PUBLISHED ON : டிச 15, 2025 03:01 AM

வைகோவின் காமெடி நாடகம்!
ஆர்.மகேசன், அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'போதைப்பொருட்களால் இளைஞர் சமுதாயம் பாழாகிறது; போதையில் பஞ்சாப் போல் தமிழகம் ஆகிவிடும். இதைத்தடுக்க வலியுறுத்தி நடைபயணம் மேற்கொள்ளப்போகிறேன். அதை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கப்போகிறார்' என்று கூறியுள்ளார், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக தலைவர் வைகோ.
அட அட... தமிழக மக்களின் மீது என்னே ஒரு கரிசனம்? அதுசரி... போதை கலாசாரத்தை தடுக்க சொல்லி, யாரை வலியுறுத்தப் போகிறார் வைகோ? அமெரிக்க அதிபர் டிரம்பையா இல்லை ரஷ்ய அதிபர் புடினையா?
நடைபயணத்தின் முடிவில் மேற்படி நபர்களை சந்தித்து தான், போதைப் பொருளை ஒழிக்க வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுக்கப்போகிறார் போலும்... அதுதான், நடைபயணத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கப் போவதாக கூறியுள்ளார், வைகோ.
ஒரு படத்தில் அரசியல்வாதியாக நடித்த தமாஷ் நடிகர் வடிவேலு, 'தலைநகர் டில்லி வெகுதுாரத்தில் இருப்பதால்தான் நமக்கு கிடைக்கவேண்டிய சலுகைகள் தாமதமாக வந்து சேருகிறது; டில்லியை தமிழகத்திற்கு அருகில் கொண்டுவந்து வைத்துவிட்டால், சலுகைகள் விரைவில் வந்து சேர்ந்து விடும்' என்று கூறுவார்.
அதுபோன்று, வைகோ மட்டும் நடிப்பு துறையில் நுழைந்திருந்தால், வடிவேலுவைவிட சிறந்த காமெடியனாக திகழ்ந்திருப்பார்.
தமிழகத்தில் மறைமுகமாக நடை பெறும் போதைப் பொருள் வியாபாரத்தைவிட, வெளிப்படையாக மது விற்பனை ஜோராக நடக்கிறது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஆண்களால், லட்சக்கணக்கான குடும்பங்கள் சீரழிந்து, தமிழகம் இளம் விதவைகள் நிறைந்த மாநிலமாக உருவாகிக் கொண்டிருக்கிறது.
இப்படி மாநிலத்தை அவல நிலையில் வைத்திருப்பதே, ஆளும் தி.மு.க., அரசு தான். அக்கட்சியின் கூட்டணியில் இருக்கும் வைகோ, முதல்வரிடம் நேரிடையாக கோரிக்கை வைக்காமல் நடை பயண நாடகத்தை அரங்கேற்ற துடிப்பது ஏன்?
மதுக்கடைகளை மூட வேண்டும் என்று சொல்வதற்கு கூட திராணியில்லாமல், மது என்ற வார்த்தையை தந்திரமாக தவிர்த்து, 'போதைப் பொருள்' என்று வார்த்தை ஜாலம் காட்டியிருக்கும் வைகோவிற்கு, போதைப் பொருட்களின் பட்டியலில் மது இடம்பெறவில்லை போலும்!
இப்படித்தான், கடந்த ஆண்டு மதுவுக்கு எதிராக மகளிர் மாநாடு நடத்தி, மது விற்பனை செய்யும் ஆட்சியாளர்களையே அதில் பங்கெடுக்கச்செய்து, மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியது போல் ஒரு காமெடி நாடகத்தை அரங்கேற்றினார், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.
தமிழக இளைஞர்கள் மற்றும் பெண்கள் நலனில் வைகோ, திருமாவளவன் போன்றோருக்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால், ஒவ்வொரு டாஸ்மாக் கடை முன்பும், தமிழக அரசியல்வாதிகள் நடத்தும் மதுபான ஆலைகளின் முன்பு அல்லவா போராட வேண்டும்?
அதைவிடுத்து, மக்களை மூடர்களாக நினைத்து, மாநாடு, நடைபயணம் என்ற பெயரில் எதற்கு இந்த நாடகம்?
விவசாயிகளே... மாற்றி யோசியுங்கள்! எ.ஆர்.நாகராஜன், புவியியல் வானியல் ஆய்வாளர், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தற்போது நாம் அடிக்கடி படிக்கும், பார்க்கும் செய்தி... அதிக மழை காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள், மழைநீரில் மூழ்கி அழுகி விட்டன; பாசனத்திற்கு போதுமான அளவு நீர்வரத்து கிடைக்காததால், பயிர்கள் கருகின என்பது தான்!
கால நிலை மாற்றம் என்று இதற்கு காரணம் சொன்னாலும், இவை நம்மால் சரி செய்ய முடியாத பிரச்னை அல்ல!
இதற்கான தீர்வு விவசாயிகளிடமே உள்ளது. இது ஒரு கூட்டு முயற்சி என்பதால், அவர்கள் மனது வைத்தால், இதிலிருந்து தப்பிக்கலாம்.
எப்படியெனில், நதியில் இருந்து வரும் நீர், பிரதான கால்வாய்களின் வழியாக, சிறு கால்வாய்கள் வாயிலாக, பல்லாயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாய்ச்சப்படுகிறது.
இந்நிலையில், வெள்ளம் வரும் சமயம், இந்த நீர் சென்று பயிர்களை அழிப்பதும், நீர் வரத்து இல்லை என்றால், பயிர்கள் கருகுவதும் வழக்கமான நிகழ்வாக உள்ளன.
இதைத் தவிர்க்க, ஒவ்வொரு, 50 ஏக்கர் நிலங்களுக்கு இடையேயும் ஒன்று அல்லது இரண்டு ஏக்கர் நிலத்தை நீர் சேமிப்புக்காக, நீர் நிலையாக மாற்ற வேண்டும்.
இவ்வாறே பல்லாயிரம் ஏக்கர்களுக்கு இடையே, சில நுாறு ஏக்கர்கள் நீர் நிலைகளாக மாற்றப்படும்போது, வெள்ள காலங்களில் கால்வாய்களின் வழியாக வரும் அதிகப்படியான நீரை, இந்த நீர் சேமிப்பு நிலையம் உள்வாங்கிக் கொள்ளும்; சேமித்து வைக்கப்பட்டுள்ள இந்நீர், வறட்சி காலத்தில் பாசனத்துக்கு உதவும்!
இதனால், மழை, வறட்சியால் பயிர் பாதிப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போய் விடும்.
அதே சமயம், இதற்காக நிலத்தை தாரை வார்த்தவர்களுக்கு போதுமான கிரய தொகையையோ அல்லது அந்நிலத்தின் விளைச்சலுக்கு ஏற்ப, குறிப்பிட்ட பங்கையோ அனைவரும் பகிர்ந்து வழங்கி விடுவதாக முறைப்படி ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்!
இந்த கூட்டு ஒத்துழைப்பின் வாயிலாக, நிலம் தாரை வார்த்தவரும் இழப்பை சந்திக்க மாட்டார்; நிலத்தில் பாடுபடுவோரும், மழை வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகளால் இழப்புகளை சந்திக்க மாட்டார்கள்.
அத்துடன், நிலத்தடி நீர் அதிகரித்து, மூன்று போக விவசாயம் தொடரும்!
இதை விவசாயிகள் திறந்த மனதுடன், நேர்மையாக கடைப்பிடித்தால், விளைச்சல் கூடுவதுடன், கோடிக்கணக்கான பயிர் இழப்பீடுகளும், மனித உழைப்பும் தடுக்கப்படும்!
வறட்சிக்கும், வெள்ளத்துக்குமான தொடர் அச்சம் விலகும். விளைபொருட்கள் பெருக்கத்தால் விலையும் குறையும்,
ஏற்றுமதி பெருகும்; விவசாயம் மீதான அவநம்பிக்கையும் குறையும்; விவசாயத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
அரசும், சம்பந்தப்பட்ட விவசாய சங்கங்களும் இதுகுறித்து ஆய்வு செய்து, நல்ல வழியை காண முன்வர வேண்டும்!
l

