/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
பா.ஜ.,வின் பதிலடியை எதிர்கொள்வாரா ராகுல்!
/
பா.ஜ.,வின் பதிலடியை எதிர்கொள்வாரா ராகுல்!
PUBLISHED ON : டிச 17, 2025 03:31 AM

அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: விடுதலை போராட்டத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து, எண்ணற்றவர்கள் தங்கள் உயிரையும், உடைமைகளையும் இழந்துள்ளனர். பலர் கொடும் சிறை தண்டனையை அனுபவித்தனர். ஆனால், நாடு விடுதலை பெற்ற பின், அவர்களின் ஒட்டுமொத்த தியாகத்திற்கும் உரிமை கொண்டாடி, அதன் பலனை அனுபவித்தது நேரு குடும்பம் மட்டுமே!
ஜனநாயகம் எனும் பெயரில், நேருவின் மகள் இந்திரா, அவர் மகன் ராஜிவ் என தொடர்ந்த வாரிசு ஆட்சியில், ராஜிவின் மரணத்திற்கு பின், அவர் மனைவியான சோனியா இந்தியாவை ஆளத் துடித்தார்.
'வெளிநாட்டுப் பெண் இந்தியாவை ஆளக்கூடாது; அதற்கு நாங்கள் இடம் தர மாட்டோம்' என்று, கடுமையாக எதிர்த்து நின்றது, பா.ஜ., தான். அன்றைய ஜனாதிபதி அப்துல் கலாம், சோனியாவை பிரதமராக்க உடன்படவில்லை.
தங்கள் சொல்லுக்கு ஆடும் ரப்பர் ஸ்டாம்ப் பதவியாக ஜனாதிபதி பதவியை நினைத்திருந்த காங்கிரசுக்கு, அப்துல் கலாமின் இந்த அதிரடி, அதிர்ச்சியை தந்தது என்றால் மிகையில்லை.
அதன் விளைவு தான், இன்றுவரை அப்துல் கலாம் இந்தியர்களுக்கு எல்லாம் மாமனிதராக தெரிந்தாலும், சோனியா குடும்பத்திற்கு மட்டும் வில்லனாக தெரிகிறார்.
தான் பிரதமராக முடியாது என்று தெரிந்த பின், வேறு வழியில்லாமல் பொருளாதார மேதை மன்மோகன் சிங்கை பிரதமர் பதவியில் அமர்த்தி, நிழல் பிரதமராக செயல்பட்டார் சோனியா.
பத்து ஆண்டுகால காங்., ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்!
விளைவு... அடுத்து வந்த பார்லிமென்ட் தேர்தலில், பல மாநிலங்களில் ஆட்சியை இழந்த காங்கிரஸ், இன்றுவரை எழுந்து நிற்க முடியவில்லை.
இப்போது, அக்கட்சியின் பட்டத்து இளவரசர் ராகுல், தங்கள் குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு வந்துவிடக் கூடாது என்று, வாள் கொண்டு போராடாமல், வாய் கொண்டு போராடுகிறார்; இயலாமையில் பொங்கு கிறார்; பொய் கதைகளை புனைந்து மகிழ்கிறார்.
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாத வெறுப்பில், ஓட்டு திருட்டு என சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளைபோல் புலம்புகிறார்.
இதுவரை ராகுலின் புலம்பலை கண்டுகொள்ளாமல் இருந்த பா.ஜ., 'பொறுத்தது போதும்; பொங்கி எழு' என்பது போல், தற்போது, லோக்சபாவில் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது. அதிலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'இனி, ஓட்டு திருட்டு என்று ராகுல் பேசினால், அதற்கான பதிலடி பலமாக இருக்கும்' என்று எச்சரித்துள்ளார்.
வாய்வீரம் காட்டும் ராகுல் இனி என்ன செய்வார்... மீண்டும் ஓட்டு திருட்டு என்று புலம்புவாரா இல்லை பதிலடியை எதிர்கொள்வாரா?
நாடகம் அரங்கேறும்!
ஜி.சூர்ய நாராயணன், விழுப்புரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திராவிட மாடல் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, சாதாரணமாக கடந்து செல்லக் கூடிய நிகழ்வுகளை கூட, ஆளுங்கட்சிக்கு எதிரான போராட்டமாக முன்னெடுத்தார். 'இதில் எல்லாமா அரசியல் செய்வது' என்று கேட்டால், 'அரசியல் கட்சி என்றால், அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்?' என்றார்.
இப்படி ஆட்சியில் இல்லாத போதே, அதிகார பசிக்காக எல்லாவற்றிலும் அரசியல் அவியல் செய்த ஸ்டாலினுக்கு, இன்று அதிகாரத்தை தக்க வைக்க அவியலுடன், காரமும் தேவைப்படுகிறது.
அதனால் தான், திருப்பரங்குன்றம் தீப துாணில் தீபம் ஏற்றலாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், சிறுபான்மை ஓட்டுக்காக அதை செயல்படுத்த மறுத்ததுடன், தீர்ப்பு சொன்ன நீதிபதியை பதவியில் இருந்து நீக்க பார்லிமென்டில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது, தி.மு.க.,
பார்லிமென்ட் விசாரணை குழுவில், நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக தி.மு.க.,அரசால் என்ன குற்றச்சாட்டை முன்னிறுத்த முடியும்?
கோவில் நிலத்தில் உள்ள தீபத் துாணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதற்காக, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தி.மு.க., சொன்னால், அதை அப்படியே விசாரணை குழு ஏற்று, ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்து விடுமா என்ன?
தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கவில்லை என்பதற்காக, ஓர் உயர் நீதிமன்ற நீதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்டால், இங்கு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு என்ன வேலை?
நாட்டில் உள்ள நீதிமன்றங்கள் அனைத்தையும் இழுத்து மூடி விடலாமே!
லோக்சபா, ராஜ்யசபா இரண்டிலும் பா.ஜ., பெரும்பான்மை பெற்றிருக்கும் நிலையில், நீதிபதி சுவாமிநாதன் மீதான பதவி நீக்க தீர்மானம் நிறைவேறப் போவதில்லை என்பது, தி.மு.க.,விற்கு நன்கு தெரியும்.
இருந்தும், இந்நாடகத்தை தி.மு.க., அரசு அரங்கேற்றக் காரணம்...
வரும் சட்டசபை தேர்தலில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு கிறிஸ்துவர்களின் ஓட்டு சென்று விடும் என்பதால், முஸ்லிம்கள் ஓட்டுகளை சிந்தாமல், சிதறாமல் அறுவடை செய்யவே, இந்த நாடகம்!
தி.மு.க., எனும் நாடக கம்பெனி இழுத்து மூடப்படாத வரை, இதுபோன்ற ஜனநாயக படுகொலைகளும், அதுகுறித்த அவதுாறு நாடகங்களும் அரங்கேறத் தான் செய்யும்!
பொத்தம் பொதுவாக குற்றம் சாட்டலாமா?
ஆர்.ராமையா, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'வக்ப்' சொத்துக்களை பதிவு செய்ய துவங்கப்பட்ட, 'உமீத்' தளத்தில், 3.55 லட்சம் வக்ப் சொத்துக்கள் மாயமாகி உள்ளன. ஜம்மு- - காஷ்மீரில் மட்டும், 7,240 சொத்துக்கள் காணாமல் போயுள்ளன.
'இந்த இடைவெளி வக்ப் சொத்துக்கள் குறித்த வெளிப்படை தன்மை மற்றும் பாதுகாப்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன' என்று கூறியுள்ளார், மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவி மெஹபூபா முப்தி.
ஒரு திரைப்படத்தில் தமாஷ் நடிகர் வடிவேலு, கிணற்றை காணோம் என்று காவலர்களிடம் புகார் கொடுத்து அலப்பறை செய்ததைப் போல் உள்ளது, மெஹபூபா முப்தியின் குற்றச்சாட்டு!
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலைவது ஏன்?
வக்ப் வாரிய சொத்துக்களை மத்திய அரசோ, ஹிந்துக்களோ அபகரிக்க வழி கிடையாது. ஏனெனில், கோவில்களையே அவர்களால் மீட்க முடியவில்லை. இதில், அவர்கள் வக்ப் சொத்துக்களை அபகரிக்க இஸ்லாமியர் விட்டு விடுவரா?
அதனால், மெஹபூபா முப்தியே களத்தில் இறங்கி, துப்பறிந்து, யார் யார் அந்த வக்ப் சொத்துக்களை, 'ஆட்டை' போட்டுள்ளனர் என்று கண்டுபிடித்து, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, வழக்கு தொடுத்து, இஸ்லாமிய சட்டப்படியோ அல்லது இந்திய தண்டனை சட்டப்படியோ தண்டனை வாங்கி கொடுக்கலாமே!
வக்ப் வாரியத்தை குற்றஞ்சாட்ட அஞ்சி, பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டலாமா?

