PUBLISHED ON : நவ 15, 2025 12:00 AM

கு.அருண், கடலுாரில் இருந்து அனுப்பிய,
'இ - மெயில்' கடிதம்: கடந்த 2021 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,
மிகப்பெரிய தோல்வி அடையவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில், 13 சிறிய
கட்சிகளின் ஆதரவுடன் தேர்தலை சந்தித்து, 75 இடங்களில் வெற்றி பெற்றது.
மற்ற தொகுதிகளிலும் கூட சொற்ப எண்ணிக்கையிலான ஓட்டு வித்தியா சத்தில் தான்
தோற்றது.
தற்போது, அதே வலிமையுடன் அ.தி.மு.க., உள்ளதா என்றால், அது கேள்விக்குறியே!
ஏனெனில், அ.தி.மு.க., பல அணிகளாக பிரிந்து விட்டது.
இன்றைய நிலையில் தென்மாவட்டங்களில் மட்டும் அல்லாமல், டெல்டா
மாவட்டங்களிலும் அ.தி.மு.க.,வின் ஓட்டுகள் ஜாதி ரீதியாக பிளவுபட்டுள்ளன .
இந்நிலையில், கொங்கு மண்டலத்தை சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்
செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது, அவர் சார்ந்த தொகுதியில்
அ.தி.மு.க., விற்கு பின்னடைவை ஏற்படுத்தும்.
அத்துடன், 2021ல்
அ.தி.மு.க.,வுடன் கூட்டணியில் இருந்த கட்சிகளில், பா.ஜ., மற்றும்
த.மா.கா.,வை தவிர, பிற கட்சிகள் தற்போது வரை, அக்கட்சியின் கூட்டணியில் சேர
முன்வரவில்லை.
இதில், பா.ம.க., இரண்டாக பிரிந்து விட்டது; தே.மு.தி.க.,வோ தற்போது வரை எந்த கூட்டணி என்று அறிவிக்காமல் மவுனம் காக்கிறது.
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம், அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து
விடும், தனக்கு வேறு எவருடைய உதவியும் தேவைப்படாது என்று நம்பிக்கையுடன்
காத்திருந்த பழனிசாமிக்கு, 'நான் தான் முதல்வர் வேட்பாளர்' என்று கூறி,
பழனிசாமியின் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார், விஜய்.
இதனால், மாற்றி யோ சிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார், பழனிசாமி.
எனவே, இப்போதாவது கட்சியை வலுப்படுத்த அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்தவர்களை ஒருங்கிணைத்து தேர்தலை சந்திக்க வேண்டும்.
அப்போது தான், கூட்டணி மற்றும் பணபலத்தால் எளிதாக வெற்றி பெற்று விடலாம்
என்று கனவு கண்டு கொண்டிருக்கும் தி.மு.க.,வை வெல்ல முடியும்.
'ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்' என்பது போல்,
அ.தி.மு.க.,விற்குள் ஏற்பட்டுள்ள பிளவு தி.மு.க.,விற்கு கொண்டாட்டத்தை
கொடுத்துள்ளது. அ.தி.மு.க., - எம்.பி., அன்வர் ராஜாவை தொடர்ந்து,
பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ., மனோஜ்
பாண்டியன் போன்ற அடுத்த கட்ட தலைவர்களை இழுக்கும் வேலையில் தி.மு.க.,
தீவிரமாக இறங்கி விட்டது.
கூடாரம் முழுதும் காலி ஆவதற்குள்
பழனிசாமி விழித்துக் கொண்டு பிரிந்தவர்களை ஒருங்கிணைத்து, கட்சியை
வலிமைப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்!
lll
முதியோர் மீதான அன்பு தொடருமா? வி.எஸ்.ராமச்சந்திரன், செம் பட்டி,
திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக
அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில், மூத்த குடிமக்களின்
நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக, 'முதியோர் மனம் மகிழ் மையம்' என்ற பெயரில்,
அன்புச்சோலை திட்டத்தை திருச்சியில் துவக்கி வைத்துள்ளார், தமிழக முதல்வர்.
உண்மையில் இது வரவேற்கப்பட வேண்டிய திட்டம்!
பிள்ளைகளால் ஒதுக்கப்பட்டும், பராமரிக்க எவரும் இல்லாத முதியோருக்கு இம்மையங்கள் நிச்சயம் ஆறுதலை தரும்.
கணவன் - மனைவி இருவரும் அலுவலகம் செல்வோர் என்றால், தங்கள் பெற்றோரை
பராமரிக்க நேரம் இல்லாமல், முதியோர் இல்லங்களில் சேர்த்து விடுகின்றனர்.
இன்னும் சில குடும்பங்களில், இரண்டு மூன்று பிள்ளைகள் இருந்தால் மாறி மாறி தங்கள் வீட்டு முதியோரை பார்த்துக் கொள்கின்றனர்.
அதேநேரம், அவர்களுடன் நேரம் செலவிட, அவர்கள் தேவைகளை கவனித்துக் கொள்ள
நேரம் இல்லாமல் பணத்தின் பின் ஓட வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.
இதனால், வீட்டில் தனியாக இருக்கும் முதியோர், பேச்சு துணைக்கு யாரும் இல்லாமல் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசு கொண்டு வந்துள்ள, அன்புச்சோலை திட்டம், நிச்சயம் அவர்களுக்கு புத்துணர்வை தரும்.
தற்போது, 25 இடங்களில் மட்டும் துவங்கப்பட்டுள்ள இம்மையங்கள், ஒவ்வொரு
ஒன்றியத்திலும் துவங்கப்பட வேண்டும். பகல் நேரம் மட்டும் செயல்படும்
என்பதால், காலையில் முதியோரை கொண்டு வந்து விட்டுவிட்டு, மாலையில்
அழைத்துச் செல்ல வேண்டிய நி லை உள்ளது.
இதற்கும், ஏதாவது மாற்று ஏற்பாடு அரசு செய்ய வேண்டும்!
முறையாக, நேர்மையாக செயல்படுத்தினால் இத்திட்டம் அரசுக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும் என்பதில் சந்தேகம் இல்லை!
lll
தேசபக்தர்களாகி விடுவரா?
ஆர்.சுப்பிரமணியம், புதுச்சேரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசியல்வாதிகளிடம் ஒரு பிரத்யேக குணம் உண்டு. நாட்டில், ஏதாவது ஓர் அசம்பாவிதம் நடந்து விட்டால், மத்திய அரசாக இருந்தால், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்; அதேநேரம், தமிழகத்தில் எப்பேர்ப்பட்ட அசம்பாவிதம், துர்சம்பவங்கள் நிகழ்ந்தாலும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரோ, முதல்வரோ பதவி விலக கூடாது!
கைநீட்டி வாங்கிய பணத்திற்கு அவர்கள் காட்டும் விசுவாசமே இந்த பிரத்யேக குணத்திற்கு காரணம்!
அதன்படி, டில்லி செங்கோட்டைக்கு அருகில், பயங்கரவாதிகள் நிகழ்த்திய கார் குண்டுவெடிப்பில், 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலர்களில் ஒருவரான வேணுகோபால், 'டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கையாலாகத தனத்தை காட்டுகிறது. இச்சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று, அவர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். அதை விடுத்து சப்பைக்கட்டு கட்டுகிறார்' என்று கூறியுள்ளார்.
மத்தியில் காங்கிரஸ் கோலோச்சிக் கொண்டிருந்த 2008ல், பாகிஸ்தான் பயங்கரவாதிகள், மும்பையில் பல்வேறு இடங்களில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றினர். அதில், தாஜ் கோரமண்டல் ஹோட்டலும் ஒன்று!
இத்தாக்குதலில், 175 பேர் கொல்லப்பட்டனர்; 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதற்கு பொறுப்பேற்று அன்றைய பிரதமர் மன்மோகன் சிங், தன் பதவியை ராஜினாமா செய்தாரா இல்லை அன்றைய எதிர்க்கட்சியான பா.ஜ., தான் மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதா?
உள்ளிருந்து கொல்லும் வியாதி போல், நம்முடன் உறவுக்கரம் நீட்டிக் கொண்டு, நாட்டை காட்டிக் கொடுக்கும் தேச துரோகிகளும், ஓட்டுக்காக அவர்களின் வாடகை வாயர்களாக இருக்கும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை, பயங்கரவாத செயல்களை அறவே ஒழிக்க முடியாது!
இதில், உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்து விட்டால் மட்டும் தேச துரோகிகளும், அவர்களது வாடகை வாயர்களும் தேசபக்தர்களாகி விடுவரா என்ன!
lll

