PUBLISHED ON : ஜன 12, 2026 01:43 AM

தான் திருடி பிறரை நம்பாள்!
ஆர்.சுப்பிரமணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் நடித்த படத்திற்கு, தணிக்கைத்துறை சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதற்கு, 'சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை வரிசையில், 'சென்சார் போர்டும்' மத்திய அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது...' என கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார், தி.மு.க., முதல்வர்.
ஜனநாயகன் படத்திற்கு மட்டும் இச்சிக்கல் எழுந்திருந்தால், இக்கண்டன அறிக்கை வெளிவந்திருக்காது. கூடவே, தற்போது வெளியான பராசக்தி படத்திற்கும் சிக்கல் எழுந்ததன் விளைவே இந்த அறிக்கை.
காரணம், பராசக்தி படம் துணை முதல்வர் உதயநிதியின், 'ரெட் ஜெயன்ட் மூவிஸ்' தயாரிப்பு.
ஒரு திரைப்படத்தில் ஆட்சேபனைக்குரிய காட்சிகள், வசனங்கள், பாடல்கள் இருந்தால், அவற்றை நீக்குவதற்குத் தான் தணிக்கைத்துறை உள்ளது.
அது, தன் கடமையை செய்கிறது.
இதில், மத்திய அரசை ஏன் வம்பிழுக்க வேண்டும்?
திரைத்துறையில் எம்.ஜி.ஆர்., சந்திக்காத பிரச்னைகளா, அவருக்கு கருணாநிதி கொடுக்காத தொந்தரவுகளா?
எம்.ஜி.ஆரை வைத்து, நேற்று இன்று நாளை என்று ஒரு படம் எடுத்தார், நடிகர் அசோகன்.
படம் எடுக்கும் போதே படக் குழுவினருக்கு பல்வேறு தடைகளையும், பிரச்னைகளையும் ஏற்படுத்தினார், அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி.
அத்தனையையும் சமாளித்து, தணிக்கை சான்றிதழ் பெற்றும் கூட, படத்தை வெளியிட முடியவில்லை.
அந்த அளவு உடன் பிறப்புகளின் அட்டகாசம் சகிக்க முடியாததாக இருந்தது.
அப்படி இருந்தும், தைரியமான சில தியேட்டர் உரிமையாளர்கள், படத்தை வெளியிட முன்வந்தனர்.
அன்று, அண்ணா சாலையில் இருந்த பிளாசா தியேட்டரில் படம் வெளியான போது, 22 வயது இளைஞனாக இருந்த நான், என் நண்பருடன் படம் பார்க்க சென்றிருந்தேன். தியேட்டரின் இருபுறமும் ஒவ்வொரு வாசல் அருகிலும் கையில் துப்பாக்கிகளோடு பாதுகாப்பிற்கு நான்கு காவலர்கள் நின்றிருந்தனர். அந்த அளவு கழக கண்மணிகளி ன் ரவுடியிசம் தலைவிரித்து ஆடியது.
அதை விடவா ஜனநாயகன் படம் பெரிய பிரச்னையை சந்தித்து விடப்போகிறது?
சினிமா துறையை கையில் வைத்து, எதிர் கருத்தாளர்களின் குரல்வளையை நசுக்கும் திராவிட மாடல் முதல்வர், தணிக்கைத் துறை போடும் கத்தரிக்கு, மத்திய அரசை குற்றஞ்சாட்டுகிறார்.
அதுசரி... தான் திருடி பிறரை எப்படி நம்புவாள்! lll
சூரியனை இரு கை கொண்டு மூட முடியுமா? வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நுாறு ஆண்டுகளை கடந்தது, ஆர்.எஸ்.எஸ்., இயக்கம்.
தேசம், தெய்வீகம், ஒற்றுமை, வளர்ச்சி, கலாசாரத்தை காக்க தங்களையே அர்ப்பணித்துக் கொண்ட இந்த இயக்கத்தை, ஆட்சி அதிகாரத்திற்காக, ஓட்டு அரசியல் செய்வோர் விமர்சிப்பது காலத்தின் கொடுமை!
சமீபத்தில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வழக்கில், தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுவாமிநாதனை, ஆர்.எஸ்.எஸ்.,காரர் என்று கூறி வசைமாறி, அவரை அவமதித்து எழுதி புத்தகம் வெளிட்டனர்.
அரசியலுக்கு வந்தால், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி, சொகுசு வாழ்க்கை வாழலாம் என்று எண்ணுவோர் மத்தியில், தேச சேவைக்காக, ஆயிரக்கணக்கான தொண்டர்கள், தங்கள் திருமண வாழ்க்கையை துறந்து, சேவை செய்து வருகின்றனர்.
இப்படி தேசத்திற்காக தங்கள் சொந்த வாழ்க்கையை தியாகம் செய்யும் தொண்டர்கள் நிறைந்த அமைப்பு, ஆர்.எஸ்.எஸ்.,சை தவிர உலகில் எந்த இயக்கமும் இல்லை.
ஆனால், நோட்டுக்கும், சீட்டுக்கும் சுயமரியாதையை காவு கொடுத்து காவடி துாக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சியினர், ஆர்.எஸ்.எஸ்.,சை மதவாத இயக்கம் என்கின்றனர்.
நாடு விடுதலைக்கு பின், 50 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி செய்த காங்., ஆட்சியில், அரசியல்வாதிகள் எனும் கொள்ளையர்களால், பல மாநிலங்கள் சவலை குழந்தைகளாக இருந்தன. உதாரணத்திற்கு, ஜம்மு - காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி நிறுவனர் ேஷக் அப்துல்லா, அவர் மகன் பரூக் அப்துல்லா, அவரது மகன் ஒமர் அப்துல்லா என்று ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்குண்டு, பயங்கரவாதத்தின் கூடராமாகிப் போனது.
காலையில் விழிக்கும் போது, இன்று உயிருடன் இருப்போமா என்பதாகத்தான் அம்மாநில மக்களின் வாழ்வு இருந்தது.
அதை மாற்றியவர், ஆர்.எஸ்.எஸ்.,சில் இருந்து வந்த மோடி. ஜம்மு - காஷ்மீரில் பா.ஜ., ஆட்சியில் இல்லை என்றாலும், பிரதமரின் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், அதிக வேலை வாய்ப்பை பெறும் மாநிலங்களில், இன்று நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளது.
இதுபோன்று எத்தனையோ உதாரணங் களைக் கூறலாம்.
ஆனாலும் பிரிவினைவாதம் பேசி, அதில் தீ மூட்டி குளிர்காய துடிக்கும் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தை பயங்கரவாத இயக்கத்துடன் ஒப்பிட்டு பேசுகின்றன.
அவர்களுக்கு தெரியும்... ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் தியாகம். ஆனாலும், 'எங்கே, ஆர்.எஸ்.எஸ்., தமிழகத்தில் வேரூன்றி விட்டால், தங்கள் அரசியல் கடையை இழுத்து மூட வேண்டி வந்து விடுமோ' என்ற பயத்தால் ஏற்பட்ட வன்மத்தால் விஷத்தைக் கக்குகின்றனர்.
சூரியனின் ஒளியை இரு கைகள் கொண்டு மூட நினைத்தால், முடியுமா?
நியாயமா முதல்வரே? சீத்தலைச் சாத்தன், திருப்பத்துார், சிவகங்கை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பொங்கல் பரிசு வாங்குவதற்காக, 'டோக்கன்' கொடுத்தனர். கூட்டம் அதிகமாகி விட்டால், வயதான காலத்தில் வெயிலில் ரொம்ப நேரம் காத்திருக்க வேண்டுமே என்று எண்ணி, காலையில் சாப்பிடாமல் கூட, ஆட்டோ பிடித்துப் போய் ரேஷன் கடையில் காத்திருந்தேன்.
'அமைச்சர் வந்தபின் தான் கொடுப்போம்' என்று கூறி, ரேஷன் அட்டையை வாங்கி வைத்துக் கொண்டனர்.
இரண்டு மணி நேரம் காக்க வைத்த பின், 'உங்களுக்கு ரேகை பதிவாகவில்லை; கையெழுத்து வாங்கி, பரிசுப்பொருளை கொடுக்க சட்டத்தில் இடம் இல்லை' என்று சொல்லி, ரேஷன் அட்டையை திரும்ப கொடுத்து விட்டனர்.
மொத்தத்தில் காத்திருந்தது மிச்சம்; கொடுத்த டோக்கனையும் அவர்களே வைத்துக் கொண்டனர்.
அந்த பரிசுப் பொருட்கள் எவருக்கு போகும் என்பதை ஆராய்ந்து அறிந்து சொல்ல, சி.பி.ஐ., விசாரணை வைக்க தேவையில்லை; நம் எல்லாருக்குமே தெரியும்... எங்கே போகுமென்று!
'வயதானவர்களுக்கு ரேகை பதிவாகாது; அதனால் பரிசுப் பொருள் கிடைக்காது' என்று முன்பே முதல்வர் அறிவித்து இருக்கலாமே!
வயதானவர்கள் காத்திருந்து, பசியால் வாடிப் போய் திரும்புவது எந்த விதத்தில் நியாயம்?

