PUBLISHED ON : அக் 20, 2026 12:00 AM
உணவு பாதுகாப்பு
துறை உறங்குகிறதா?
எஸ்.பி.சுந்தரபாண்டியன், திருப்பூரில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: தமிழகத்தில் உணவு பாதுகாப்பு துறை என்று, ஒரு துறை உள்ளது. இது செயல்படுகிறதா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.
காரணம், உணவு பொருட்களில் கலப்படம் மற்றும் சுகாதாரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது பொதுமக்கள் புகார் தெரிவிக்க, ‘இ – மெயில்’ மற்றும் ‘வாட்ஸாப்’ வசதியை கொடுத்துள்ளது, இத்துறை.
ஆனால், பொதுமக்கள் புகார் அனுப்பினால், பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை; பெயரளவில் நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கின்றனர்.
இதனால், முறைகேட்டில் ஈடுபடுவோர், அபராதம் செலுத்தி விட்டு, மீண்டும் அதே தவறை திரும்ப செய்கின்றனர்.
விளைவு... நாளுக்கு நாள் உணவு கலப்படம் அதிகரித்து வருகிறது.
சாலைகளில் தள்ளு வண்டி கடைகளில் விற்கப் படும், ‘சிக்கன் 65’ முதல், கடைகளில் விற்கப்படும் தின்பண்டங்கள் வரை அனைத்தும், ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெயை திரும்ப திரும்ப பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன.
மேலும், உணவில் செயற்கை நிறமிகளை அதிகம் சேர்ப்பது, சுகாதாரம் இல்லாமல் தயாரிப்பது என்று தரமில்லாத உணவு பொருட்கள், வெகு சாதாரணமாகவே இங்கு விற்கப்படுகின்றன. இதனால், புற்று நோய் உட்பட பல்வேறு நோய்களுக்கு மக்கள் ஆளாகின்றனர்.
இவற்றையெல்லாம் தடுக்க வேண்டிய உணவு பாதுகாப்பு துறையோ, என்றாவது ஒரு நாள் ஆய்வு செய்து, புகைப்படம் எடுத்து, அதை பத்திரிகைகளுக்கு கொடுத்து, தங்களை கடமை தவறாத வீரர்கள் போல் காட்டிக் கொள்கின்றனரே தவிர, தினசரி ஆய்வு மேற்கொள்வதில்லை.
இத்துறை உயிர்பெற்று எழ வேண்டும் என்றால், மஹாராஷ்டிரா மாநிலத்தில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரியாக இருக்கும் துக்காராம் முண்டே போன்ற திறமையான, துடிப்பான அதிகாரிகளை களமிறக்க வேண்டும்.
அப்போதுதான், தமிழக மக்களுக்கு கலப்பட உணவு வியாபாரிகளிடம் இருந்து விடிவு கிடைக்கும்!
lll
கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்குமா?
அ.தங்கதுரை, குள்ளப்ப கவுண்டன்பட்டி, தேனி மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: தேனி மாவட்டம், கம்பம் அருகில் உள்ளது, சுருளி அருவி. ஆன்மிக புனித தலமாகவும், சுற்றுலா பயணியர் வந்து செல்லும் இடமாகவும் இவ்வூர் விளங்குவதால், தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
ஆனால், வெகுதுாரத்தில் இருந்து வருவோர் இங்கு தங்கி செல்ல, எந்த வசதியும் இல்லை; அருகில் உள்ள நகரான கம்பத்தில் தான் தங்க வேண்டியுள்ளது. தமிழக அரசு சார்பில், விடுதி கட்டித் தரக்கோரி, கலெக்டருக்கு எத்தனையோ முறை மனுக்கள் அனுப்பியும், எந்த பலனும் இல்லை.
அதேபோன்று, கூடலுார் நகராட்சியில் இருந்து குள்ளப்ப கவுண்டன்பட்டி, கருனாக்க முத்தன்பட்டி கிராமம் வழியாக, சுருளி அருவிக்கு போதுமான பேருந்து வசதியும் இல்லை.
இதனால், இப்பகுதியில் இருந்து கேரளாவிற்கு கூலி வேலைக்கு செல்வோர், வியாபாரிகள் கம்பம் சென்று, கூடலுார் செல்ல வேண்டி உள்ளது.
அதனால், கூடலுாரில் இருந்து குள்ளப்ப கவுண்டன்பட்டி வழியாக சுருளிக்கு பேருந்து வசதியும், பக்தர்கள் தங்கி செல்ல விடுதி வசதியும் தமிழக அரசு செய்து தர வேண்டும்.
எங்கள் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்குமா?
lll
தனி சட்டம்
இருக்கிறதா?
சி.வி.பாலகிருஷ்ணன், பெங்களூரிலிருந்து எழுதுகிறார்: கோவையில் ஒரு அறை உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு, சமீபத்தில் மின் இணைப்புக்கு விண்ணப்பித்தேன். அதற்கு, வர்த்தக லைன் தான் கொடுக்க முடியும் என்று மின்வாரிய அதிகாரிகள் கூறிவிட்டனர்.
குடியிருக்கும் வீட்டுக்கு எதற்கு வர்த்தக லைன் என்று கேட்டால், அதற்கு முறையான பதில் இல்லை.
தமிழகத்தில் ஒரு அறை உள்ள வீட்டிற்கு, ‘டொமஸ்டிக்’ இணைப்பு கொடுக்கக்கூடாது என்று, ஏதாவது சட்டம் இருக்கிறதா?
