PUBLISHED ON : நவ 02, 2026 12:00 AM

சிவ.தியாகராஜ் பாண்டியன், காரைக்குடி, சிவகங்கை மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: நடந்து முடிந்த தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகள், ஓட்டு வங்கி இல்லாத, ‘லெட்டர் பேடு’ கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பதால், எந்த பலனும் இல்லை என்பதை, பெரிய கட்சிகளுக்கு கற்றுக் கொடுத்து விட்டது.
சட்டசபை தேர்தலில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகள், தி.மு.க.,வுடன் கூட்டணியில் இருந்தன. அப்போது, இத்தொகுதிகளில் தி.மு.க., பெற்ற ஓட்டுகள், 32 சதவீதம்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், மேலே குறிப்பிட்டுள்ள கட்சிகள் எல்லாம், த.வெ.க., கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், இடைத்தேர்தலில், தி.மு.க., பெற்ற ஓட்டுகளோ, 31 சதவீதம். பொதுத்தேர்தலை விட, ஒரு சதவீதம் தான் குறைவு.
இதிலிருந்து, கூட்டணி கட்சிகளால், தி.மு.க.,வுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை; தி.மு.க., தயவில் தான், அக்கட்சிகள் பிழைத்து வந்துள்ளன என்பதும், அக்கட்சிகள் பெறும் ஒட்டுமொத்த ஓட்டே, ஒரு சதவீதம் தான் என்பதும் வெட்டவெளிச்சமாகி விட்டது.
பொதுத்தேர்தலில், 31 சதவீதம் பெற்ற த.வெ.க., இடைத்தேர்தலில், 8 சதவீதம் கூடுதலாக பெற்று, 39 சதவீதம் ஓட்டு பெற்றுள்ளது என்றால், அது கூட்டணி கட்சிகளின் ஓட்டு அல்ல; அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மீதான அதிருப்தியில் விழுந்த, அ.தி.மு.க., ஓட்டுகள்!
இதில், தனித்து போட்டியிட்ட கம்யூ., கட்சி, 2,000 ஓட்டுகளைக் கூட பெறமுடிய வில்லை. இதன் வாயிலாக, தமிழகத்தில் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கை, இக்கட்சி வெட்டவெளிச்சமாக்கி விட்டது. இனி, கம்யூனிஸ்ட்டுகள் மறந்தும் கூட, ‘சீட்’ பேரம் பேச முடியாது.
மொத்தத்தில், இனி, லெட்டர் பேடு கட்சிகளின் தேர்தல் கால, ‘அட்ராசிட்டி’ இருக்காது!
கடந்த 1984ல் எம்.ஜி.ஆரை தேர்தலில் எதிர்கொள்ள முடியாமல், சின்னச் சின்ன கட்சிகளை எல்லாம் கூட்டணியில் சேர்த்து, ‘மெகா கூட்டணி’ என்று அறிவித்தார், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி.
அதன்பின் தான், தமிழகத்தில் புற்றீசல் போல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால், கருணாநிதி ஒரு சாணக்கியர்; ‘லெட்டர் பேடு’ கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொண்டாலும், எல்லாருக்கும் சீட் கொடுக்க மாட்டார். பணபலம் மற்றும் செல்வாக்கு உள்ளவர்களுக்கு தான் கொடுப்பார்; மற்றவர்களுக்கு இதயத்தில் மட்டும் தான் இடம் கொடுப்பார். வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தாலும், ஆட்சியில் பங்கு தர மாட்டார்.
ஆனால், த.வெ.க., அரசு ஆட்சியில் பங்கு கொடுத்துள்ளது; ஆனாலும் கூட்டணி கட்சிகள், த.வெ.க., அரசுக்கு விசுவாசமாக இருப்பரா என்று கேட்டால், அது சந்தேகம் தான். ஏனெனில், அவர்கள் தேர்தல் அரசியல் செய்தே கல்லா கட்டி பழகியவர்கள்.
எனவே, தி.மு.க., – அ.தி.மு.க., – த.வெ.க., என்ற மூன்று பெரும் கட்சிகள், இனி கூட்டணி விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும். ஓட்டு வங்கி இல்லாத சிறிய கட்சிகளை உதறி தள்ள வேண்டும். அப்போது தான் கட்சிகளின் எண்ணிக்கை குறையும்.
அது மாநிலத்திற்கு மட்டுமல்ல, மக்களுக்கும் நல்லது; தேர்தல் கமிஷனுக்கும் தலைவலி குறையும்!
lll
