தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/இது உங்கள் இடம்/கள்ள உழைப்பாளர்களுக்கு கடிவாளம் வேண்டும்!

கள்ள உழைப்பாளர்களுக்கு கடிவாளம் வேண்டும்!

கள்ள உழைப்பாளர்களுக்கு கடிவாளம் வேண்டும்!

3


PUBLISHED ON : ஜூன் 08, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 08, 2026 12:00 AM

3


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த தி.மு.க., ஆட்சியில், அனைத்து அரசு அலுவலகங்களிலும், 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவு அமல்படுத்தப்படும் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. அதற்கு அரசு ஊழியர்கள் கடுமையாக எதிர்க்கவே, அதை அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர் ஆட்சியாளர்கள்.

தற்போது, த.வெ.க., அரசு, அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு கட்டாயமாக்கப்படும், நடப்பு ஆண்டு இறுதிக்குள் முழுமையாக அமல் படுத்தப்படும் என்று கூறியுள்ளது.

இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.

ஏனெனில், அரசு அலுவலகங்களுக்குச் சென்றால், நாம் பார்க்க வேண்டிய ஊழியர்கள் பெரும்பாலும் இருக்கையில் இருப்பதில்லை. டீ, காபி குடிக்க வெளியில் சென்றிருப்பர்; இல்லையென்றால், கைபேசியில், 'பிசி'யாக இருப்பர்.

இத்தகைய ஒழுங்கீனங்களை தவிர்க்க, போகும் நேரம், திரும்பி வரும் நேரம் பதிவு செய்யப்பட வேண்டும்; அத்துடன், வேலை நேரத்தில் மொபைல் போனில் நேரத்தை செலவிடுவதையும் தடுக்க வேண்டும்; அப்போது தான், அரசு பணிகளில் தேக்கம் ஏற்படாது.

அதேநேரம், ஊதிய உயர்வு, பழைய ஓய்வு ஊதியம், போனஸ், பதவி உயர்வு வேண்டும் என்று உரிமைக்குரல் எழுப்பும் அரசு ஊழியர்கள், தாங்கள் வாங்கும் சம்பளத்திற்கு நேர்மையாக உழைக்க வேண்டும்.

தேர்தலின் போது அரசு ஊழியர்களின் தயவு தேவைப்படும் என்று கணக்கு போட்டு, இதுபோன்ற செயல்பாடுகளை ஆட்சியாளர்கள் சகித்துக் கொண்டால், அது, அரசுக்கு தான் கெட்ட பெயரை ஏற்படுத்தும்.

எனவே, கள்ள உழைப்பாளர்களுக்கு அரசு கடிவாளம் போடுவது காலத்தின் கட்டாயம்!

படிப்பது ராமாயணம் இடிப்பது ராமர் கோவிலா?


ஆர்.மகேசன், அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மக்கள் அறியாமையில் இருக்கும்வரை, அரசியல்வாதிகளும், சினிமா துறையினரும் பிழைத்துக்கொள்வர். மக்களுக்கு அறிவு இருந்தால் ஏன் சினிமா பார்க்கின்றனர்?' என்று கேட்டு உள்ளார், நடிகர் சிவகுமார்.

முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா போன்றோருடன் இணைந்து நடித்த சிவகுமார், அவர்கள் முதல்வர்களாக கோலோச்சிய காலத்தில், இக்கருத்தை கூறியிருக்கலாமே... ஏன் கூறவில்லை?

தன் சினிமா பிழைப்பு கெட்டு விடும்; தன் மகன்கள் நடிகர்கள் சூர்யா, கார்த்திக்கின் சினிமா வாழ்வு அஸ்தமனம் ஆகிவிடும் என்பதால் தானே?

ஒரு சாதாரண ஓவியராக பிழைப்பு தேடிச் சென்னைக்கு வந்த பழனிச்சாமி என்ற நபரை, சிவகுமாராக மாற்றி அங்கீகாரமும், அடையாளமும் கொடுத்து உச்சத்தை அடையச் செய்தது, இதே சினிமா தானே? திரைப்படத்தில் நடிக்காமல், படம் மட்டும் வரைந்து கொண்டிருந்தால், இவரை தமிழகத்தில் எவருக்கு தெரிந்திருக்கும்?

அறிவற்ற தமிழக மக்கள், இவரது அரிதாரம் பூசிய முகத்தைக் காண, வரிசைகட்டி நின்றதால் தானே இன்று கோடீஸ்வரராக இருக்கிறார்?

இவரது மகன்கள், மருமகள் என குடும்பமே கோடிகளைக் குவித்து, சொகுசு வாழ்க்கை வாழ்வதும் இதே சினிமாவால் தானே!

படிப்பது ராமாயணமாம்; இடிப்பது ராமர் கோவிலாம்!

பெருந்தன்மை வேண்டும்!




கோ.ராஜேஷ் கோபால், மணவாளக்குறிச்சி, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு பின், திராவிட கட்சிகள் அல்லாத ஒரு கட்சியை மக்கள், தங்களை ஆள்வதற்காக தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால், அக்கட்சி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த உடனேயே, எதிர்க்கட்சிகள் பல்வேறு குடைச்சல்களை கொடுக்கத் துவங்கி விட்டனர்.

புதிதாக ஓர் அலுவலகத்தில் பணிக்கு சேர்பவர்களுக்கு கூட, தங்களுக்கான வேலையை புரிந்து செய்ய, சில நாட்கள் தேவைப்படும். அப்படியிருக்கும் போது, ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தை, அதில் முந்தைய ஆட்சியாளர்கள் போட்டு வைத்துள்ள ஓட்டையை புரிந்து கொள்ள, குறைந்த பட்சம் சில மாதங்களாவது தேவைப்படும்.

அதற்கான கால அவகாசத்தை எதிர்க்கட்சிகள் கொடுக்க மறுப்பது சரியா?

முன்னாள் பிரதமர் நேரு, படிக்காத மேதையான காமராஜரிடம் ஆலோசனைகள் கேட்டு, ஆட்சி நடத்தினார்; தான் படித்தவர், அவர் படிக்காதவர் எனும் அகந்தை அவரிடம் இல்லை. அதேபோல காமராஜரும், எதிர்க்கட்சிகள் கூறிய பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியதுடன், ஆலோசனை கூறியதற்காக அவர்களுக்கு நன்றியும் கூறினார்.

இன்று, அத்தகைய பெருந்தன்மையோ, நற்குணமோ எந்த ஓர் அரசியல் தலைவரிடமும் இல்லை. எல்லா கட்சிகளும் ஏதாவது ஒரு பதவி கிடைத்தால் போதும் என்ற எண்ணத்துடனே செயல்படுகின்றன. மக்கள் எதிர்பார்ப்பது நல்லாட்சி மற்றும் ஆரோக்கியமான அரசியல் செயல்பாடுகளை தானே தவிர, வெறும் எதிர்ப்பு அரசியலை அல்ல!

எனவே, புதியவர்கள் ஆட்சி நிர்வாகத்தை தெரிந்து கொள்ள சிறிது காலம் ஒதுக்கலாம்; அதன்பின்பும் தவறு நடந்தால் குறைகளை சுட்டிக் காட்டலாமே!

lll

பழைய ஓய்வூதிய திட்டம் அமலாகுமா? என். உஷா, மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ​ தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி, கடந்த ஆறு மாதங்களில் ஓய்வு பெற்ற, 8,000-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும், ஆசிரி யர்களும் தங்களுக்குரிய ஓய்வூதியம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

ஆயுள் முழுதும் உழைத்தவர்கள், அந்திமக் காலத்தில் தங்களின் வாழ்வாதாரத்திற்காகப் போராடும் நிலைக்கு, அரசியல்வாதிகள் அவர்களை தள்ளியுள்ளனர்.

கடந்த 2021 தேர்தலின் போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்' என்று, தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்தது.

ஆனால், ஆட்சிக்கு வந்த பின், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாமல், ஆட்சி முடியும் தருவாயில், 'உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்' என்ற பெயரில், கண் துடைப்பு திட்டத்தை அறிவித்தது.

புதிய திட்டத்தின்படி, கடைசியாக வாங்கும் சம்பளத்தில், 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டதே தவிர, அதற்கான, விதிமுறைகள் வகுக்கப்படவில்லை. கருவூலக் கணக்குத்துறை மென்பொருட்களிலும் மாற்றம் செய்யாததால், கடந்த ஜனவரி முதல் ஓய்வு பெற்ற, 8,000 பேருக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட ஓய்வூதியம் கிடைக்கவில்லை.

தமிழக வெற்றிக் கழகம் தன் தேர்தல் அறிக்கையில், 'தி.மு.க.,வின் திட்டத்தை ஒழித்து, முழுமையான பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலிக்கப்படும்' என்று கூறியிருந்தது.

ஆனால், ஆட்சிக்கு வந்து இத்தனை நாட்களாகியும் இதில் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது கூட இன்னும் தெரியவில்லை.

​ த.வெ.க., அரசு இனியும் காலந்தாழ்த்தாமல், மென்பொருள் குறைபாடுகளைச் சரிசெய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us