/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
என்ன நடவடிக்கை எடுத்துள்ளது தி.மு.க.,?
/
என்ன நடவடிக்கை எடுத்துள்ளது தி.மு.க.,?
PUBLISHED ON : டிச 18, 2025 03:22 AM

சு.ஸ்ரீநிவாஸ்குமார்,
சாத்துாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'திலகர், நேதாஜி,
கஸ்துாரிபா காந்தி போன்றோர் நினைவாக நாட்டின் பல பகுதிகளில் சாலைகள்,
நினைவுச் சின்னங்கள், மருத்துவமனைகள் உள்ளன. அதேநேரம், வ.உ.சிதம்பரம்
பிள்ளை, சுப்ரமணிய பாரதி, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற தலைவர்களின்
பெயர்கள் அவ்வாறு நினைவு கூரப்படுகிறதா? இதற்காக மத்திய அரசு என்ன
செய்தது?' என்று கேட்டுள்ளார், தி.மு.க., - எம்.பி., சிவா.
மத்திய அரசு நினைவு கூராதது இருக் கட்டும்... இங்கே, தமிழகத்தில் அவர்களை பெருமைப்படுத்த தி.மு.க., அரசு என்ன செய்துள்ளது?
டாஸ்மாக் மற்றும் கழிப்பறை தவிர்த்து, அனைத்து கட்டடங்களுக்கும்
கருணாநிதி, ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை பெயர்களை வைத்துள்ளதே தவிர, எத்தனை
பல்கலை, பேருந்து நிலையம், மேம்பாலம், சாலைகளுக்கு, விடுதலைப் போராட்ட
தியாகிகளின் பெயர்களை தி.மு.க., வைத்துள்ளது?
ஜாதி ஒழிப்பு என்ற
பெயரில், தேசிய தலைவர்களின் பெயர்களில் உள்ள ஜாதிப்பெயரை மறைத்து,
அவர்களின் அடையாளத்தை அழித்து, மறுபுறம் பிராமண ஜாதி துவேஷத்தில்
பாரதியார், வாஞ்சிநாதன். வ.வே.சு.அய்யர், சுப்பிரமணிய சிவா போன்ற விடுதலை
வீரர்களின் தியாகத்தை இருட்டடிப்பு செய்து மகிழ்வதற்கு பெயர் தான், விடுதலை
போராட்ட தலைவர்களை பெருமைப்படுத்துவதா?
தமிழகத்தில் எங்கு
பார்த்தாலும் திராவிட கட்சி தலைவர்களுக்கு சிலை இருக்கிறதேயன்றி,
விடுதலைப் போராட்ட தலைவர்களுக்கு எத்தனை இடங்களில் சிலைகள் வைத்து, அவர்களை
பெருமைப்படுத்தியுள்ளது, தி.மு.க., அரசு?
இதில், 'தமிழகத்தை
சேர்ந்த சுதந்திரப் போராட்ட தலைவர்கள் குறித்து நாட்டின் பிற பகுதிகளில்
வாழும் மக்கள் அறிந்து கொள்ள, குறைந்தபட்சம் பள்ளிப் பாடத்திட்டத்தில்
இவர்கள் குறித்து கற்பிக்கப் பட்டால் தானே பத்மாசனி அம்மாள், செண்பகராமன்
பிள்ளை உள்ளிட்டோரின் தியாகம் வெளிச்சத்துக்கு வரும்!' என்று கரிசனம்
காட்டுகிறார், சிவா.
பத்மாசனி அம்மாள், செண்பகராமன் பிள்ளை
போன்றோரை வடமாநில மாணவர்கள் தெரிந்து கொள்வது இருக்கட்டும்; முதலில்,
தமிழக மாணவர்கள் அவர்களை அறிந்துள்ளனரா?
மதுரை சோழவந்தானில்
பிறந்த பத்மா சனி அம்மாள், விடுதலை போராட்டத்திற்காக சிறை சென்ற முதல்
தமிழக பெண் என்பதும், தன் கணவர் சீனிவாசவரதனுடன் சேர்ந்து பட்டிதொட்டி
எங்கும் பாரதியார் பாடலை பாடி, மக்களிடம் சுதந்திர வேட்கையை
ஏற்படுத்தியவர்; விடுதலைக் காகவே தன் மூன்று குழந்தைகளையும் பறிகொடுத்தவர்
என்பதும், தமிழகத்தில் எத்தனை பேருக்கு தெரியும்?
ரயில் வராத
தண்டவாளத்தில் தலை வைத்துப்படுத்ததும், மெரினா கடற்கரையில் மனைவி -
துணைவியுடன், காலுக்கும், தலைக்கும் ஏர்கூலர் வைத்து, அரை நாள் உண்ணாவிரதம்
இருந்த கருணாநிதி குறித்து பாடப்புத்தகங்களில் பல கற்பனை கதைகளை
புனைந்துள்ள திராவிட மாடல் கல்வித் துறை, ஆங்கிலேயர்களுக்கு எதிராக,
நாட்டிற்கு வெளியே படை திரட்டி போர் புரிந்த செண்பகராமன் குறித்து தெரிந்து
கொள்ள என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
மத்தியில் ஆட்சியில்
இருக்கும் போது, கொள்ளையடிப்பதில் மட்டும் குறியாக இருந்து விட்டு,
இப்போது, வடமாநிலங்களில் ஏன் தமிழக தியாகிகளின் பெயர்கள் இல்லை என்று
விசனப்படுவது, உழுகிற போது ஊருக்குப் போயிட்டு, அறுக்கிற நாளில் அரிவாளோடு
வந்து, வெற்று நிலத்தை பார்த்து புலம்புவது போல் உள்ளது!
வாரியம் விலகி விடுமா?
ஆர்.கந்தவேல், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இதுவரை தமிழக மக்களை மட்டுமே முட்டாள்களாக்கிக் கொண்டிருந்த தி.மு.க., அரசு, தற்போது நீதிமன்றத்தையும் முட்டாளாக்க களத்தில் இறங்கியுள்ளது.
திருப்பரங்குன்றம் தீபத்துாண் விவகாரத்தில், அரசின் மேல்முறையீட்டு விசாரணையில், கோவில் தரப்பு, 'தமிழகதொல்லியல் துறை, 'திருப்பரங்குன்றம்' என்ற புத்தகத்தை, 1981ல் வெளியிட்டது.
'அதில், மலைக்கு செல்லும் பாதி வழியில் தீபத்துாண் உள்ளது. இதில், நாயக்கர் மன்னர் ஆட்சி காலத்திற்குரிய கல்வெட்டு, ஹனுமன் கையை உயர்த்திய நிலையில் உள்ள சிற்பம் இடம் பெற்றுள்ளது.
'இத்தீபத்துாணில் மட்டும் தான் நாயக்கர் கால ஆட்சியிலிருந்து பாரம்பரியமாக தீபம் ஏற்றப்படுகிறது. மலை உச்சியில் உள்ளது, சமணர்களின் தீபத்துாண்...' என்று கூறியுள்ளது.
இதே கோவில் நிர்வாகம், சில நாட்களுக்கு முன், தீபத்துாணை ஆங்கிலேயர்களின் சர்வே கல் என்று கூறியது. பின், 'கிரானைட் கல்' என்றது. இப்போது, 'சமணர்களின் தீபத்துாண்; இதை ஹிந்துக்கள் உரிமை கொண்டாட முடியாது' என்கிறது.
கிரானைட் கல் எப்படி திடீர் என்று சமணர்களின் தீபத்துாணாக மாறியது?
இப்போது தான், தமிழக தொல்லியல் துறை வெளியிட்ட நுாலை கோவில் நிர்வாகம் பார்த்ததா?
இன்று சமணர்களின் தீபத்துாண் என்பதற்கு ஆதாரம் காட்டும் இடங்களை தானே, ஆங்கிலேயர்களின் சர்வே கல் என்று தி.மு.க., அரசும், கோவில் நிர்வாகமும் ஆதாரமாக கூறியது.
அதிலும், தி.மு.க., - எம்.பி., கனிமொழி, 'மலையில் உள்ளது தீபத் துாண் அல்ல; சர்வே கல்' என்று கூறி, அதற்கான ஆதாரமாக, தகவல் அறியும் உரிமைச் சட்டம், திருப்பரங்குன்றம் மலையில், 1808 - 09லும், 1871லும் இரண்டு சர்வே கற்கள் நிறுவப்பட்டுள்ளதாக கூறியுள்ளது என்றாரே!
இது சமணர்களின் தீபத்துாண் என்றால், ஆர்.டி.ஐ., கூறிய இரண்டு சர்வே கல் எங்கே உள்ளது? தர்காவிற்குள் இருக்கிறதா?
இதில் தர்கா தரப்பு, 'தீபத்துாண் என்று கூறப்படும் துாண் தர்காவுக்கு சொந்தமான இடத்தில்உள்ளது' என்று கூறியுள்ளது.
கோவில் எல்லைக்குள் இருக்கும் தீபத்துாணை, சமணர்களின் தீபத்துாண் என்று கூறி, அதை ஹிந்துக்கள் சொந்தம் கொண்டாட முடியாது என்கிறது, கோவில் நிர்வாகம்.
சமணர்களின் தீபத்துாணை ஹிந்துக்கள் சொந்தம் கொண்டாட முடியாது எனும் போது, வக்பு வாரியம் எப்படிசொந்தம் கொண்டாட முடியும்? அந்த துாண் இருக்கும் இடம் சமணர்களுக்கு தானே சொந்தமாகும்?
சமணர்கள் பாரதத்தின் மைந்தர்கள்; எங்கிருந்தோ வந்து ஆக்கிரமிப்பு செய்தவர்கள் அல்ல; அதனால், இத்துாண் மட்டுமல்ல... வக்பு வாரியம் உரிமை கொண்டாடும் இடங்களில் சமணர்களின் எச்சம் இருந்தால், அதை விட்டு கொடுத்து, வக்பு வாரியம் விலகி விடுமா?
கல் தோன்றி, மண் தோன்றா முன் தோன்றிய மூத்த குடிகளின் வழிபாட்டு தெய்வம் முருகன்; அவன் கோவில் கொண்ட, சங்க காலம் தொட்டு ஸ்கந்த மலை, திருப்பரங்குன்றம் என்று அழைக்கப்பட்ட மலை, இன்று ஹிந்து விேராதிகளால், தன் புனிதத்தை இழந்து கொண்டிருக்கிறது.
இனியும் ஹிந்துக்கள் ஒருங்கிணைந்து, இதற்கு தகுந்த பதிலடி தரவில்லை என்றால், இங்கு ஹிந்துக்கள் வாழ்வதற்கு கூட போராட வேண்டி வரும்!

