PUBLISHED ON : நவ 03, 2026 12:00 AM

சிறைகளை மூடாதீர்கள்; காவலர்களை
நியமியுங்கள்!
-பைரவி தேவி, கோவில்பாப்பாகுடி, மதுரையில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: தேனி மாவட்ட சிறையிலிருந்து கைதிகள் தப்பிய சம்பவத்தைத் தொடர்ந்து, முதன்மைச் சிறைகளின் பாதுகாப்பைப் பலப்படுத்தவும், ஆள் பற்றாக்குறையை சமாளிப்பதற்கும் நான்கு கிளைச் சிறைகளை மூடி, அங்குள்ள காவலர்களை இடமாற்றம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பாதுகாப்பை உறுதி செய்வது மிக முக்கியமான ஒன்று என்பதில், எவருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. அதற்காக, கிளைச் சிறைகளை ஒவ்வொன்றாக மூடிக்கொண்டே போவது எந்த விதத்தில் சரியாகும்?
ஏற்கனவே, பாதுகாப்பு மற்றும் ஆள் பற்றாக்குறையை காரணம் காட்டி மதுரை, தேனி போன்ற தென் மாவட்டங்களில் செயல்பட்டு வந்த, 22 கிளைச் சிறைகளின் எண்ணிக்கை, 13 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேலும் நான்கு கிளைச் சிறைகளை மூடப் போவதாக சொல்கின்றனர். இப்படி, சிறைகளின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டே போனால், புதிதாக கைது செய்யப்படும் குற்றவாளிகளை எங்கே அடைப்பர்?
இதனால், கைதிகளை தொலை துாரத்தில் உள்ள சிறைகளுக்கு கொண்டு செல்வது, நீதிமன்றங்களில் ஆஜர்படுத்துவது என்று, காலதாமதமும், கூடுதல் சிரமமும் தான் ஏற்படும்!
மேலும், போதிய ஆட்கள் இல்லாத காரணத்தால், தற்போது பணியில் இருக்கும் சிறைக் காவலர்கள் கடுமையான பணிச்சுமைக்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு விடுப்பு வழங்குவதில் அடுக்கடுக்கான கட்டுப்பாடுகளும், கெடுபிடிகளும் விதிக்கப்படுவதால், அவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
திறமையான இளைஞர்கள், சீருடைப் பணியாளர் தேர்வை எழுதி, காவல் மற்றும் சிறைத்துறை பணிகளுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், ஆள் பற்றாக்குறையைக் காரணம் காட்டுவது ஏற்புடையதல்ல.
சிறைகளை மூடி, காவலர்களை மாற்றுவதற்குப் பதிலாக, காலியாக உள்ள சிறைக் காவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்பி, புதிய ஆட்களை பணியமர்த்துவதே இதற்கான நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும்!
எனவே, அரசு மற்றும் சிறைத்துறை நிர்வாகம் கிளைச் சிறைகளை மூடுவதற்கு பதில், புதிய காவலர்களை நியமித்து, அனைத்து சிறைகளின் பாதுகாப்பையும் பலப் படுத்த வேண்டும்!
lll
சோறு பொங்கும் போதும் நுரை வரும்!
அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’கடிதம்: கடந்த 2017 அ.தி.மு.க., ஆட்சியில், வைகை அணையின் நீர் ஆவியாகி வீணாவதை தடுக்க, தெர்மாகோல் அமைக்கும் திட்டத்தை துவக்கி வைத்தார், அப்போதைய அமைச்சர் செல்லுார் ராஜு.
இத்திட்டத்தின்படி, 10 லட்சம் ரூபாய் செலவில், தெர்மாகோல் அட்டைகளை அணையில் மிதக்க விட்டனர்.
அந்தோ பரிதாபம்... காற்றில் அந்த அட்டைகள் எல்லாம் பறந்து கரையில் வந்து விழுந்தன. அன்றிலிருந்து, செல்லுார் ராஜுவை, ‘தெர்மா கோல் விஞ்ஞானி’ என்றே மக்கள் அன்பாக அழைத்து வருகின்றனர்.
அவ்வகையில் தற்போது, தமிழகத்திற்கு புதிதாக ஒரு விஞ்ஞானி கிடைத்துள்ளார். அவர் தான், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ராஜிவ்.
திருப்பூர் காசிபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ராஜிவ், நொய்யல் ஆற்றில் அதிகரித்து வரும் நுரை பெருக்கத்திற்கு காரணம், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரில் சோப்பு, ஷாம்பு கலந்து ஆற்றில் சேர்வதால் தான், ஆற்றில் வெள்ளை நுரை வருகிறது’ என்று கூறி, தமிழக மக்களை வியக்க வைத்துள்ளார்.
இதில், நகைச்சுவை என்னவென்றால், ‘தெர்மா கோல் விஞ்ஞானி’ என்று மக்களால் செல்லமாக அழைக்கப்படும் செல்லுார் ராஜு, ‘ஆற்றையே மூடும் அளவுக்கு நுரை தள்ளும் சோப்பை கண்டுபிடித்த அமைச்சருக்கு, நோபல் பரிசு கொடுக்க வேண்டும்’ என்று கிண்டலடித்துள்ளது தான்!
முந்தைய ஆட்சி காலங்களில், சாயப்பட்டறை கழிவுகள் ஆற்றில் கலப்பதாலேயே, நுரை உருவாகிறது என்று துறை சார்ந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆனால், மருத்துவ பட்டம் பெற்ற ஓர் அமைச்சர், ‘ஆற்றின் நுரைக்கு சாயக்கழிவுகள் காரணமல்ல; வீடுகளில் பயன் படுத்தும் சோப்பும், ஷாம்பும் தான் காரணம்’ என்கிறார். அதிலும், ‘மழைக்காலத்தில் உயரமான இடத்தில் இருந்து, தாழ்வான இடத்தில் தண்ணீர் விழும் போதும் இந்த நுரை ஏற்படும்’ என்று சப்பை கட்டு வேறு கட்டுகிறார்.
மழைக்காலத்தில் மட்டுமல்ல; சாதாரண காலங்களிலேயே உயரமான இடத்தில் இருந்து தண்ணீர் பள்ளத்தில் விழுந்தால், அங்கு நுரை ஏற்படும்; ஆனால், தண்ணீர் விழுந்த பள்ளத்தின் ஓரத்தில் சிறிதளவு நுரை ததும்பி இருக்குமே தவிர, தண்ணீர் விழுந்த தடம் தெரியாத அளவு நுரையால் மூடப்பட்டு இருக்காது!
நல்லவேளை... சோறு பொங்கும் போது வரும் நுரையை, ஆற்றின் நுரைக்கு ஒப்பீடு செய்யாமல் விட்டாரே, அந்த அளவு அமைச்சர் புத்திசாலி தான்!
lll
