/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
நோகாமல் நுங்கு சாப்பிடும் வித்தை தெரிந்தவர்கள்!
/
நோகாமல் நுங்கு சாப்பிடும் வித்தை தெரிந்தவர்கள்!
PUBLISHED ON : ஜூலை 07, 2025 12:00 AM

தி.ஸ்ரீராம்
விஷ்ணு, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மத்தியில்
ஆண்ட காங்கிரசும், தற்போது ஆளுகிற பா.ஜ., வும் தங்களுக்கு
தனிப்பெரும்பான்மை இருந்தும் கூட, கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில்
இடமளித்து சிறப்பாக ஆட்சி நடத்தின, நடத்தியும் வருகின்றன. அதேபோன்று,
பீஹார், ஆந்திரா, மஹாராஷ்டிராவில் இன்றும் கூட கூட்டணி ஆட்சி தான்
நடக்கிறது.
ஆனால், தமிழகத்தில் மட்டும் தி.மு.க., மற்றும்
அ.தி.மு.க.,கட்சியினர் கூட்டணி ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
அதேநேரம், இரு கட்சிகளுமே மத்தியில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,
அமைச்சரவையில் அங்கம் வகித்து பலனை அனுபவித்தவை!
இரு கட்சிகளுமே
நேரெதிர் துருவங்களாக இருந்தாலும், கூட்டணி ஆட்சி விவகாரத்தில் மட்டும் ஒரே
பல்லவியை பாடுகின்றன. அதுவும், தி.மு.க., கொடுக்கும் விளக்கம்
இருக்கிறதே... தமிழகத்திற்கு கூட்டணி ஆட்சி ஒத்து வராதாம்!
ஏன்
ஒத்து வராது? மக்களை பொறுத்தவரை நல்ல ஆட்சித் தான் தேவையே தவிர, அது
கூட்டணி ஆட்சியா, தனிப்பெரும்பான்மை ஆட்சியா என்பது முக்கியமில்லை!
கூட்டணி
ஆட்சியை தி.மு.க., - அ.தி.மு.க., வெறுக்க காரணம், அவர்களும் அதிகார பலம்
பெறுவதுடன், தங்களுக்கு இணையாக சம்பாதித்து விடுவரே என்பதால் தான்!
ஓர்
ஊரில் அண்ணன் - தம்பி என இருவர் இருந்தனர். இருவரும் சமமாக பணம் போட்டு
கறவை மாடு ஒன்று வாங்கி புல், வைக்கோல் போட்டு வளர்த்து வந்தனர். மாடு
கன்று ஈனும்போது, அண்ணன்காரன் ஓர் ஒப்பந்தம் போட்டான்... 'தம்பி...
மாட்டின் முன்பகுதி உனக்கு சொந்தம்; பின் பகுதி எனக்கு சொந்தம்...' என்று!
விபரம்
புரியாத தம்பியும் அதை ஏற்று, தினமும் புல், வைக்கோல் எல்லாம் முன்
பகுதியில் போடுவான்; அண்ணன்காரன் பின்பகுதியில் பாலை கறந்து எடுத்துக்
கொள்வான்.
இக்கதைபோல் தான் இருக்கிறது தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள் கூட்டணி ஆட்சிக்கு கொடுக்கும் விளக்கம்!
'நோகாமல்
நுங்கு சாப்பிடுவது எப்படி' என்பதை இந்த இரு கட்சிகளிடம் இருந்து மற்ற
மாநில அரசியல்வாதிகள் பாடம் கற்க வேண்டும். கூட்டாக சேர்ந்து எல்லாரும்
கஷ்டப்படுவராம்... ஆனால், பலனை மட்டும் ஒருவர் அனுபவிப்பார் என்றால்
எப்படி?
இந்த வாய்வித்தை, 2026ல் நடக்காது. எவர் ஆட்சிக்கு வந்தாலும், அது கூட்டணி ஆட்சியாகத் தான் அமையும்!
தொந்தரவு செய்யாதீர்கள்!
க.அருச்சுனன், செங்கல்பட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில், சென்னையிலிருந்து ரயில் மார்க்கமாக வேலுார் - திருப்பத்துார் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார் தமிழக முதல்வர் ஸ்டாலின். ரயிலில் அவர் கிளம்பும்போதும், திரும்பி வரும் போதும் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனையே தொண்டர்கள் ஆக்கிரமித்து கொண்டனர். கூடவே, அப்பகுதியில் பேருந்து, ஆட்டோ இயங்க காவல் துறை கட்டுப்பாடு விதித்திருந்தது. இதனால், வெளியூர் பயணியர் மூன்று மணி நேரம் மிகவும் கஷ்டப்பட்டு போயினர்.
தமிழக அரசியல்வாதிகள் எளிமையாக இருக்க கற்றுக் கொள்ளவே மாட்டனரா?
எல்லாவற்றிலும் விளம்பரம் தேடத்தான் வேண்டுமா?
கடந்த 1967ல் சட்டசபை தேர்தலில் காமராஜர் தோற்றபோது, தொண்டர்கள் அவரிடம், 'நீங்கள் நம் ஆட்சியில் செய்த நலத்திட்டங்கள் குறித்து விளம்பரம் எதுவும் செய்யவில்லை. அதனால் தான் தோற்றீர்கள்...' என்றதும், 'அட போய்யா, பெத்த தாய்க்கு சேலை வாங்கி கொடுக்கிற ஒரு மகன், 'எங்க அம்மாவுக்கு சேலை வாங்கி கொடுத்தேன்'தம்பட்டம் அடிக்கலாமாண்ணேன்... கடமையைத் தானே செஞ்சோம்; அதுல பீத்திக்கறதுக்கு என்ன இருக்குண்ணேன்...' என்றார் காமராஜர்.
இன்றைய அரசியல்வாதிகளிடம் இதுபோன்ற நேர்மையான பதிலை எதிர்பார்க்க முடியுமா?
அதேபோன்று தொண்டர் ஒருவர், தன் இல்ல திருமண விழாவிற்கு வரும்படி காமராஜருக்கு அழைப்பு விடுத்தார். அவர் மறுத்து விட்டார். ஆனால், திருமணத்தின்போது, திடீரென வந்து நின்றார். பதறிப்போன தொண்டர், 'ஐயா நீங்க வர்றீங்கன்னு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா, கொஞ்சம் தடபுடலாக ஏற்பாடு செய்து இருப்பேனே...' என்றார்.
'நான் வர்றேன்னு சொன்னா, எனக்காக நீ நிறைய செலவு செய்திருப்பே... அதான் சொல்லாம வந்துட்டேன். இருப்பதை போடு; சாப்பிட்டு போறேன்...' என்றார்.
இன்று திருமண விழாவிற்கு வருகை தரும் தலைவர்களுக்கு எவ்வளவு வரவேற்பு பலகைகள், விளம்பர போஸ்டர்கள்...
இதில், திருமண மேடை என்று கூட பாராமல், அதையே அரசியல் மேடையாக மாற்றி, சுயபுராணங்கள் அல்லவா பாடுகின்றனர்.
வெளிநாடு சென்று திரும்பி வரும்போது, தமிழகத்திற்காக ஏதாவது சாதித்து வந்தால் வரவேற்பு கொடுக்கலாம்; ஆனால், தமிழகத்தில் உள்ள ஓர் ஊருக்கு சென்று வருவதற்கெல்லாம், வழி அனுப்புகிறோம், வரவேற்கிறோம் என்ற பெயரில் அலப்பறை கொடுத்து மக்களுக்கு இடையூறு செய்ய வேண்டுமா?
நம்பிக்கையை ஏற்படுத்தும் இட ஒதுக்கீடு!
அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், 400க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லுாரிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், இவைகளில் தரமான கல்லுாரிகள் என்று கூறினால், 50க்கும் குறைவாகத் தான் உள்ளன.
இதனால், தரவரிசையில் முன்னணியில் உள்ள கல்லுாரிகளில் ஏழை - எளிய மாணவர்களுக்கு இடம் கிடைப்பது கை, கால்களை இழந்த ஒருவர் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போல் எட்டாக் கனவாகவே இருந்தது.
இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதைப் போன்று, 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், தொழிற்கல்வியில் பட்டம் படிக்க விரும்பும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு சலுகை வழங்கப்பட்டது. அத்துடன், அவர்களின் முழு கல்வி செலவையும் அரசு ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது.
இதனால், ஏழை - எளிய அரசு பள்ளி மாணவர்களுக்கும் தனியார் பொறியியல் கல்லுாரிகளில் இடம் கிடைத்தது.
அவ்வகையில், இந்த ஆண்டு கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த கண்டமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி தாரணி, 'கட் - ஆப்' மதிப்பெண் அடிப்படையில் இட ஒதுக்கீடு சலுகையின் கீழ் முதலிடம் பிடித்து உள்ளார்.
இது பிற அரசு பள்ளி மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
இதுவரை தனியார் பள்ளி மாணவர்கள் தான் தமிழகத்தில் உள்ள அனைத்து தரமான பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லுாரிகளில் இடம் பிடித்து படித்து வந்தனர். தற்போது, 7.5 சதவீத இட ஒதுக்கீடு வாயிலாக அரசு பள்ளி மாணவர்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைத்துஉள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது!