PUBLISHED ON : டிச 31, 2025 02:37 AM

ஆக்கிரமிப்பாளர் காட்டில் மழை தான்!
எம்.முருகானந்தம், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை, கொளத்துாரில் உள்ள பெரவள்ளூர் ஏரி மற்றும் வண்ணான்குளம் ஆகிய நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், அப்பகுதியிலுள்ள புறம்போக்கு நிலங்கள், குளங்கள் என, 10,000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் அதிகாரிகள் துணையுடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக, சென்னை செம்பியத்தை சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு விசாரணைக்கு வந்த போது, அம்பத்துார் மண்டல ஆர்.டி.ஓ., தரப்பில், 'தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியத்தால், மாநகராட்சி கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்துக்கு, பெரிய அளவிலான நிலம் தரப்பட்டு உள்ளது. அந்நிலத்தில் வீடுகள் கட்டப்பட்டு, 50 ஆண்டுகளுக்கும் மேல் மக்கள் குடியிருக்கின்றனர். அதேநேரத்தில், வண்ணான் குளத்தின் ஒரு பகுதியும், ஜி.கே.எம்.காலனி, கருணாநிதி சாலையில் ஒன்பதாவது தெரு முழுதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது...' என, தெரிவித்துள்ளது.
இதில், கவனிக்கப்பட வேண்டிய விஷயம், 50 ஆண்டுகளுக்கு முன், இப்பகுதியில் ஆக்கிரமிப்புக்கள் எதுவும் இல்லை என்பதும், அதன்பின்பே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது தான்!
கடந்த, 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள், இருப்பவர்கள் யார் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.
அதனால் தான், ஆக்கிரமிப்பாளர்கள் சாதுர்யமாக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனார் மற்றும் தி.மு.க., தலைவர் கருணாநிதியின் பெயரை ஆக்கிரமிப்பு பகுதிகளுக்கு சூட்டியுள்ளனர்.
இப்படி அரசியல் கட்சி தலைவர்களின் பெயர்களை சூட்டி விட்டால், ஆட்சியில் இருப்போர், ஆக்கிரமிப்புக்களை அகற்ற சொல்லி கெடுபிடி செய்ய மாட்டார்கள் அல்லவா?
இப்போது, சென்னை உயர் நீதிமன்றம், 'வருவாய்த்துறை, குடிசை மாற்று வாரியம், சென்னை மாநகராட்சி இணைந்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்' என உத்தரவிட்டுள்ளது.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டால், வரும் சட்டசபை தேர்தலில் ஆக்கிரமிப்பாளர்களின் ஓட்டுகளை திராவிட மாடல் அரசு எப்படி அறுவடை செய்யும்?
அதனால், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டாலும், கொளத்துார், வண்ணான்குளம் ஆக்கிரமிப்பாளர்களின் ஓட்டுகளை மொத்தமாக அறுவடை செய்ய, திராவிட மாடல் அரசு, அவர்களுக்கு மாற்று இடம் வழங்க ஆணை பிறப்பிக்கும்!
எனவே, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டாலும், படவில்லை என்றாலும், ஆக்கிரமிப்பாளர் காட்டில் மழைதான்!
lll
ஆணவம் கூடாது பழனிசாமிக்கு! எஸ்.கந்தசாமி, மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முன்னொரு காலத்தில், ஒட்டுமொத்த இந்தியாவையும் தன் ஆளுகைக்குள் வைத்திருந்த காங்கிரஸ், இன்று பூதக்கண்ணாடி கொண்டு தேடும் நிலையில் உள்ளது.
ஆனால், பா.ஜ.,வோ வீறு கொண்டு எழுந்து, 'எங்கெங்கு காணினும் காவியடா'என்று சொல்லும் அளவுக்கு வெற்றி வாகை சூடிக்கொண்டு வருகிறது.
ஒரு கொடிக்கம்பம் கூட நட முடியாத, கம்யூனிஸ்ட்கள் முழுபலத்துடன் இருந்த கேரளாவிலேயே, திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.,வசப்படுத்தி விட்டது.
தமிழகத்திலும் அக்கட்சிக்கு ஆதரவு பெருகி வருகிறது என்பதற்கு, கடந்த பார்லிமென்ட் தேர்தலில் பெற்ற ஓட்டு சதவீதமே சாட்சி.
இந்நிலையில், பா.ஜ., வுடன் கூட்டணி அமைத்துள்ள அ.தி.மு.க., ஆரம்பத்தில் கூட்டணி ஆட்சி என்று சொல்லிக் கொண்டிருந்த நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக சுருதியை குறைத்து கொண்டே வந்து, இப்போது, 'தேர்தலுக்கு மட்டுமே கூட்டணி; அ.தி.மு.க., தனிப்பெரும்பான்மையுடன் தனித்தே ஆட்சி அமைக்கும்' என்று கூறத் துவங்கியுள்ளார், அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி. அத்துடன், 200 தொகுதிகளில் வெல்லும் என்றும் ஆரூடம் கூறத் துவங்கியுள்ளார்.
அதற்கு அச்சாரமாக, 2026 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., 170 தொகுதிகளில் போட்டியிடும் என்றும், பா.ஜ.,வுக்கு 30 தொகுதிகள் என்றும், 34 தொகுதிகள் பிற கூட்டணி கட்சிகளுக்கு என்றும் ஓர் உடன்படிக்கையை நிர்ப்பந்தப்படுத்தியுள்ளாராம் பழனிசாமி.
கூட்டணி கட்சிகளை எப்படி மதித்து, மரியாதை கொடுக்க வேண்டுமென்பதை, பா.ஜ., வை பார்த்து, பழனிசாமி பாடம் கற் றுக் கொள்ள வேண்டும்.
ஆணவத்தோடும், அகம்பாவத்தோடும் வெற்றி பெற்று விடுவோம் என்ற இறுமாப்போடு, அசட்டுத் துணிச்சலோடு நடந்து கொண்டால், முதலுக்கே மோசமாகி விடும். கூட்டணி ஆட்சி என்று ஒப்புக் கொண்ட பின், கூட்டணி கட்சிகளை கவுரவமாக நடத்துவதே புத்திசாலித்தனம்!
lll மக்களை சிரமப்படுத்தலாமா? ஏ.அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரத்திலிருந்து அனு ப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ராமநாதபுரம் நகரின் பதிவுத்துறை கட்டடத்தில், மாவட்ட பதிவாளர் அலுவலகம் உட்பட, பல துணைப் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன.
இந்த அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள், 'ஏன் இங்கு வந்தோம்...' என்று எண்ணும் வகையில், ஒரே நெருக்கடியாக உள்ளது.
கீழ் தளத்தில் உள்ள எஸ்.ஆர்.ஓ., அலுவலகம் உட்பகுதி, போதிய பரப்பளவில் கட்டப்படவில்லை.
கட்டடத்தின் நுழைவு வாயிலில் காத்திருப்போர் அமரவும், இருசக்கர வாகனங்கள் நிறுத்தவும் போதுமான இடம் இல்லை. பெயருக்கு தகர கூரை அமைத்துள்ளனர்; மழை பெய்தால் நனையும் நிலை தான் உள்ளது.
இதையும் விட, அலுவலக வாயிலின் முன்புறம் பழமையான கிணறு ஒன்று ஆபத்தான நிலையில், இரும்பு சட்டங்களால் மூடப்பட்ட நிலையில் உள்ளது.
அலுவலக உட்புறத்திலோ அமருவதற்கு போதிய இருக்கைகள் கிடையாது; அதற்கு தேவையான இடமும் இல்லை.
மூன்று அடி உயரத்தில், பழைய காம்பவுண்ட் சுவர், மிகத்தாழ்வான பழைய கார்ஷெட் ஆகியவை அலுவலக வளாகத்தின் அவல நிலையை படம்பிடித்து காட்டுகிறது.
இந்த லட்சணத்தில், கடந்த 17-ம் தேதி காலை ஆய்வுக்காக வந்த பதிவு துறை துணை தலைவர், அத்தனை சார் - பதிவாளர்களையும் அழைத்து மீட்டிங்கில் உட்கார வைத்து விட்டார். நுாற்றுக்கணக்கான மக்கள் வெளியில் காத்திருக்க, இரண்டு மணிநேரத்திற்கும் மேல் கூட்டம் நடத்தினார்.
கைக்குழந்தையுடன் வந்த தாய்மார்கள், மூத்த குடிமக்கள் பெரும் அவதிக்கு ஆளாயினர். அலுவலகங்களை ஆய்வு செய்வது வழக்கமான நடைமுறை தான் என்றாலும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
ஆய்வுக் கூட்டத்தை மாலையிலோ அல்லது அலுவலகம் செயல்பட துவங்கும் முன்போ வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும், கூட்டம் நடக்கும் நாள் குறித்து முன்கூட்டியே அறிவிப்பு செய்து, பத்திரப் பதிவை நிறுத்தி வைக்கலாம். அதை விடுத்து, போதுமான வசதியில்லாத இடத்தில், பொது மக்களை பல மணிநேரம் காக்க வைத்து, சிரமத்துக்கு ஆளாக்குவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல !
lll

