PUBLISHED ON : மே 19, 2026 12:09 AM

ஆர்.உஷா,
மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழக வெற்றிக்
கழகம் ஆட்சி அமைய, நாங்கள் தடையாக இருக்க மாட்டோம்' என்று கூறிவிட்டு,
இப்போது, குதிரை பேரம் நடப்பதாகக் கூக் குரலிடுகிறார், தி.மு.க., தலைவர்
ஸ்டாலின்.
கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்
கட்சியை வைத்து, விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்து, தன்னை
பெருந்தன்மையாளராக காட்டிக்கொண்ட ஸ்டாலின், இப்போது, அ.தி.மு.க.,வில்
இருந்து ஒரு, 'குரூப்' த.வெ.க.,விற்கு ஆதரவளித்ததும், குதிரை பேரம்
நடப்பதாக கூறுகிறார் என்றால், அதன் காரணம் புரியாத அளவு தமிழக மக்கள்
முட்டாள்கள் இல்லை.
விஜய் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை
என்றால், மத்திய பா.ஜ., அரசின் நேரடி கட்டுப்பாட்டில் ஜனாதிபதி ஆட்சி
வந்துவிடும். அதுவே, பா.ஜ., தமிழகத்தில் காலுான்ற ஒரு துவக்கப்புள்ளியாக
அமைந்துவிடும்.
மேலும், தி.மு.க., அமைச்சர்கள் பலர் மீது வழக்கு
பாயும் என்பது ஒருபுறம் என்றால், அதன்பின் வரும் தேர்தலில், அனுதாப
ஓட்டுகளால் விஜய் இன்னும் அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவார்; தங்கள் நிலை
அதோகதியாகி விடும்...
அதற்கு பதில், இப்போது ஆதரவு கொடுப்பது போல்
கொடுத்து, விஜயின் ஆட்சிக்கான மூக்கணாங்கயிற்றை தங்கள் கைகளில் வைத்துக்
கொண்டால், சில மாதங்களிலேயே ஆதரவை வாபஸ் வாங்கி, ஆட்சியை கவிழ்த்து விடலாம்
அல்லது 'ஆட்சியை கவிழ்த்து விடுவோம்' என்று சொல்லியே விஜயை தங்கள்
கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம் என்பது தான், தி.மு.க., தன் கூட்டணி
கட்சிகளை வைத்து விஜய்க்கு நேசக்கரம் நீட்ட காரணம்.
அதற்கு
முற்றுப்புள்ளி வைப்பது போல், அ.தி.மு.க.,வில் இருந்து, 25
எம்.எல்.ஏ.,க்கள் இப்போது விஜய்க்கு ஆதரவளித்துள்ளதால், ஆட்சி கவிழ்ப்பு
என்ற அஸ்திரத்தை வைத்து விஜயை இனி மிரட்ட முடியாது என்ற கடுப்பே, ஸ்டாலின்
மற்றும் அவரது மகன் உதயநிதியின் திடீர் ஆக்ரோஷத்திற்கும், குதிரை பேரம்
நடப்பதாக கூக்குரல் இடுவதற்கும் காரணம்!
இதில், அடுத்த கட்சி
எம்.எல்.ஏ-.,க் களைத் துாக்குவது ஜனநாயக விரோதம் என்கிறார், ஸ்டாலின்.
கடந்த தி.மு.க., ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களில் பெரும்பாலானோர்
அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவர்கள் தான்.
தி.மு.க.,வையே, 'அம்மா
தி.மு.க.,'வாக மாற்றிய ஸ்டாலின் கூறுகிறார், அடுத்த கட்சி எம்.எல்.ஏ.,க்களை
துாக்குவது ஜனநாயக விரோதம் என்று!
ரத்த ருசி காணும் பூனை, கொல்லாமை குறித்து பாடம் நடத்தலாமா?
அரசு சொல்வதை கேளுங்கள் மக்களே!
வளர்மதி ஆசைத்தம்பி, தஞ்சாவூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'இன்னும் ஓராண்டுக்கு தங்கம் வாங்காதீர்கள்; வெளிநாடு சுற்றுலா செல்வதை குறைத்துக் கொள்ளுங்கள்; தனி வாகனங்களின் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள்' என்று மக்களை கேட்டுக் கொண்டிருக்கிறார், பிரதமர் மோடி.
நாட்டின் அன்னிய செலாவணி வெகுவாக குறைந்து வருவதே இதற்கு காரணம்!
ஒருபுறம் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் ஏறிக் கொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் பணம் படைத்தவர்கள், தங்கத்தில் அதிகமாக முதலீடு செய்கின்றனர்.
அதேநேரம், நம் நாட்டின் தங்கம் உற்பத்தி மிக குறைவு; வெளிநாடுகளில் இருந்து தான் பெருமளவு வாங்குகிறோம்.
இந்நிலையில், பணம் படைத்தவர்கள் அதிகமாக தங்கத்தை வாங்கி பதுக்குவதால், இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவு, 25 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்நிலை நீடித்தால், இந்தியாவின் அன்னிய செலாவணி இருப்பு, தங்கம் வாங்குவதற்கே சரியாகிவிடும். இதை தவிர்க்க தான் தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி வரியை அதிகரித்துள்ளது, மத்திய அரசு.
அதேபோன்று, வெளிநாட்டு சுற்றுலா மற்றும் வாகனங்களின் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளச் சொன்னதும், அன்னிய செலாவணியை திறம்பட நிர்வகிப்பதற்காகத் தான்!
வசதி படைத்தவர்கள், ஒரு நபர் பயணிப்பதற்கே நான்கு சக்கர வாகனத்தை பயன்படுத்துகின்றனர். 85 சதவீதம் எரிபொருள் பயன்பாட்டுக்கான கச்சா எண்ணெயை, வெளிநாடுகளில் இருந்து அன்னிய செலாவணியை கொடுத்து நாம் வாங்கும் போது, அவற்றை குறைத்து பயன்படுத்த வேண்டிய தார்மீக பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ளது.
எனவே, ஒவ்வொருவரும் அரசின் வேண்டுகோளை ஏற்று, முடிந்தவரை அவற்றை நிறைவேற்றுவதே, நாட்டிற்கு செய்யும் கைமாறு!
கர்மா மன்னிக்காது!
ரெ.ஆத்மநாதன், சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசியல் களம் எத்தனையோ புதிய நிகழ்வுகளைக் கண்டிருந்தாலும். 2026 சட்டசபை தேர்தல் எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி வியக்கத்தகு மாற்றத்தை நிகழ்த்திஉள்ளது.
கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு பின், திராவிட கட்சிகளின் பிடியில் இருந்து தமிழகம் மீண்டுள்ளது.
திராவிட கட்சிகளுக்கு மாற்று என்று கூறி, மருத்துவர் ராமதாஸ், 1980ல் வன்னியர் சங்கத்தை, பாட்டாளி மக்கள் கட்சி என்று அரசியல் அமைப்பாக மாற்றினார்.
கட்சி ஆரம்பித்த போது, 'நானோ, என் குடும்பத்தினரோ அதிகாரத்திற்கு வரமாட்டோம்' என்று வாக்குறுதி கொடுத்தார்.
மக்களும், இரு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நினைத்து பா.ம.க.,வுக்கு ஆதரவு தந்தனர். அதை வைத்து தேசிய கட்சிகளுடன் கூட்டணி ஒப்பந்தமும், அதன் விளைவாக அமைச்சர் பதவியும் கிடைக்க, தான் கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு, மகனை மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தார், ராமதாஸ். இப்போது மகனுடன் முட்டிக் கொண்டு, கட்சியை உடைத்து, தனியே அமர்ந்து புலம்பிக்கொண்டிருக்கிறார்.
இவர் தான் இப்படி என்றால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின், அவரது தோழி சசிகலாவால் முதல்வரான பழனிசாமி, தனக்கு போட்டியாக எவரும் உருவாகிவிடக் கூடாது என்று எண்ணி, சீனியர்களை களையெடுத்தார்.
விளைவு, 'கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக' கட்சி சுருங்கிப்போனது. பத்து தோல்வி பழனிசாமி, சட்டசபை தேர்தலோடு பதினோரு தோல்வி பழனிசாமியாகி விடவே, கட்சியின், 'மூவர் குழு' அவருக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
ஆப்பு அசைத்த குரங்கான கதையாகி விட்டது பழனிசாமியின் நிலைமை!
'தெய்வம் நின்று கொல்லும்' என்பதும், 'கடவுளே மன்னித்தாலும் கர்மா மன்னிக்காது' என்பதும் இவர்களை பார்த்தால் உண்மையென்றே தோன்றுகிறது!
