தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/இது உங்கள் இடம்: எம்.ஜி.,ஆரை பின்பற்றுங்கள் விஜய்!

இது உங்கள் இடம்: எம்.ஜி.,ஆரை பின்பற்றுங்கள் விஜய்!

இது உங்கள் இடம்: எம்.ஜி.,ஆரை பின்பற்றுங்கள் விஜய்!


PUBLISHED ON : அக் 13, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 13, 2026 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எம்.ஜி.,ஆரை பின்பற்றுங்கள் விஜய்!



டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'எம்.ஜி.ஆர்., போன்று, முதல்வர் விஜயும் சுயமாக முடிவுகளை எடுக்க வேண்டும்' என்று வாசகர் ஒருவர் இப்பகுதியில் எழுதியிருந்தார். அவர் கூறியிருப்பது உண்மை தான்.

கடந்த 1985ல், பள்ளி மாணவர்களுக்கு இலவச காலணி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்த எம்.ஜி.ஆர்., 1987ல் ஏழை பெண்களுக்கும் இலவச காலணி கொடுக்க வேண்டும் என்று நினைத்து, அதற்கான புள்ளி விவரங்களை வழங்குமாறு, தன் தனி செயலரான பரமசிவம் மற்றும் துணை செயலர் பிச்சாண்டியிடம் உத்தரவிட்டார்.

அவர்களும் அன்றைய தமிழகத்தில் உள்ள பெண்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு, '50 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்குள் கீழ் உள்ளனர். அவ்வகையில், 60 லட்சம் கிராமப்புற பெண்களுக்கு காலணி வழங்க வேண்டி இருக்கும்.

ஒரு ஜோடி காலணி, 10 ரூபாய் என வைத்துக் கொண்டால், 60 லட்சம் மகளிருக்கு ஆண்டுக்கு, 6 கோடி ரூபாய் செலவாகும்' என்ற புள்ளி விவரங்களை, எம்.ஜி.ஆரிடம் வழங்கினர்.

மேலும், 'பள்ளி குழந்தைகளுக்கு மூன்று விதமாக காலணி வழங்கப்படுவதால், அது அவர்களுக்கு பொருந்தி விடுகிறது; ஆனால், பெண்களுக்கான கால் அளவுகள் மாறுபட்டு இருக்கும்' என, அத்திட்டத்தில் உள்ள நடைமுறை சிக்கலையும் கூறினர்.

உடனே, 'பாட்டா கடையில், 6 மற்றும் 7 அளவில் காலணிகள் இருக்கும் அல்லவா...அதை வாங்கி கொடுப்போம்; அது பெண்களுக்கு பொருந்தி விடும்' என்று கூறிவிட்டார், எம்.ஜி.ஆர்.,

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முன், எத்தனை பெண்கள் காலணி அணியாமல் நடக்கின்றனர் என்பதை நேரில் அறிய எண்ணினார், எம்.ஜி.ஆர்.,

அதற்கேற்ப, நாமக்கல்லில் ஒரு கட்சி நிகழ்ச்சி இருக்கவே, சேலத்திலிருந்து காரில் புறப்பட்டவர், பிச்சாண்டியை டிரைவர் இருக்கைக்கு அருகில் அமர வைத்து, சாலையில் இடதுபுறம் நடக்கும் பெண்களின் கால்களை கணக்கிட சொன்னார்.

டிரைவர் 30 கி.மீ., வேகத்தில் காரை செலுத்த, 20 கி.மீ., வரை காலணி அணியாத பெண்களை எண்ணி, அதை இரட்டிப்பாக கணக்கிட்டு, '70 சதவீதம் பெண்கள் காலணி அணியவில்லை; 30 சதவீதம் பெண்கள் அணிந்திருக்கும் காலணியும் தேய்ந்து போய் உள்ளது' என்றார், பிச்சாண்டி.

'சுகாதாரத்திற்காகத் தான் காலணி அணிகிறோம் என்பது பெண்களுக்கு புரிவதில்லை. அவர்களை பொறுத்த வரை இதை ஆடம்பர செலவாக கருதுகின்றனர். இதனாலேயே, செருப்பு வாங்க வசதியிருந்தாலும் அவர்களுக்கு வாங்கும் எண்ணம் வரு வதில்லை. அதனால், அரசு தன் சொந்த செலவில், அவர்களை செருப்பு அணிய பழக்கப்படுத்தி விட்டால், ஓராண்டு கழித்த பின், அவர்களே தங்கள் பணத்தில் வாங்கி கொள்வர்.

'நாமும் படிப்படியாக இத் திட்டத்தை விலக்கி கொள்ளலாம்; அரசுக்கும் நிதிச்சுமை இருக்காது. பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதும் ஒரு அரசின் கடமை' என்று கூறி, அத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினார், எம்.ஜி.ஆர்.,

அவர் எண்ணப்படியே, அடுத்த சில ஆண்டுகளில் பெண்கள் தங்கள் சொந்த பணத்தில் காலணி வாங்கி அணிய ஆரம்பித்தனர். அரசும் அதன்பின், அத் திட்டத்தை நிறுத்தி விட்டது.

எனவே, முதல்வர் விஜய் தான் செயல்படுத்த நினைக்கும் ஒவ்வொரு மக்கள் நலத் திட்டம் குறித்தும், அதிகாரிகளின் ஆலோசனைகளை பெற்றாலும், சுயமாக சிந்தித்து, முடிவு எடுக்க வேண்டும். அப்போதுதான், அத்திட்டம் மட்டுமல்ல; விஜயின் ஆட்சித் திறனும் காலம் கடந்து பேசப்படும்!



என்ன ஆபத்து வரப்போகிறது?



ரெ.ஆத்மநாதன், புளோரிடா மாகாணம், அமெரிக்காவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 1960களில் தொடங்கிய ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தால், என் போன்றோர் ஹிந்தி கற்கும் வாய்ப்பை இழந்தோம். பல சந்தர்ப்பங்களில், ஹிந்தி படிக்காததால் பல சிரமங்களைச் சந்தித்தோம்; அரை நுாற்றாண்டுக்கும் மேலாகியும், அந்த நிலை மாறாதது கவலை அளிக்கிறது.

ஒவ்வொரு மொழியும் ஓர் ஆயுதம் போன்றது; கையில் பல ஆயுதங்கள் இருந்தால் பாதுகாப்பு பலப்படும்; பயம் நீங்கும்.

அவ்வாறே பன்மொழி திறமையும், நமக்கு ஒரு தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுக்கிறது; அசந்தர்ப்பமான சூழ்நிலைகளில் ஆயுதமாக ப யன்படுகிறது.

தமிழர்கள் பன்மொழி வித் தகர்களாக இருந்ததால் தான், பல நுாற்றாண்டுகளுக்கு முன்பே, திரைகடலோடி திரவியம் சம்பாதித்து வந்தனர் .

மேலும், பல மொழிகளைப் பயின்றதால் தான் பாரதியார், 'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று தமிழின் பெருமையை உணர்ந்து பாடினார். அதுமட்டுமல்ல... இந்நாட்டின் கலாசாரமே, வடக்கும், தெற்கும் இணைந்து பயணிப்பது தான்!

தென் மாநிலத்தவர் புனித பயணமாக காசி, ஹரித்வார், ரிஷிகேஷ், கேதார்நாத் செல்வது போல், வடமாநிலத்தவர் தமிழக கோவில்களுக்கு வருகின்றனர்.

அவ்வழித்தடங்களில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் பெயர் பலகை வைப்பது, அவர்கள் எளிதாக தங்கள் பயணத்தை தொடர வசதியாக இருக்கும் அல்லவா?

இதனால், தமிழ் மொழிக்கு என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது என்று ஹிந்தியை அழிக்கின்றனர்?



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us