PUBLISHED ON : டிச 16, 2025 03:02 AM

பறிபோகும் நீதித்துறையின் சுதந்திரம்!
கே.என்.ஸ்ரீதரன், பெங்களூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய பார்லிமென்டில் நோட்டீஸ் கொடுத்த எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நடவடிக்கை, நீதித்துறைக்கு விடப்பட்ட அச்சுறுத்தல் என்பதில் சந்தேகமில்லை.
ஹிந்துக்களுக்கு ஆதரவாக ஒரு தீர்ப்பு சொல்லிவிட்டால், அந்த நீதிபதியின் ஜாதியை சொல்லி திட்டுவதும், அவரை பதவி நீக்கம் செய்ய முயற்சிப்பதற்கு பெயர் தான் மதச்சார்பின்மையா?
ஒரு நீதிபதி முறைகேடுகள் செய்து, லஞ்சம், ஊழல் வாயிலாக சொத்து குவித்திருந்தாலோ அல்லது திறமையற்றவராக இருந்தால் மட்டுமே அவரை பதவி நீக்கம் செய்ய முடியும் என்பது, 'இண்டி' கூட்டணி தலைவர்களுக்கு தெரியாதா?
ஏற்கனவே, நீதிபதி சுவாமிநாதன் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துவிட்டு, நீதிபதியை பதவி நீக்கம் செய்யக்கோர என்ன காரணம்?
'எங்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கினால், பதவியில் இருந்து நீக்கப்படுவீர்கள்' என்று உயர், உச்ச நீதிமன்ற நீதிபதிகளை மிரட்டுவது தானே இதன் உள் அர்த்தம்!
முன்னாள் நீதிபதிகள், 56 பேர் நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருந்தாலும், ஜனநாயகத்தின் ஆணிவேரான நீதித்துறையின் சுதந்திரத்தை பறிக்க நினைக்கும் அரசியல்வாதிகளின் இந்த ரவுடித்தனத்திற்கு, நாட்டில் உள்ள அனைத்து நீதிபதிகளும் ஒருமித்து கண்டனம் எழுப்ப வேண்டும்.
இப்போது, இவர்களை கண்டுகொள்ளாமல் விட்டால், இதையே பிற மாநிலங்களில் ஆளும் அரசுகள் முன்மாதிரியாக எடுத்துக் கொள்வர். இதனால், இங்கு நீதித்துறையே செயல் இழந்து விடும்.
எனவே, அரசியல்வாதிகளின் சதுரங்க சூழ்ச்சிக்குள் விழுந்து விடாமல், அனைத்து நீதிபதிகளும், இதை எதிர்த்து கண்டன குரல் எழுப்ப வேண்டும்!
கனவிலும் நடக்காது! எஸ்.பி.குமார், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில் வழக்கம் போல், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் உளறி கொட்டியுள்ளார். ஓட்டு திருட்டு நடைபெற்றதாலேயே பா.ஜ., எல்லா இடங்களிலும் வென்று வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
கர்நாடகா, தெலுங்கானா, ஹிமாச்சல் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இன்னும் பல மாநிலங்களில், பா.ஜ.,வுக்கு இணையான எண்ணிக்கையில் உறுப்பினர்களை வைத்துள்ளது. அங்கெல்லாம் ஓட்டு திருட்டு செய்து தான் காங்., ஜெயித்ததா?
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா ஆட்சிக்காலத்தில், தனக்கு பிடிக்காத மாநில அரசுகளின் ஆட்சிகளை பலமுறை கவிழ்த்துள்ளார்.
அவரது ஆட்சிக் காலத்தில், பரபரப்பாக பேசப்பட்ட வழக்கு இது...
கடந்த 1971, மே 24ல் டில்லி பாரத ஸ்டேட் வங்கிக்கு வந்த ஒரு போன் காலை தொடர்ந்து, தலைமை காசாளர் மல்ேஹாத்ரா, நகர்வாலா என்பவரிடம், 60 லட்சம் ரூபாயை கொடுத்த வழக்கில் காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், காங்கிரஸ் கட்சியினரால் வங்கியில் ஒளித்து வைத்து வைக்கப்பட்ட பணம் அது என்பது தெரிய வந்தது.
காசாளர் மாட்டிக் கொண்டதால், வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது. ஆனால், குற்றவாளியை கண்டுபிடிக்கும் முன், அவ்வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரியும், பணத்தை பெற்ற நகர்வாலாவும் மர்மமாக இறந்தனர். அத்துடன், அந்த வழக்கு முடிந்து விட்டது.
அதேபோன்று, காங்., ஆட்சிக்கு நாடு முழுதும் எதிர்ப்பு அலை வீசுகிறது என்றதும், சட்டத்தில் திருத்தம் செய்து, எமர்ஜென்சியை பயன்படுத்தி, ஓர் ஆண்டு தேர்தலையே தள்ளி வைத்தார், இந்திரா.
எதிர்க்கட்சிகள் வழக்கு தொடுக்கவே, அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒட்டி, தன் பதவியை ராஜினாமா செய்து தேர்தலை சந்தித்தவர், காலம் காலமாக ஜெயித்து வந்த ரேபரேலி தொகுதியில், ராஜ்நாத் சிங் என்ற ஒரு சாதாரண வேட்பாளரிடம் தோற்றுப் போனார்.
இப்படி, காங்., ரத்தத்தில் ஊறிப்போன விஷயம் தான் குறுக்கு வழி வெற்றி; அது கிடைக்காதபட்சத்தில், எதிர்தரப்பினர் மீது வீண் பழி சுமத்துவது அவர்களது வழக்கம்.
'முன்னேர் சென்ற வழியில், பின்னேர் செல்லும்' என்பது போல், தன் பாட்டியின் வழியை அப்படியே கடைப்பிடிக்கப் பார்க்கிறார், ராகுல். ஆனால், அந்த பருப்பு பா.ஜ.,விடம் வேகாது.
மத்திய பா.ஜ., அரசை அகற்ற வேண்டும் என்பதற்காக, மதவாத சக்திகளுடன் கைகோர்த்து, வெளிநாடுகளில் நாட்டின் நன்மதிப்பு குறையும் வகையில் பேசுவது, தேச விரோத கருத்துகளை பகிர்வது என்று, நாட்டு மக்களிடம் நன்மதிப்பை இழந்து விட்டார், ராகுல்.
இனி, என்னதான் தில்லாலங்கடி வேலைகள் செய்தாலும், பிரிவினைவாத சக்திகளுடன் கூட்டணி வைத்து, போலி மதச்சார்பின்மை பேசும் வரை, ஆட்சியில் ராகுல் அமர்வது என்பது கனவிலும் நடக்காது!
கடும் நடவடிக்கை தேவை! மு.சுப்புராஜ், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த மாதம் தென்காசி, கடையநல்லுார் அருகே இரு தனியார் பேருந்துகள் மோதி ஆறு பேர் பலியாயினர். சமீபத்தில், திருவாரூர் அருகே அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி, 10 பேர் படுகாயமடைந்தனர். தனியார் பேருந்துகளின் கட்டுப்பாடு இல்லாத வேகமே இத்தகைய விபத்துகளுக்கு காரணம்.
நகரத்திற்குள் கூட, அதிக ஒலியுடன், அதி வேகமாக இப்பேருந்துகள் செல்கின்றன. இதில், தேசிய நெடுஞ்சாலைகள் என்றால் கேட்கவே வேண்டாம்; அசுர வேகத்தில் செல்கின்ற ன.
அடுத்த நிறுத்தத்தில் இருக்கும் பயணியரை தங்கள் பேருந்தில் ஏற்றி விட வேண்டும் என்று, சாலையில் செல்லும் வாகனங்களை முந்திக் கொண்டு அசுர வேகத்தில் செல்கின்றன. இதனாலேயே பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றன.
இதற்கு, 'அதிக பயணியர்; அதிக வசூல்' என்ற தாரக மந்திரத்தை கொண்டு செயல்படும் பேருந்து முதலாளிகளின் நிர்பந்தமும் ஒரு காரணம் என்று சொல்லலாம்.
இதனால், பாதிக்கப்படுவது பொதுமக்கள் மட்டுமல்ல; பேருந்து முதலாளிகளும் தான்!
எனவே, தனியார் பேருந்து முதலாளிகள், தங்கள் ஓட்டுநர்களுக்கு இதுகுறித்து கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து, உயிரிழப்புகளை தடுக்க உதவ வேண்டும்.
அரசும் இதில் கடுமையான விதிமுறைகளை கடைப்பிடிப்பதுடன், அனைத்து பேருந்துகளுக்கும் வேகக் கட்டுப் பாட்டு கருவியை பொருத்த வேண்டும். அதிக ஒலி எழுப்பியபடி, அசுர வேகத்தில் செல்லும் பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!

