தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ ஊழல்வாதிகள் தப்பிக்க கால அவகாசம் தரலாமா?

 ஊழல்வாதிகள் தப்பிக்க கால அவகாசம் தரலாமா?

 ஊழல்வாதிகள் தப்பிக்க கால அவகாசம் தரலாமா?

1


PUBLISHED ON : ஜூன் 07, 2026 12:09 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 07, 2026 12:09 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லால்குடி வெ.நாராயணன், மாம்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

​ தமிழக மின்சார வாரிய தலைமையகத்தின் பாதுகாப்பு கோட்டைக்குள் நுழைந்து, லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் சி.பி.ஐ., விசாரணை வளையத்தில் இருந்த முக்கிய ரகசியத் தரவுகள் அடங்கிய, 10 கணினி ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்டுள்ளன.

மின்சாரத் துறை அமைச்சர், 'தவறு செய்பவர்கள் எவரும் தப்ப முடியாது' என்று எச்சரித்த சில நாட்களிலேயே இத்திருட்டு அரங்கேறியுள்ளது.

மேலாண்மைத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த நிலக்கரி கொள்முதல் விபரங்களே, இத்திருட்டின் முதன்மை இலக்கு. காகித ஆவணங்கள் இருந்தாலும், கணினியில் இருந்த மிக முக்கியமான மென்பிரதிகள் அனைத்தும், தற்போது திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளன.

​குறைந்தது, 10 ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்டிருந்தாலும், வெறும், எட்டு டிஸ்க்குகள் தொடர்பாக மட்டுமே, இதுவரை புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

நிதித்துறை உள்ளிட்ட முக்கியப் பிரிவுகளின் அதிகாரிகள், லஞ்ச ஒழிப்புத் துறையிடமோ அல்லது காவல் துறையிடமோ முழுமையாக புகார் அளிக்க தயங்குகின்றனர்.

யாரை பார்த்து இந்த பயம்?

சென்னையின் அனைத்து இடங்களிலும், 'சிசிடிவி' கேமராக்கள் இருக்கும் நிலையில், மின் வாரிய தலைமையகத்தின் முக்கிய மாடிகளில், கடந்த ஐந்து ஆண்டுகளாக, 'சிசிடிவி' கேமராக்கள் இல்லையாம்!

ஏன்... கமிஷன் மற்றும் ஒப்பந்த முறைகேடுகளை அரங்கேற்றும் இடைத்தரகர்களின் முகத்தை, 'சிசிடிவி' காட்டி கொடுத்துவிடும் என்பதற்காக அமைக்கவில்லையா?

கடந்த வாரம் தான், மின்மாற்றி கொள்முதலில், 397 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாகக் கூறி, அதுகுறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகளும், 2021 - 2023-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்து, 'டெண்டர்'களின் நிதிப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ய துவங்கியுள்ளன.

மத்திய அமைப்புகளின் கைகளில் இந்த ஆதாரங்கள் சிக்கினால், தி.மு.க.,வின் மொத்த குட்டும் வெளிப்பட்டு விடும் என்ற பயத்தில், இத்திருட்டு அரங்கேறியுள்ளது!

கடந்த கால ஊழல்கள் மீது உடனடியாகத் தனிப்படை அமைத்து, ஆவணங்களைப் பறிமுதல் செய்யாமல், புதிய அரசு காலதாமதம் செய்ததன் விளைவுதான் இத்திருட்டு!

நிர்வாகத் தாமதம் என்பது, ஊழல்வாதிகள் அதிலிருந்து தப்பிக்க, அரசு தரும் கால அவகாசம் என்பதை உணர்ந்து, முதல்வர் விஜய் சாட்டையை சுழற்ற வேண்டும்!

அண்ணாமலையின் சேவை தமிழகத்திற்கு தேவை!


எம்.மாதேஷ், திருநெல்வேலியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகி, 'வீ த லீடர்' என்ற அரசியல் அமைப்பை உருவாக்கியுள்ளார். இது, பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும், தன் அரசியல் அமைப்பில் இணையுமாறு அண்ணாமலை மக்களைக் கேட்டுக் கொண்ட அடுத்த சில நிமிடங்களிலேயே, லட்சக்கணக்கானோர் அந்த அமைப்பில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துள்ளனர்.

இந்த அமைப்பு, அரசியல் கட்சியாக மாற்றம் அடைந்து, 2031 சட்டசபை தேர்தலில் போட்டியிடும் என்று கூறியுள்ளார், அண்ணாமலை.

கடந்த 60 ஆண்டுகளாக, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., என, இரு திராவிடக் கட்சிகளைச் சுற்றியே தமிழக அரசியல் களம் நகர்ந்து வந்துள்ள நிலையில், தற்போது தான், அதிலிருந்து மாறுபட்டு தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை பிடித்துள்ளது.

இந்நிலையில், அண்ணாமலை போன்ற ஆளுமை மிக்க தலைவர், படித்தவர் அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளது, திராவிடக் கட்சிகளிலிருந்து மாற்றம் வேண்டிய மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாகவே உள்ளது.

முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியான அண்ணாமலை, கர்நாடக மாநில காவல் துறை அதிகாரியாக சாதித்துள்ளார்; மாணவர்களை அவ்வப்போது சந்தித்து உரையாடி வருகிறார்.

அவரது அரசியல் அணுகுமுறை, எதிர்க்கட்சியினரை கையாளும் தன்மை மற்றும் பத்திரிகையாளர்களின் கேள்விகளை எதிர்கொள்ளும் திறன் படித்தவர்களை மட்டுமல்ல; பாமர மக்களையும் இழுக்கிறது.

அதேபோன்று, எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும், அதில், அழுத்தமாகவும், ஆழமாகவும் பேசும் அவரது பேச்சுத் திறமை, இளைஞர்களிடையே அவருக்கென தனி செல்வாக்கை உருவாக்கியுள்ளது.

பா.ஜ.,வில் அவர் வளர்ச்சியை தாங்காதவர்கள் நடத்திய அரசியல் சதிராட்டத்தில் மனம் வெறுத்துப் போய் இருந்த அண்ணாமலை, இனி, தமிழக மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து, முழு சுதந்திரமாக செயல்படுவார்.

அவரது அறிவு கூர்மை, தொலைநோக்கு பார்வையுடன் கூடிய சேவை தமிழகத்திற்கு தேவை. தொடரட்டும் அவரது அதிரடி அரசியல் பயணம்!

வேப்பம் பூ ஆனது தி.மு.க.,!


எஸ்.ராதிகா, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'கடிதம்::

வரும் தேர்தல்களில் கூட்டணி இல்லாமல், தி.மு.க., தனித்து நிற்க வேண்டும் என்று பேச ஆரம்பித்துள்ளனர், அக்கட்சி தலைவர்கள்.

கூட்டணி இல்லாமல், தி.மு.க., தேர்தலை சந்தித்த வரலாறு இல்லை. தங்களின் மிகப்பெரிய பலமாக அவர்கள் கருதுவதே கூட்டணிக் கட்டமைப்பைத்தான்!

ஆனாலும், நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவு, அவர்களின் கூட்டணி கட்டமைப்பை வெகுவாகவே பதம் பார்த்து விட்டது!

தேர்தலுக்கு முன், மேடை தோறும், 'கொள்கை கூட்டணி' என்று முழங்கியவர்கள், தேர்தல் முடிவிற்கு பின், 'துரோகிகள்' என்று வசைமாறி பொழிந்து கொண்டிருக்கின்றனர்.

இங்கு, அரசியல்வாதிகளுக்கு ஆட்சி அதிகாரமும், அதில் கிடைக்கும் பங்கு மட்டும் தான் கொள்கையே தவிர, உண்மையில் அவர்களுக்கு கொள்கை என்று எதுவும் இல்லை.

தேர்தல் நேரத்தில், தி.மு.க., தங்களை, 'பெரிய அண்ணன்' மனப்பான்மையோடு நடத்தியபோதும், அக்கட்சியின் பண பலத்தை மீறி, தாங்கள் வெற்றி பெற முடியாது என்பதால், வேறுவழியின்றி தி.மு.க.,வை சகித்துக் கொண்டன, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் உதிரிக் கட்சிகள்!

இன்று, தமிழக வெற்றிக் கழகம் போன்ற மாற்றுச் சக்திகள் உருவெடுத்து, தங்களுக்கு ஆட்சியில் பங்கு தரத் தயாராக இருக்கும்போது, உதிரிக்கட்சிகள் தங்களின், 'கொள்கை' முகமூடியை கழற்றி எறிந்து விட்டன.

ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை என்பது போல், உதிரிக்கட்சிகளுக்கு இதுவரை தி.மு.க., சர்க்கரையாக இருந்தது; இப்போது, ஆலையும் வந்து, அதில் அதிகாரமும் கொடுத்து விட்டதால், இலுப்பை பூ வேப்பம் பூ ஆகி விட்டது.

இனியாவது, கூட்டணி என்ற ஊன்றுகோலை துாக்கி எறிந்து விட்டு, தன் சொந்த காலில் தி.மு.க., நிற்கட்டும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us