்' என்று புகழப்பட்ட நேருவுக்கே உலகில் இரண்டு நாடுகள் தான் விருது அளித்து கவுரவித்திருக்கின்றன.
ஆனால், பிரதமர் மோடிக்கு இஸ்லாமிய நாடுகள் உட்பட உலகிலுள்ள, 27 நாடுகள் தங்கள் நாட்டின் உட்சபட்ச விருதுகளை கொடுத்து கவுரவம் செய்துள்ளன.
இந்திய அரசியல் கட்சிகளிலேயே தேசப்பற்றும், கொள்கையில் உறுதியும் கொண்ட அரசியல் கட்சி ஒன்று உண்டென்றால், அது, பா.ஜ., தான்!
ஆனால், கருப்பு பணத்திலேயே உழன்ற போதிலும், வெளிநாட்டு காருக்கு வரி கட்டாமல், 'டிமிக்கி' கொடுக்க கோர்ட் படி ஏறியவர் விஜய்.
இந்த நேர்மையாளர் தான் நாட்டை சுத்தப்படுத்தப் போகிறாராம்!
தனக்கென்று கொள்கை இல்லாமல், திராவிட கட்சிகளின் இரவல் கொள்கையில், எழுதிக் கொடுத்ததை ஒப்புவிக்கும் விஜய்க்கு, ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் தியாகம் தெரியுமா? பா.ஜ., கடந்து வந்த பாதை தான் தெரியுமா?
ஓட்டுக்காக இன்றுவரை மக்களை பிளவுபடுத்தி வரும் கட்சி எதுவென்று, அரசியல் வரலாற்றை புரட்டிப் பார்த்து விட்டு விஜய் பேசட்டும்!
தி.மு.க.,வின் துாண்டிலுக்கு இரையாகுமா அ.தி.மு.க.,!
எஸ்.ஸ்ரீசைலம்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: புதுப்புது கதைகளை
கட்டி, எதிர்க்கட்சிகளையும், பொதுமக்களையும் திசை திருப்பி விடுவதில்
கைதேர்ந்தவர்கள் தி.மு.க.,வினர்.
இவர்கள் கூறும் கட்டுக் கதைகளை
மறுப்பதற்கே எதிர்க்கட்சிகளுக்கு நேரம் சரியாக இருக்கும். இதில் எங்கே
தி.மு.க., ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டுவது?
தங்கள் ஆட்சியின் தவறுகளை மறைக்க, ஏதாவது புதிய கதைகளை பற்றவைத்து, மக்களையும், எதிர்க்கட்சியினரையும் திசை திருப்பி விடுவர்.
தற்போது,
அ.தி.மு.க., - பா.ஜ., ஒன்றிணைவதை அவர்களால் ஏற்க முடியவில்லை. ஏனெனில்,
இக்கூட்டணி தி.மு.க., வெற்றியை பாதிக்கும். அதனால், எப்படியாவது
அக்கூட்டணியை முறித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு
திரிகின்றனர்.
அதற்கு வாய்ப்பாக, முருக பக்தர்கள் மாநாடு அமைந்து விட்டது.
மாநாட்டில்
அண்ணாதுரையையும், ஈ.வெ.ரா.,வையும் அவமதித்து விட்டனர் என்றும், அதை,
அ.தி.மு.க., வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது என்றும், தங்களது கொள்கையை
விட்டு, பா.ஜ.,விற்கு அடிமையாகி விட்டதாகவும் அடுத்த கதையை அவிழ்த்து
விட்டுள்ளனர்.
அத்துடன், தி.மு.க., கூட்டணி கட்சியினரோ,
'அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி இல்லை என்றால், தாங்கள் அ.தி.மு.க.,
கூட்டணிக்கு தாவ தாயாராக இருப்பது' போன்ற ஒரு தோற்றத்தையும்
ஏற்படுத்துகின்றனர். ஆனால், இது உண்மையில்லை.
அ.தி.மு.க.,வில் இருந்து பா.ஜ.,வை பிரிக்க கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க., கொடுத்த, 'அசைன்மென்ட்' தான், இதுபோன்ற அறிக்கைகள்!
இதை உண்மை என்று நம்பினால், அ.தி.மு.க.,விற்கு நிச்சயம் தோல்வியே மிஞ்சும்.
தி.மு.க.,
மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் துாண்டுதலுக்கு இரையாகி, பா.ஜ.,வுடனான
கூட்டணியை அ.தி.மு.க., முறித்துக் கொண்டால், வரும் தேர்தலில்,
எஸ்.டி.பி.ஐ., மன்சூர் அலிகான் போன்றோருடன் தான், அ.தி.மு.க., கூட்டணி
பேச்சு வார்த்தை நடத்த வேண்டி வரும்!
எடு ப்பது பிச்சை; ஏற நினைப்பது பல்லக்கு!
ப.ராஜேந்திரன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'சிவகங்கை மாவட்டம்,
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில்
மரணமடைந்தது தொடர்பாக, மதுரை நான்காவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான்
சுந்தர்லால் சுரேஷ் விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
சம்பந்தப்பட்ட போலீஸ் உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்...'
என, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
வழக்கும் சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தில், போலீஸ் அதிகாரிகளிடம் இருந்து தரப்பட்ட தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக இருப்பதாக முதல்வர் கூறுகிறார்.
அஜித்குமாரை காவலர்கள் தாக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறதே... இதைவிட என்ன ஆதாரம் வேண்டும் முதல்வருக்கு?
அத்துடன்,
'நியாயப்படுத்த முடியாத தவறு' என்று கூறி, வருத்தமும் தெரிவித்துள்ளார்.
நியாயப்படுத்த முடியாது என்றால், காவல் துறையை தன் கட்டுப்பாட்டில்
வைத்திருக்கும் முதல்வர், அப்பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும் அல்லவா?
'ஏதோ நானும் ஆறுதல் சொன்னேன்' என்பது போன்று, அஜித்குமாரின்
குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதை எப்படி தீர்வாக
எடுத்துக் கொள்ள முடியும்?
'ஒரு திருட்டு வழக்கை இப்படித்தான்
விசாரிக்க வேண்டுமா?' என்று தி.மு.க., - எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ் சமூக
வலைதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். உடன்பிறப்பே இப்படி கேட்கும்
நிலையில், இதற்கு முதல்வர் என்ன பதில் சொல்ல போகிறார்?
தன்
கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறையை சரியாக வழிநடத்த தெரியாத முதல்வர்
தான், 'தமிழகத்தை இனி, தி.மு.க., தான் நிரந்தரமாக ஆட்சி செய்யும்' என்று
இறுமாப்புடன் கூறுகிறார்.
'எடுப்பது பிச்சை; ஏற நினைப்பது பல்லக்காம்!'