PUBLISHED ON : ஏப் 11, 2025 12:00 AM

எஸ்.உதயம் ராம், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டமைக்கப்பட்ட அ.தி.மு.க., இன்று, 'சொதப்பல் சூப்பர் கிங்' அணிபோல், பரிதாப நிலையில் இருப்பதற்கு காரணம், பழனிசாமி என்ற தனிமனிதரின் சுயநலமே!
அ.தி.மு.க.,வில் பிளவு ஒன்றும் புதிதல்ல; எம்.ஜி.ஆரை எதிர்த்து பிரிந்து சென்ற அக்கட்சியின் மூத்த தலைவர் எஸ்.டி.சோமசுந்தரம், 'நமது கழகம்' என்ற கட்சியைத் துவக்கி, தராசு சின்னத்தில் நின்று, படுதோல்வி அடைந்தார். அவரை மன்னித்து, கட்சியில் சேர்த்து அமைச்சராக்கினார், எம்.ஜி.ஆர்., அதுதான், அவரது பெருந்தன்மை!
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின், ஜானகி - ஜெயலலிதா என, அ.தி.மு.க., இரு அணியாக பிளவுபட்டு, இரட்டை இலை சின்னமே முடக்கப்பட்டது. கட்சி நலனை கருத்தில் வைத்து, பெருந்தன்மையுடன் ஜெயலலிதாவிற்கு விட்டுக் கொடுத்தார், ஜானகி.
ஜானகி அணி உருவாக காரணமாக இருந்த ஆர்.எம்.வீரப்பனையும், கட்சி அலுவலகத்தில் ஜெயலலிதாவின் படத்தை துாக்கிப் போட்டு உடைத்த திருநாவுக்கரசையும், நால்வர் அணி என்ற பெயரில் தன்னை எதிர்த்து நின்ற நெடுஞ்செழியன், ராஜாராம், பண்ருட்டி ராமச்சந்திரன், அரங்கநாயகம் ஆகிய நால்வரையும், கட்சி நலன் கருதி இணைத்து, அவர்களை எல்லாம் அமைச்சர்களாக்கி, அழகு பார்த்தார் ஜெயலலிதா.
இப்படி கட்சியைப் பலப்படுத்தி, தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, மத்திய அரசையே ஆட்டிப் படைக்கும் ஆளுமை மிக்க சக்தியாக விளங்கினார், ஜெயலலிதா.
அவரது மறைவிற்கு பின், அ.தி.மு.க.,வை உடைத்த பெருமை சசிகலாவையே சேரும்!
அ.தி.மு.க.,வால் மட்டுமே தி.மு.க.,வை எதிர்த்து வெற்றி பெற முடியும் என்பதை உணர்ந்து, அன்றைய தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், ராஜ்பவன் மரபையும் மீறி, பழனிசாமி - பன்னீர்செல்வத்தை ஒருங்கிணைத்தார்.
பழனிசாமியும் தன் ஆட்சிக்காலத்தை பூர்த்தி செய்தார்!
இன்றும் ஒன்றுபட்ட அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்கவே, பா.ஜ., விரும்புகிறது. தனித்தன்மையுடன் வெற்றிபெற பழனிசாமி ஒன்றும் எம்.ஜி.ஆர்., அல்ல; 'நாற்பதும் நமதே' என்று சவால் விட்டு வெற்றி பெற, ஜெயலலிதாவும் அல்ல!
இந்த உண்மையை புரிந்துகொண்டு, கட்சியில் இருந்து பிரித்து வைத்திருக்கும் அனைவரையும் ஒருங்கிணைத்து, தேர்தலை சந்திக்க வேண்டும்.
அத்துடன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை நீக்க வேண்டும் என்ற வேண்டாத பிடிவாதத்தை பழனிசாமியும், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி என்றால் தலைவர் பதவி வேண்டாம் என்று கூறுவதை, அண்ணாமலையும் கைவிட்டு, தமிழக நலனுக்காக கைகோர்க்க வேண்டும்!

