PUBLISHED ON : டிச 31, 2024 12:00 AM

கே.ராமசுப்பிரமணியன், திருப்பூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரி மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக புகார் அளித்துள்ளார்; காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
'இதுபோன்று மீண்டும் நடக்காமல் இருக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தனிப்பட்ட ஒரு மாணவி பாதிக்கப்பட்ட சம்பவத்தை, அரசியல் ஆக்குவோர், கடந்த ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், அன்றைய ஆட்சியாளர்களின் அழுத்தத்தால், பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையில் புகார் அளிக்கக்கூட பயந்தனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
'தி.மு.க., ஆட்சியில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெகு சீக்கிரம் குற்றவாளிகள், சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்' என்று திராவிட மாடல் ஆட்சிக்கு விசுவாசம் காட்டியுள்ளார், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன்.
இச்சம்பவம் தொடர்பாக, காவல் துறையினர், நடைபாதை பிரியாணி வியாபாரி ஞானசேகரன் என்பவரை, அடுத்த சில மணி நேரத்தில் கைது செய்துள்ளனர்.
கழக முக்கிய பிரமுகர்களுடன், ஞானசேகரன் இணைந்து இருக்கும் புகைப்படங்கள், தற்போது, சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது வேறு விஷயம்!
ஒரு வேளை, அவர் கழகத்தின் பகுதி செயலராகவோ, வட்ட செயலராகவோ, மாவட்ட செயலராகவோ, பொதுக்குழு அல்லது செயற்குழு உறுப்பினராகவோ கூட இருக்கலாம்.
ஏற்கனவே, இவர் மீது பாலியல் தொல்லை, திருட்டு என 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக கூறுகின்றனர். அக்குற்றங்களுக்கு கடுமையாக தண்டிக்கப்பட்டு இருந்தால், இன்று, இவ்வளவு பெரிய மாபாதக செயலை செய்யத் துணிந்து இருப்பாரா?
'குற்றவாளி சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்' என்கிறார், அமைச்சர் கோவி.செழியன்.
சட்டத்தின் முன் நிறுத்தினால் மட்டும் போதுமா... தண்டனை வாங்கித் தர வேண்டாமா... தி.மு.க., ஆட்சியில் குண்டர் சட்டத்தில் கைது செய்தால் கூட, இரண்டு நாளில் ஜாமினில் வெளிவந்து விடலாமே!
திராவிட மாடல் ஆட்சியில், குற்றம் இழைப்போர் சுதந்திரமாக வெளியே நடமாடிக் கொண்டு இருப்பர்; அப்பாவிகளோ சிறைகளுக்குள் அவதிப்பட்டுக் கொண்டிருப்பர்!
lll
கோவில் நிலம் தான் கண்ணிற்கு தெரியுமா?
வெ.சீனிவாசன்,
திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருச்சி,
திருப்பராய்துறை அருகில், சாலையை அகலப்படுத்தியபோது, பாதிக்கப்பட்ட மக்களை,
அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் குடியேற்றாமல், திருப்பராய்துறை
சிவன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் குடியிருக்க அனுமதித்தது, அரசு.
தற்போது, நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், ஆக்கிரமிப்பாளர்கள் காலி செய்ய மறுத்து, பிரச்னை செய்து வருகின்றனர்.
பொதுவாகவே,
இது போன்ற சமயங்களில், பெரும்பாலும், ஹிந்து கோவில்களின் சொத்துக்கள் தான்
திராவிட கட்சிகளுக்கு ஞாபகம் வருகிறது. கிறிஸ்துவ, வக்பு போர்டு
சொத்துக்கள் எல்லாம் ஞாபகமே வருவதில்லையே... ஏன்?
கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் கோவில்களுக்கு ஏன் தங்கள் சொத்துக்களை எழுதி வைக்கின்றனர்...
தங்கள் இஷ்ட தெய்வத்திற்கு ஆறு கால பூஜைகள் நடக்க, கோவிலை பராமரிக்க, திருக்கல்யாணம் போன்ற விழாக்கள் சுணக்கம் இல்லாமல் நடக்க...
சன்னிதிகளில்
விளக்கு எரிய வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், தங்கள் நிலத்தை
கோவிலுக்கு எழுதி வைக்கின்றனரே தவிர, பிற்காலத்தில் ஏதாவது ஒரு அரசு வந்து,
தங்கள் இஷ்டத்திற்கு அந்த இடத்தை பயன்படுத்தட்டும் என்பதற்காக
கொடுக்கவில்லை.
கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்காமல், அரசு, கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருந்து மீட்க வேண்டும்.
அதேநேரம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு, புறம்போக்கு நிலத்தில் மாற்று குடியிருப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
திருப்பராய்துறை
கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு, அதை கோவில்
வசம் ஒப்படைக்க வேண்டியது அரசின் பொறுப்பும், கடமையுமாகும்!
lll
வேடிக்கையான உத்தரவு!
ரா.சேது ராமானுஜம், விருதுநகரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'தமிழகத்தில், பொது இடங்களில் அரசியல் கட்சியினரால் நிறுவப்பட்டுள்ள கொடிக்
கம்பங்களால், அசம்பாவிதங்கள் நடந்துள்ளதா என, டி.ஜி.பி., அறிக்கை தாக்கல்
செய்ய வேண்டும்' என்று, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஒரு புதிய கட்சி துவங்கும்போது, அதற்கான சின்னம், கொடியை வடிவமைத்து
வெளியிடுவது அக்கட்சியின் முதல் வேலை. சின்னமும், கொடியுமே அக்கட்சியின்
முக்கிய அடையாளம்; பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி என எது நடந்தாலும்,
தொண்டர்கள் கட்சியின் கொடியை பிடித்தபடி, பங்கேற்பது வாடிக்கையான ஒன்று.
ஆனால், கட்சி கொடியை பொது இடங் களில் ஊன்றும் போதுதான் பிரச்னையே ஆரம்பிக்கிறது.
கட்சி
தலைவர்கள், தொண்டர்கள் என யாரும் தம் சொந்த இடத்திலோ, அவரவர் வீட்டு
வாசலிலோ கட்சி கொடியை ஊன்றுவதில்லை. மாறாக, சாலை ஓரங்களில், மாநகராட்சிக்கு
சொந்தமான இடங்களில், நாற்சந்தி மற்றும் முச்சந்தியில், பிறருக்கு
சொந்தமான இடங்களில் ஊன்றுவதையே, இன்று வரை வழக்கமாக வைத்துள்ளனர்.
ஒரு கட்சி கொடி என் றால் பரவாயில்லை... தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சி கொடிகளும் அங்கு ஊன்றப்படுகின்றன.
இடத்திற்கு
சொந்தக்காரர்கள், மாநகராட்சி, காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகள்
அக்கட்சி கொடிகளை அப்புறப்படுத்த வரும்போது, அவர்களை தடுப்பது,
சண்டையிடுவது, கட்டப்பஞ்சாயத்து நடத்தி கல்லா கட்டுவது என்று கழகக்
கண்மணிகளும், ஜாதிக்கட்சியை சேர்ந்த லோக்கல் பிரமுகர்களின் அட்டகாசமும்
இதில் அடக்கம்.
கடந்த, 1970--களில், எம்.ஜி.ஆர்., கட்சி துவங்கி,
எதிர்க்கட்சியாக இருந்தபோது, காழ்ப்புணர்ச்சி காரணமாக
தி.மு.க.,வினர்,அ.தி.மு.க., கொடிக்கம்பங்களை வெட்டி வீழ்த்தி, தொண்டர்களை
தாக்கினர். இதை அறிந்த எம்.ஜி.ஆர்., தன் கட்சி தொண்டர்களிடம், கட்சிக்
கொடியை பச்சைக் குத்தி கொள்ளச் சொன்னதும், தி.மு.க., குண்டர்களிடம் இருந்து
தப்பிக்க கத்தி வைத்துக் கொள்ளச் சொன்னதும், வரலாறு.
பொதுவாகவே, இரு கட்சியினர் இடையே மோதல் வெடிக்கும்போது, கட்சி கொடி தாங்கிய தடிகளால், மண்டை உடைபடும் சம்பவங்கள் ஏராளம்.
அப்படி
இருக்கும்போது, கொடிக் கம்பங்களால் அசம்பாவிதம் நடந்துள்ளதா என டி.ஜி.பி.,
அறிக்கை தாக்கல் செய்ய, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருப்பது
வேடிக்கையாக உள்ளது!
lll