PUBLISHED ON : அக் 18, 2026 12:00 AM

வேலை வாய்ப்பை வழங்குங்கள்!
முனைவர் செ.அ.ராகுல் கோல்டன், உதவி பேராசிரியர், சென்னையில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்:
‘நுாறு இளைஞர்களை என்னிடம் தாருங்கள்; இந்த பாரதத்தை மாற்றிக் காட்டுகிறேன்’ என்றார், சுவாமி விவேகானந்தர்.
ஒரு நாட்டின் எதிர்காலம், இளைஞர்களின் அறிவிலும், உழைப்பிலும், ஒழுக்கத்திலும் இருக்கிறது என்பதை, அவர் உணர்ந்திருந்ததாலேயே இப்படிக் கூறினார்.
இன்று, பொருளாதாரத்தில் இந்தியா, உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக வளர்ந்து வருகிறது. விண்வெளியில் சாதனைகள், டிஜிட்டல் புரட்சி, அதிவேக நெடுஞ்சாலைகள், செயற்கை நுண்ணறிவு, உலக அளவிலான, ‘ஸ்டார்ட் – அப்’ நிறுவனங்கள் என, பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.
அதேநேரம், ஒரு பட்டதாரி இளைஞர், தன் கல்விக்கு ஏற்ற வேலையைப் பெற முடியாமல், ஆண்டுக்கணக்கில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் அவலமும் உள்ளது.
இவை தவிர்க்கப்பட வேண்டும். அதற்கு, மத்திய – மாநில அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
போட்டி தேர்வுகள் வெளிப்படையாக அமைவதுடன், கல்வி மற்றும் தொழில் துறைக்கு இடையில் உள்ள இடைவெளியை குறைக்க வேண்டும்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு வலுவான ஆதரவு வழங்கி, உள்ளூர் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும், அதன் வளங்களை அடிப்படையாகக் கொண்ட தொழில் வளர்ச்சித் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
‘இளைஞர்கள் தான் இந்நாட்டின் எதிர்காலம்’ என்று மேடைகளில் முழங்குவதுடன் நின்று விடாமல், அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்க வேண்டும்.
சுவாமி விவேகானந்தர் கேட்ட நுாறு இளைஞர்கள், இன்று நம் நாட்டில் கோடிக்கணக்கில் இருக்கின்றனர். ஆனால் அவர்கள், சுயநலவாதிகளாலும், நாட்டை அபகரிக்க முயற்சி செய்யும் கயவர்களாலும், மிகவும் தவறாக வழிநடத்தப்படுகின்றனர்.
இவர்களை நேர்வழிப் படுத்தி, வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டிய மிக முக்கிய பொறுப்பு மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உள்ளது; அதுவும், அவசரகால நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட வேண்டும்!
lll
கழகங்களின்
கைங்கர்யம்!
என்.கந்தசாமி, கோவையில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் – கோவை – - திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம், தமிழக அரசின், 100 நாள் சாதனைகளை விளக்கும் விளம்பரத்தில், எழுத்து பிழைகள் இடம் பெற்றிருப்பதாக, தமிழ் ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனராம்!
கடந்த 60 ஆண்டுகளாக, ‘தமிழ் எங்கள் மூச்சு, இருமொழி கொள்கை எங்கள் பேச்சு’ என்று முழங்கிக் கொண்டிருந்த திராவிட கட்சிகளின் ஆட்சியில் சுவரொட்டிகள், போஸ்டர்கள், பதாகைகள், பத்திரிகை விளம்பரங்களில் காணாத எழுத்து பிழைகளையா, தற்போது, த.வெ.க., ஆட்சியில் கண்டுபிடித்து விட்டனர்?
‘உடல் மண்ணுக்கு; உயிர் தமிழுக்கு’ என்ற கழகங்களின் ஆட்சியில் தான், லட்சக்கணக்கான ஆசிரியர்கள், ‘டெட்’ தேர்விலும், ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் தமிழ் பாடத்திலும் தோல்வி அடைந்தனர். இப்போது நடந்த, ‘டெட்’ தேர்விலும் கூட, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
இப்படி பள்ளி ஆசிரியர்களின் மொழி அறிவே ‘ததிங்கிணத்தோம்...’ என்று தாளமிடுகையில், போஸ்டர்களில் எழுத்துப் பிழை இல்லாமல் இருக்குமா?
கழகங்களின் கைங்கர்யத்தால், தமிழர்கள் தங்கள் மொழி அறிவை என்றோ இழந்து, ‘தங்கிலீஸ் தமிழர்’களாகி விட்ட நிலையில், எழுத்துப் பிழை வராமல், இலக்கண சுத்தமாகவா எழுதுவர்?
