PUBLISHED ON : நவ 16, 2025 12:28 AM

ஈஸ்வரன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக வெற்றிக் கழக
பொதுக்கூட்டத்தில், தானே முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்துள்ள அக்கட்சித்
தலைவர் நடிகர் விஜய், 'வரும் தேர்தலில் தி.மு.க.,வுக்கு நேரடி போட்டி
த.வெ.க., தான்' என்றும் கூறியுள்ளார்.
வரும் சட்டசபை தேர்தலில், நான்குமுனை போட்டி ஏற்பட்டால், மெகா கூட்டணியில் இ-ருக்கும் தி.மு.க.,வுக்குதான் வெற்றி வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், அரசியலுக்கு பச்சிளம் குழந்தையான த.வெ.க.,தான்,
தி.மு.க.,வுக்கு நேரடி போட்டி என்று கூறுவதை வேடிக்கையாக எடுத்துக்கொள்ள
முடியாது.
காரணம், பா.ஜ.,வுடன் தி.மு.க., மறைமுக தொடர்பு
வைத்துள்ளது என விஜய் கூறினாலும், உ ண்மையில், தி.மு.க.,வுடன் ரகசிய
தொடர்பு வைத்திருப்பது விஜய் தான்.
அடுத்த ஆண்டு ஜனவரியில் திரைக்கு வரவுள்ள விஜய் நடித்த, ஜனநாயகன் திரைப்படம் முழுக்க முழுக்க அரசியல் படம்.
அப்படத்தின் சேட்டிலைட் உரிமத்தை முதல்வர் ஸ்டாலின் உறவினர்கள் நடத்தும்
தொலைக்காட்சி வாங்கி விட்டது; திரையிடும் உரிமையை, 'இன்பநிதி ரெட் ஜெயின்
மூவிஸ்' எனும் உதயநிதிக்கு சொந்தமான நிறுவனம் வாங்க முயற்சி செய்கிறது.
இந்த ஒப்பந்தம் தயாரிப்பாளரின் சொந்த முடிவு என்பதை ஏற்க முடியாது.
காரணம், கொடுக்கும் சம்பளத்தை வாங்கி, இயக்குநர் சொல்வதற்கேற்ப நடித்து
விட்டு செல்லும் காமெடி நடிகரல்ல விஜய். அவர் ஓர் உச்ச நடிகர். அவர்
ஒப்புதல் இல்லாமல் இதுபோன்ற ஒப்பந்தம் நடைபெறாது.
மேலும், படத்தின் உரிமையை வாங்க முதல்வரின் உறவினர்களிடம் மட்டும்தான் பணம் இருக்கிறதா, வேறு எந்த நிறுவனத்திடமும் பணம் இல்லையா?
அதுமட்டுமல்ல... ஸ்டாலின் மற்றும் அவரது உறவினர்களின் தொலைக்காட்சிகளில்,
விஜய் நடித்த படங்களும், அவரது படக்காட்சிகளும் தான் பெரும்பாலும்
இடம்பெறுகின்றன.
த.வெ.க.,வை அழிக்க நினைப்பவர்கள், தங்கள் தொலைக்காட்சியில் எப்படி விஜயின் படங்களை ஒளிபரப்புவர்?
அதை தொழிலாக மட்டும் நினைத்திருந்தால், காஷ்மீர் பைல்ஸ், கேரளா ஸ்டோரி போன்ற படங்களை ஏன் அவர்கள் ஒளிபரப்பவில்லை?
தி.மு.க., - த.வெ.க., இடையே இருக்கும் இந்த ரகசிய கூட்டணி தெரியாமல்,
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தன் பிரசாரக் கூட்டத்தில் த.வெ.க.,
கொடியைப் பார்த்தவுடன், 'தி.மு.க., ஆட்சிக்கு முடிவுகட்ட பிள்ளையார் சுழி
போட்டாச்சு' என, குதுாகலம் அடைந்தார்.
கரூர் சம்பவத்தில்,
சட்டசபையில் தனக்கு சாதகமாக பேசிய பழனிசாமிக்கு ஒரு நன்றி கூட தெரிவிக்காத
விஜய், அ.தி.மு.க.,வுடன் கூட்டணிக்கு எப்படி வருவார்?
எனவே, சாட்சிக்காரனை விட சண்டைக்கார னை தான் பழனிசாமி இனி நம்ப வேண்டும்.
கோபிசெட்டிபாளையத்தில் துாக்கம் இல்லாமல் தவிக்கும் செங்கோட்டையனை மீண்டும் அரவணைத்து, அவரை ஆசுவாசப்படுத்த வேண்டும்.
அதேபோன்று, பன்னீர்செல்வத்தையும் அ.தி.மு.க.,வில் இணைக்க வேண்டும்.
கடந்த 2021ல், பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்த பன்னீர்செல்வம்,
இன்று தன் இடுப்பில் அ.தி.மு.க., கரை வேட்டியை கட்டுவதற்கு கூட
உரிமையில்லாமல் தனித்து நிற்கிறார்.
அவரது பாவம், பழனிசாமிக்கு வாழ்நாள் சாபமாகி விடும். எனவே, அவரை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும், அண்ணாதுரை எப்படி ராஜாஜியை கூட்டணியில் சேர்த்துக்கொண்டு ஆட்சி
அமைத்தாரோ, அதுபோல், அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் தினகரனை
கூட்டணியில் சேர்த்துக்கொண்டால், அ.தி.மு.க.,வின் வெற்றி நிச்சயம்!
எனவே, விஜயை நம்பி தப்புக் கணக்கு போடுவதை நிறுத்தி, அ.தி.மு.க.,வின்
வெற்றிக்கு திட்டமிடுவது தான், கட்சிக்கு மட்டுமல்ல, பழனிசாமிக்கும்
நல்லது!
எப்படி நிரூபிக்க முடியும்?
ஆர்.சுப்புராமன், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ- மெயில்' கடிதம்: தொல்லியல் துறைக்கு நிரந்தர பேராசிரியர்கள் இல்லாததாலும், வரலாறு பாடத்துக்கு தொல்லியல் படிப்பு இணையானது இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சென்னை பல்கலையின் பாரம்பரியம் மிக்க பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை மூடப்படவுள்ளதாம்.
'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்றார், முண்டாசு கவிஞன் பாரதி.
அந்த ஆலோசனையை கருத்தில் வைத்து, நாடு முழுதும் ஆயிரக்கணக்கான பள்ளிகளை திறந்து, மாணவ- - மாணவியரின் கல்விப் பசியை தீர்த்து வைத்தவர் பெருந்தலைவர் காமராஜர். அதனால் தான் இன்றும் அவரது புகழ் நிலைத்து நிற்கிறது.
ஆனால், தமிழ், தமிழர் நலன் என்று கூறிக் கொண்டு, இருமொழி கொள்கை என்ற பெயரில் மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் தி.மு.க., இந்த ஆண்டில் மட்டும், 208 பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்தி உள்ளது!
ஆட்சியாளர்கள் சாராய கடைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் ஒரு சதவீதம் அரசு பள்ளிகளுக்கு கொடுத்திருந்தால், பள்ளிகள் மூடுவிழா கண்டிருக்காது. இந்நிலையில் தற்போது, தொல்லியல் துறைக்கும் மூடுவிழா நடத்த உள்ளது, தமிழக அரசு.
இதில், 'தொல்லியல் படிப்பு வரலாற்று துறை படிப்புக்கு இணையானது இல்லை' என்று தமிழ்நாடு உயர் கல்வி மன்றம் கூறியுள்ளதால், வரலாற்றுத் துறை பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்திருந்த தொல்லியல் படிப்பு படித்தோரின் விண்ணப்பங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் நிராகரித்துள்ளதாம்!
வரலாறு என்பது உண்மையாகவும் இருக்கலாம்; திரிக்கப்பட்ட தாகவும் இருக்கலாம்.
உதாரணத்திற்கு, ஐ.நா.,வில் ஈ.வெ.ரா., உரையாற்றினார் என்று தி.க.,வினர் கட்டுக்கதை கூறுவதுபோலவும், 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற திருமூலர் வார்த்தையை அண்ணாதுரை கூறியதாக அடித்து விடும் திராவிட கட்சிகள் போலவும், வரலாறு சில இடங்களில் உண்மையாகவும், சில இடங்களில் திரிக்கப்பட்டதாகவும் இருக்கும்.
அதேநேரம், அந்த வரலாற்றிற்கு உயிர் கொடுத்து, புதிய வரலாற்றை படைப்பது தொல்லியல் துறை மட்டுமே!
அதற்கு மூடு விழா நடத்தினால், அப்படிப்பை எவர் படிக்க முன்வருவர், கீழடி போன்ற ஆய்வுகள் எப்படி நடைபெறும்? ஓர் இனத்தின், மொழியின் வரலாற்றை உலகிற்கு எப்படி நிரூபிக்க முடியும்!
வீதிதோறும் டாஸ்மாக் கடை அமைக்கவும், அதற்கு ஊழியர்களை நியமித்து கல்லா கட்டும் அரசுக்கு, ஓர் ஆய்வு படிப்புக்கான வசதிகளை செய்து கொடுக்க முடியாமல், அந்த துறையையே இழுத்து மூட நினைப்பது தான் தமிழகத்திற்கு செய்யும் நன்மையா?

