/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
பிடிவாதம் முடிவுக்கு வருவது எப்போது?
/
பிடிவாதம் முடிவுக்கு வருவது எப்போது?
PUBLISHED ON : ஜன 13, 2026 04:02 AM

ஆர்.சேஷாத்ரி,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முன்னாள் முதல்வர்
பன்னீர்செல்வம், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா உள்ளிட்டோரை
மீண்டும் கட்சியில் இணைப்பதற்கான வாய்ப்பே இல்லை என, அ.தி.மு.க.,
பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அண்ணாதுரை தலைமையில்
தி.மு.க., இயங்கிக் கொண்டு இருந்த சமயம் அது... கட்சியில் உள்ள சிலர்
அண்ணாதுரையை எதிர்த்து பேசியும், எழுதியும் வந்தனர். அதில்,
ஏ.வி.பி.ஆசைத்தம்பி என்பவரும் ஒருவர். அவர், 'தனி அரசு' என்ற பெயரில்
தி.மு.க., ஆதரவு பத்திரிகையை நடத்திவந்தார்.
அதில், அண்ணாதுரையை
கடுமையாக விமர்சனம் செய்து எழுதி வந்தார். இது குறித்து கட்சியினர்
அண்ணாதுரையிடம் புகார் தெரிவித்த போது, 'பத்திரிகையில் என்னை திட்டி
எழுதினாலும், கழகத்திற்கு ஆதரவாகவும் எழுதுகிறார். அதுவே எனக்கு போதும்;
கழகம் தான் முக்கியம்' என்றார், பெருந்தன்மையாக!
அதேபோன்று,
அண்ணாதுரை மறைவிற்கு பின், முதல்வராக கருணாநிதியை தேர்ந்தெடுத்தது
பலருக்கு பிடிக்கவில்லை. முக்கியமாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர்களான
அன்பழகன், நெடுஞ்செழியனுக்கு பிடிக்கவில்லை.
'கருணாநிதியை என் தலைவன் என்றால், என் மனைவி கூட என்னை மதிக்கமாட்டாள்' என்று காட்டமாக கூறியவர், அன்பழகன்.
ஆனாலும், அவரை கடைசிவரை தன் அருகில் வைத்துக்கொண்டாரே தவிர, வெறுத்து ஒதுக்கவில்லை, கருணாநிதி.
எம்.ஜி.ஆர்., தனிக்கட்சி துவங்கிய போது, தி.மு.க.,விலிருந்து பலர் அ.தி.மு.க.,விற்கு தாவினர்.
இதில், எம்.ஜி.ஆரை கடுமையாக திட்டிய ப.உ.சண்முகம், ராஜாராம், நெடுஞ்செழியன், நாஞ்சில் மனோகரன் போன்றோரும் இணைந்தது தான் சிறப்பு!
இவர்களுக்கு தன் ஆட்சியில் அமைச்சர் பதவி கொடுத்து, அனைவரையும் அரவணைத்து சென்றார், எம்.ஜி.ஆர்.,
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், எம்.ஜி.ஆருக்கு சிறந்த
நடிகருக்கான, 'பாரத ரத்னா' விருது அளித்த போது, 'எம்.ஜி.ஆருக்கு நடிக்கத்
தெரியாது; நாங்கள்தான் அவருக்கு அந்த விருது வழங்க சிபாரிசு செய்தோம்'
என்றார், நெடுஞ்செழியன்.
இப்படி தன்னை அவமானப்படுத்திய நெடுஞ்செழியனை கூட அமைச்ச ராக்கினார், எம்.ஜி.ஆர்.,
இதேபோன்று தான் கண்ணதாசன்!
அண்ணாதுரை முதல் எம்.ஜி.ஆர்., வரை அனைவரையும் திட்டியவர், கண்ணதாசன்.
ஆனாலும், அவரை அரசவை கவிஞராக்கி அழகு பார்த்தார், எம்.ஜி.ஆர்.,
கருணாநிதியின் வெற்றிக்கு காரணம், அவர் எவரையும் லேசில் இழக்கமாட்டார்.
இதெல்லாம் ஓர் ராஜதந்திரம்!
இவையெல்லாம் தெரியாமல், 'தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்' என்று கட்சி நடத்துகிறார், பழனிசாமி.
வலுவான கூட்டணி அமையாத நிலையில், வலிய வருவோரையும் உதாசீனப்படுத்துகிறார்.
பார்லிமென்ட் தேர்தலில் பா.ஜ.,வை ஒதுக்கி பாடம் கற்றது போல், மீண்டும் ஒரு
பாடம் கற்றால் தான், பழனிசாமியின் முரட்டு பிடிவாதம் முடிவுக்கு வரும்
போலும்!
ஒரு கனவையாவது நிறைவேற்ற முடியுமா?
எம்.கலைவாணி, அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'உங்கள் கனவை சொல்லுங்க' என்ற திட்டத்தின் வாயிலாக, தமிழக அரசு ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் ஆலோசனை கேட்கப்போகிறதாம்.
எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, கோரிக்கை மனுக்களை வாங்கி பெட்டியில் போட்டு பூட்டி கொண்டு போனார், இன்றைய தி.மு.க., முதல்வர்.
அந்த பெட்டியின் பூட்டை திறந்து பார்த்தாலே தெரிந்து விடுமே... தமிழக மக்களின் தேவை என்ன, கனவு என்ன என்பது!
பாவம்... சாவியை தொலைத்து விட்டு, நான்கு ஆண்டுகளாக தேடிக் கொண்டு இருந்திருக்கிறார் போலும்... இப்போது, தேர்தல் நெருங்குவதால் மக்களின் கனவுகளை தேடி புறப்பட்டுள்ளார்.
அதுசரி... 71 வயதாகும் முதல்வருக்கு, வயது முதிர்வின் காரணமாக ஞாபக மறதி வருவது இயற்கை தானே!
அதனால், அவருக்கு மீண்டும் மக்களின் கனவுகளை ஞாபகப்படுத்துவதில் தவறு இல்லை.
தமிழகத்தை விதவைகள் நிறைந்த மாநிலமாக மாற்றி வரும், 'டாஸ்மாக்' கடைகளை நிரந்தரமாக மூடி, மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது ஒவ்வொரு பெண்ணின் கனவு!
l உயிருக்கு உத்தரவாதம் இல்லாத தகர டப்பா அரசு பேருந்துகளுக்கு பதில், ஒழுங்கான இருக்கைகள், மழை வந்தால் ஒழுகாத பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டும் என்பது ஒவ்வொரு பயணியின் கனவு...
l 'நள்ளிரவில் அல்ல; பட்டப்பகலில் பயமின்றி தனியாக நடந்துசெல்ல மாட்டோமா' என்பது பச்சிளம் குழந்தைகள் முதல் பல்போன பாட்டி வரை காணும் கனவு!
l மருத்துவர்கள், செவிலியர், மீனவர்கள், விவசாயிகள், துப்புரவு பணியாளர்கள் என எவருக்கும் போராடி உரிமைகளை பெற வேண்டிய தேவையில்லாத திறமையான நிர்வாகம் வேண்டும்
l பொய்யான வாக்குறுதிகளை அள்ளிவீசி மக்களை ஏமாற்றாத ஆட்சி வேண்டும்
l ஓட்டுக்காக ஒரு மதத்தினருக்கு குல்லாப் போட்டும், பெரும்பான்மை மதத்தை சேர்ந்தவர்களை இழிவுபடுத்தும் போலி மதச்சார்பின்மை பேசாத அரசியல் தலைவர்கள் வேண்டும் என்பது ஒவ்வொரு குடிமகனின் கனவு...
இதில் எதையாவது ஒரு கனவை தி.மு.க., முதல்வரால் நிறைவேற்ற முடியுமா?
மூக்குடைபடுவது நிச்சயம்!
வீ.ராஜகோபால், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவு கிடைத்த பின்பும், 'திருப்பரங்குன்ற மலையில் உள்ள கல் துாணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரம் உண்டு என்பதை, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் தான் நிரூபிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார், அமைச்சர் ரகுபதி.
ஒருவர் தன் வீட்டை பூட்டி விட்டு, வேறு எங்கோ சென்று தங்கி விட்டார். சில காலம் கழித்து, தன் வீட்டிற்கு சென்று, வீட்டைச் சுத்தப்படுத்தி விளக்கு ஏற்றுகிறார் என்றால், அதை தவறு என்று சொல்ல முடியுமா?
எப்போது வேண்டுமானாலும், வீட்டில் விளக்கை ஏற்ற அவருக்கு உரிமை உண்டு. அது வழக்கம் இல்லை என்று எவராலும் சொல்ல முடியாது. அதுபோலதான், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத் துாணில் தீபம் ஏற்றும் விவகாரமும்!
கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள தீபத்துாணில், இறை நம்பிக்கை உள்ளவர்கள் தீபம் ஏற்றுகின்றனர். அதற்கு எதற்கு ஆதாரம் கொடுக்க வேண்டும். ஹிந்து கோவில்களில் விளக்கு ஏற்றுவது மரபு தானே!
எனவே, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தாலும், ஏன்... ஐ.நா.,சபைக்கே சென்று முறையிட்டாலும், தி.மு.க., மூக்குடை படுவது நிச்சயம்!

