PUBLISHED ON : அக் 12, 2026 12:00 AM
கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி விட்டதே!
அ.சுந்தர சுப்பிரமணியம், சென்னையில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின், தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு, வெளியில் இருந்து ஆதரவு கரம் நீட்டியுள்ள இரு கம்யூனிஸ்ட் கட்சியினரும், தங்கள் ஓட்டு வங்கியின் பலத்தை பரிசோதிக்க, மதுராந்த கம், தாராபுரம் இடைத்தேர்தலில் களம் இறங்கினர்.
அந்தோ பரிதாபம்... 2,000 ஓட்டுகளை கூட பெற முடியாமல், ‘டிபாசிட்’ இழந்துள்ளனர். தேர்தலுக்கு தேர்தல் கம்யூ., தேய்ந்து வருவதற்கு காரணம், அது, தன் கொள்கையில் இருந்து விலகி விட்டது தான்!
அக்கட்சியினர் மார்க்ஸியம், லெனினிசம் மறந்து, கோடிகளுக்கு அடிபணிந்து, தங்கள் கொள்கைகளில் சமரசம் செய்ததை, மக்கள் புரிந்து கொண்டு விட்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழவெண் மணியில் சிலிர்த்து எழுந்து போராடியவர்கள், வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தின் போது, வாய்மூடி மவுனம் காத்தனர்.
தொழிலாளர்களின் உரிமைக்காக போராடியவர்கள், துாய்மை பணியாளர்கள், பணி நிரந்தரமற்ற ஆசிரியர்கள், செவிலியர்கள் நடத்திய போராட்டங்களில், கைகட்டி வேடிக்கை பார்த்தனர்.
சிவப்பு சாயம் வெளிறிப் போய், நேரத்துக்கு ஏற்ப கலர் சாயம் பூசிக் கொண்டதை மக்கள் கண்டுகொண்டதே, கம்யூ., கட்சியின் இந்த பரிதாப தோல்விக்கு காரணம்!
ஆக மொத்தம், கம்யூனிஸ்டுகளின் நிலை, கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகி விட்டது!
ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்!
பட்டாபி சீதாராமன், மேட்டுப்பாளையம், கோவை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: கடந்த 50 ஆண்டு காலமாக தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகள் இரு மொழி கொள்கை என்ற பெயரில் ஊரை ஏமாற்றி, பல மொழி கொள்கைகளை பள்ளிகளில் மறை முகமாக ஆதரித்து வந்தன.
முன்னாள் முதல்வர்கள் பன்னீர்செல்வம், பழனிசாமி மற்றும் ஸ்டாலின் ஆட்சி காலங்களில் பள்ளிகளில் ஜெர்மன், பிரெஞ்சு போன்ற மொழிகளில் பிளஸ் ௨ வகுப்பு தேர்வு எழுத தனியார் பள்ளிகளில் அனுமதித்தனர்.
பண வசதியுள்ளோர் மட்டும் இதனால் பயனடைந்து வருகின்றனர். அதேநேரம் ஏழைப் பிள்ளைகள் படிக்கும் அரசு பள்ளிகளில் மட்டும் அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.
மீனாட்சி பிள்ளைத்தமிழ் பாடிய குமரகுருபரர் போன்ற மகான்கள், வடமொழியும் கற்று இருந்ததால், காசியில் டில்லி சுல்தானை சந்தித்து மடங்களை நிறுவ தேவையான அனைத்து உதவிகளையும் பெற்று, 400 ஆண்டுகளுக்கு முன் காசியில் தமிழ் மடத்தை நிறுவினர்.
ஆனால், திராவிட கட்சிகளோ தமிழை வளர்த்த சான்றோர்களை வசை பாடி தரம் தாழ்ந்து வர்ணித்துவிட்டு, ‘தமிழ் வாழ்க’ என வாழ்த்துகின்றனர்.
தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் வசிக்கும் வசதி படைத்தோர், தங்களின் குழந்தைகளுக்கு தனிப்பட்ட முறையில் ஹிந்தி கற்பிக்கின்றனர். ஆண்டிற்கு, 5 லட்சம் மாணவர்கள் ஹிந்தி பாடத்தில் தேர்ச்சி பெறுகின்றனர். நாளுக்கு நாள் இது அதிகமாகி கொண்டு தான் வருகிறது.
அப்படி இருக்கும் போது, அரசு பள்ளிகளுக்கு மட்டும் அனுமதி மறுப்பது ஏன்? ஏழை மாணவர்களும் பயனடையட்டுமே...
எத்தனை மொழிகள் கற்றாலும், தமிழ் மொழி அழியப் போவதோ அல்லது தரம் தாழ்ந்து போவதோ இல்லை. இதுகுறித்து நன்கு ஆலோசித்து கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு, சாதக, பாதகங்களை ஆராய்ந்து தமிழக வெற்றிக் கழக அரசு முடிவுகள் எடுக்கலாம்!
