தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/இது உங்கள் இடம்: நவ. 30

இது உங்கள் இடம்: நவ. 30

இது உங்கள் இடம்: நவ. 30


PUBLISHED ON : நவ 30, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 30, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மது இல்லாத தொகுதியாக மாற்றுவாரா சவுமியா?



முனைவர் செ.அ.ராகுல் கோல்டன், உதவி பேராசிரியர், சென்னையில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணியின் மனைவியும், அக்கட்சியின் எம்.எல்.ஏ.,வுமான சவுமியா, மது ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பிரச்னைகள் குறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்.

குறிப்பாக, மது ஒழிப்பு தொடர்பாக அவர் முன்வைக்கும் கருத்துகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.

மதுவால் குடும்பங்கள் சீரழிகின்றன; பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்; குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது; இளைஞர்களின் உழைப்பும், பொருளாதாரமும் பாதிக்கப்படுகின்றன. எனவே, மது ஒழிப்பு என்பது அரசியல் கோரிக்கையாக மட்டுமல்லாமல், சமூகத் தேவையாகவும் பார்க்கப்பட வேண்டும்.

அவ்வகையில், மது ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சவுமியா, தன் தொகுதியை மது இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவதற்கான முயற்சியை முன்னெடுக்கலாமே!

தன் தொகுதியில் உள்ள மதுக்கடைகளை கட்டுப்படுத்தவும், அவற்றை படிப்படியாகக் குறைக்க அரசை வலியுறுத்தவும், மதுவுக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கவும், மதுவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவும் செயல் திட்டங்களை மேற்கொள்ளலாம் அல்லவா?

மதுக்கடைகளை மூடுவது மட்டும் மது ஒழிப்புக்கான முழுமையான தீர்வாகாது; சட்டவிரோத மது விற்பனையை தடுப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மாற்று வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவது, மதுவிலிருந்து மீள விரும்புவோருக்கு மறுவாழ்வு அளிப்பது போன்ற நடவடிக்கைகளும் அவசியம்.

ஒரு மக்கள் பிரதிநிதி, தான் வலியுறுத்தும் கொள்கையை, தன் தொகுதியில் நடைமுறைப்படுத்த துவங்கினால், அது மற்ற தொகுதிகளுக்கும் மிகச் சிறந்த வழிகாட்டியாக அமையும்.

இதேபோன்று, பெண்கள் பாதுகாப்பை எடுத்துக் கொண்டால், தன் தொகுதியில் பெண்களுக்கு பாதுகாப்பான பொதுப் போக்குவரத்து, தெருவிளக்குகள், அவசர உதவி மையங்கள், சட்ட ஆலோசனை மற்றும் புகார் தீர்வு வசதிகளை மேம்படுத்த முயற்சிக்கலாம்; கல்வி வளர்ச்சியை எடுத்துக் கொண்டால், பள்ளிகளில் அடிப்படை வசதிகள், நுாலகங்கள், மாணவர்களுக்கான வழிகாட்டுதல், ஏழை மாணவர்களுக்கான கல்வி உதவிகள் ஆகியவற்றை முன்னெடுக்கலாம்!

இப்படி சட்டசபையில் தான் முன்வைக்கும் ஒவ்வொரு கோரிக்கைக்கும், தன் தொகுதியையே ஒரு செயல்முறை எடுத்துக்காட்டாக சவுமியா மாற்ற முயற்சித்தால், மற்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்வாரே...

செயல் திட்டங்களில் இறங்குவாரா சவுமியா?

lll



நம்பிக்கை முக்கியம்!



அ.அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை, நாகை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: ‘தப்பு செய்ய மாட்டேன்; தப்பு செய்யவும் விடமாட்டேன்’ என்று சபதமெடுத்ததை நம்பி தான், தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் ஓட்டுப் போட்டுள்ளனர்.

அதற்கேற்ப, துாய ஆட்சி என்பதில் இம்மியளவும் பிசங்காமல் ஆட்சி நடத்துவது தானே முதல்வருக்கு கவுரவம்!

ஆனால், கள்ளக்குறிச்சி த.வெ.க., – எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ் மீதான பாலியல் குற்றச்சாட்டை கண்டுகொள்ளாமல் மவுனமாக இருந்து, எம்.எல்.ஏ.,வை பாதுகாத்தது மாபாதகமல்லவா!

அதனால் தானே, ‘குற்றம் செய்த, எம்.எல்.ஏ.,வை பாதுகாத்த முதல்வரும் குற்றவாளி தான்’ என்று, எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

‘உயரிய பொறுப்பில் இருப்பவர், பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டத்தின் கீழ் புகார் அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பது, ஒரு துயரமான நிகழ்வாகும். கலெக்டர் நிலையிலேயே இத்தகைய சூழல் நிலவுகிறதென்றால், சாதாரண நிலையில் இருப்பவர் நிலைமை என்னவாகும் என்று நினைத்தாலே அச்சமாக இருக்கிறது’ என்று, சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளதை, முதல்வர் எளிதாக கடந்து போக முடியாது.

ஜூலை மாதம் எழுந்த புகாருக்கு, நான்கு மாதம் கழித்து, அதுவும், அ.தி.மு.க., வழக்கறிஞர் வழக்குத் தொடுத்து, நீதிமன்றம் அறிவுறுத்திய பின், காவல் துறை வழக்கு பதிந்து கைது செய்திருக்கிறது என்றால், ஒரு சாதாரண பெண்ணுக்கு எப்படி நீதி கிடைக்கும்?

எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டிய போதே, எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை எடுத்திருந்தால், இன்று அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டு இருக்காது. தேசிய மகளிர் ஆணையம் இப்பிரச்னையை கையிலெடுத்து, ஒரு வாரத்தில், ‘டி.ஜி.பி., விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’ என அறிவுறுத்திய பின்பும், நீதிமன்ற உத்தரவுப்படி வழக்குப் பதிந்த பின்பும், எம்.எல்.ஏ.,வை கட்சியை விட்டு நீக்காததும், அவரது பதவியை ராஜினாமா செய்ய சொல்லாததும், த.வெ.க., அரசுக்கு பெரும் களங்கமே!

மக்களிடம் அதிருப்தி இல்லை என்பதால் தான், இடைத்தேர்தலில் த.வெ.க., வென்றது. ஆனால், அருள் விக்னேஷ் மற்றும் திருப்பரங்குன்றம் தீபத்துாண் விவகாரம், த.வெ.க., அரசுக்கு பெரும் பின்னடைவையே ஏற்படுத்தும்.

இனியும் முதல்வர் உஷாராகவில்லை என்றால், அவர் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விடுவர் என்பதை, முதல்வர் உணர வேண்டும்!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us