PUBLISHED ON : ஜூன் 09, 2026 12:00 AM

என்.கந்தையா, கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி, அண்டை நாடுகளிலிருந்து சட்ட விரோதமாக வந்து தங்கியவர்களுக்கு இருப்பிடம் முதல் வாக்காளர் அடையாள அட்டை வரை அனைத்தையும் வழங்கி, அவர்களை இந்திய குடிமக்களாக்கி, அவர்களது ஓட்டுகளை பெற்று, தொடர்ந்து ௧௫ ஆண்டுகளாக முதல்வராக கோலோச்சிக் கொண்டிருந்தார்.
அவரது தில்லாலங்கடி வேலையை கண்டுபிடித்த மத்திய அரசு, நாட்டின் பல்வேறு பகுதிகளில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் கமிஷன் வாயிலாக நடத்தியது.
இதனால், தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்கள், எங்கே தங்கள் சாயம் வெளுத்து விடுமோ என்ற அச்சத்தில், துவக்கத்திலிருந்தே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
அதிலும், மம்தா இதை எதிர்த்து, வன்முறைகளை கையாண்டு பார்த்தார்; நீதிமன்றம் ஏறி, தானே கறுப்பு கவுனை அணிந்து வாதாடியும் பார்த்து விட்டார்; ஒன்றும் பலிக்கவில்லை.
விளைவு, சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், மம்தாவின் அரசியல் வாழ்வுக்கு முடிவுரை எழுதப்பட்டு, பா.ஜ., ஆட்சிக் கட்டிலிலில் ஏறியுள்ளது.
இந்நிலையில், மம்தாவிற்கு ஆதரவாக, 'மே.வங்கத்தில் ஆளும் பா.ஜ., அரசு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் முடிவுகளை அடிப்படையாக வைத்து, ரேஷன் கார்டுகளை ரத்து செய்வது கண்டனத்துக்குரியது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் தான் ரேஷன் கார்டு வழங்கப்படும் எனக் கூறுவது, ஜனநாயகத்துக்கு விரோதமானது' என்று கூறியுள்ளார், ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி.
சட்டவிரோதமாக இங்கு வந்து தங்கியுள்ளவர்களுக்கு முதலில் ரேஷன் கார்டு கேட்பது, அப்புறம், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என்று பெற்றுக் கொடுத்து, அவர்களை வைத்து ஆட்சியை பிடித்து, இந்நாட்டின் இறையாண்மையை கொஞ்சம் கொஞ்சமாக அழிப்பது தானே, ஓவைசி போன்றவர்களின் எண்ணம்!
இந்த அராஜக எண்ணம் இனி ஒருபோதும் பலிக்காது!
------
ஒரு கல்லில் இரண்டு மாங்காய்!
ஜெ.கோபாலன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருச்சி செயின்ட் ஜோசப் கல்லுாரி மைதானத்தில் நடந்த முதல்வர் விஜயின் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம், தேர்தல் வெற்றிக் கொண்டாட்டம் மட்டுமல்ல; தமிழக அரசியலின் எதிர்காலப் பாதையைத் தீர்மானிக்கும் மாபெரும், அரசியல் சதுரங்கம்!
விஜயின் பேச்சில் வெளிப்படையாகத் தெரிந்த, தி.மு.க., எதிர்ப்பு என்ற அம்பு, மறைமுகமாகத் தாக்கியிருப்பது அ.தி.மு.க-வைத் தான்!
'இனி போட்டி என்னவோ, தி.மு.க-.,விற்கும் த.வெ.க.,-விற்கும் மட்டும் தான்; இடையில் எவருக்கும் இடமும் இல்லை, பங்கும் இல்லை' என்று, அவர் பிரகடனப்படுத்தியதன் பின்னணியில், அ.தி.மு.க.,விற்கு இனி எதிர்காலம் இல்லை என்பதை மறைமுகமாக உணர்த்தி, அந்த ஓட்டு வங்கியை தன்வசம் இழுக்கும் முயற்சி என்றே சொல்லலாம்!
அதனால் தான், 'முதன் முதலில் கட்சி துவங்கியபோது, எம்.ஜி.ஆர்., வாங்கிய ஓட்டு சதவீதத்தை விட, த.வெ.க., அதிக ஓட்டுகள் வாங்கியிருப்பதாகச் சொல்கின்றனர். எம்.ஜி.ஆருடன் என்னை ஒருபோதும் ஒப்பிடவில்லை. எம்.ஜி.ஆர்., என்றும் எம்.ஜி.ஆர்., தான். நான், எம்.ஜி.ஆர்., அண்ணாதுரை, ஈ.வெ.ராமசாமி காட்டிய வழியில் உழைக்க வந்தவன்' என்று கூறியுள்ளார்.
இதிலிருந்து, தான் எம்.ஜி.ஆர்., அல்ல என்று பெருந்தன்மையுடன் மறுப்பது போல் காட்டி, அதேநேரம், அவரது அரசியல் வாரிசு தான் என்பதை, அ.தி.மு.க., தொண்டர்களின் மனதில் பதிய வைக்க முயல்கிறார்.
த.வெ.க-.,வின் இளம் படை பலத்தோடு, அ.தி.மு.க-.,வின் பாரம்பரிய ஓட்டு வங்கியும் இணைந்தால், அது, தி.மு.க-.,விற்கு எதிரான பலமான கோட்டையாக மாறும் என்பதை, விஜய் நன்றாகவே உணர்ந்துள்ளார். சுருக்கமாகச் சொன்னால், திருச்சியில் விஜய் பேசியது, தி.மு.க-.,விற்கான எச்சரிக்கை மணி மட்டுமல்ல, அ.தி.மு.க., தொண்டர்களை தன் பக்கம் ஈர்க்கும் முயற்சியே என்றால், அது மிகையில்லை!
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்த நினைக்கிறார், விஜய். இரு திராவிட கட்சிகளும் வீழுமா அல்லது வீறு கொண்டு எழுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
------
நம்பிக்கையை ஏற்படுத்துகிறது!
கு.அருணாச்சலம், கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த தி.மு.க., ஆட்சியில், நகராட்சி நிர்வாகத் துறையில, 643 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக அப்போதைய நகராட்சி துறை அமைச்சர் நேரு மீது புகார் எழுந்தது. இப்புகார் மீது வழக்கு பதிவு செய்ய, தமிழக டி.ஜி.பி.,க்கு அமலாக்கத் துறை கடந்த ஆண்டு அக்டோபர் 27ல் கடிதம் அனுப்பியது.
பொதுவாக, ஒரு கிராம நிர்வாக அதிகாரி, 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கினால், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைக்கின்றனர்.
அதே லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ஆட்சியாளர்கள் மீதான ஊழல் புகார் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை.
மத்திய அரசின் கீழ் இயங்கும் அமலாக்கத் துறை, நேருவின் ஊழல் குறித்து போதிய ஆதாரங்களுடன், தமிழக டி.ஜி.பி.,க்கு புகார் அனுப்பியும், அதை தமிழக காவல் துறை கண்டுகொள்ளவில்லை.
சென்னை உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 20ல் நேருவின் மீதான ஊழல் புகார் குறித்து வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்தும், தமிழக காவல் துறை செவி சாய்க்கவில்லை.
இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்; கடந்த ஆட்சியின் துணிகர ஊழல்களை!
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேருவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யவும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கை தொடர்ந்து நடத்தவும் அமலாக்கத் துறைக்கு தமிழக கவர்னர் அனுமதி அளித்துள்ளதும் மகிழ்ச்சி அளிக்கிறது.
காலம் கடந்தாலும், இந்த ஊழல்வாதிகள் மீது தற்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், விரைவில் அவர்களுக்கு தண்டனை பெற்று தரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது!
