PUBLISHED ON : அக் 12, 2026 12:00 AM
எஸ்.ஸ்ரீனிவாசன், சென்னையில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் மற்ற கமிஷனர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதும், விவாதங்களுக்குப் பின் பெரும்பான்மை அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுவதும் நடை முறையில் உள்ளது தான். இந்த விதிகளின் படியே தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் செயல்படுத்தப்படுகின்றன.
இதை புரிந்துகொள்ளாமல், தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று, காங்கிரஸ் போராட்டம் நடத்துவது அரசியல் குரோதத்தையே காட்டுகிறது.
இப்போராட்டத்தில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி முறைகேடுகளினால் தான், தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இது எத்தகைய முட்டாள்தனமான குற்றச்சாட்டு!
தேர்தல் ஆணையத்தால் நேரடியாக அதிகாரிகளை நியமிக்க முடியாது; மாநில அரசு நியமிக்கும் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி தான், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கப் பணிகள் நடக்கின்றன.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்றபோது, ஆளுங்கட்சியாக இருந்தது தி.மு.க.,!
அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நியமித்த அதிகாரிகள் தான், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளில் ஈடுபட்டனர்.
கட்சி முகவர்கள் தான், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபடாமல் இருக்க படிவங்களை வினியோகித்தனர்; அதை சரிபார்த்தனர். அப்படியிருக்கும் போது தேர்தல் முடிவுகளில் முறைகேடு நடந்ததால் தான், த.வெ.க., வெற்றி பெற்றது என்று கூறுவது எத்தகைய பித்தலாட்டம்!
கட்சி ஆரம்பித்து இரு ஆண்டுகளே ஆன, ஆட்சி அதிகாரத்தில் இல்லாத ஒரு கட்சி எப்படி முறைகேடு செய்திருக்க முடியும்?
த.வெ.க., வெற்றிக்கு மத்திய பா.ஜ., அரசு தான் சூழ்ச்சி செய்தது என்பது உண்மை என்றால், தன் கூட்டணி கட்சியான, அ.தி.மு.க.,வை அல்லவா வெற்றி பெற வைத்திருக்க வேண்டும்? மாறாக, அ.தி.மு.க., மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டதும், பா.ஜ., தன்னிடம் இருந்த இடங்களையும் இழந்தது எப்படி?
கொளத்துார் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தோல்வி அடைந்ததற்குக் காரணம், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தான் என்றால், துறைமுகம் தொகுதியில் உதயநிதி வெற்றி பெற்றதற்கு யார் காரணம்?
த.வெ.க., குறுக்கு வழியில் வென்றது என்றால், அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து, அமைச்சரவையில் பங்கு வகிப்பதும், ஆதரவு தருவதும் ஏன்?
திருமாவளவன் பதில் சொல்வாரா?
