/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
விளை பயிர்களை நாசம் செய்யும் ஒற்றை யானை
/
விளை பயிர்களை நாசம் செய்யும் ஒற்றை யானை
PUBLISHED ON : டிச 23, 2025 06:04 AM

சேத்துார்: ராஜபாளையம் அடுத்த தேவதானம் சாஸ்தா கோயில் நீர் தேக்கம் அருகே விவசாய தோட்டத்திற்குள் விளை பயிர்களை நாசம் செய்து வரும் ஒற்றை யானையால் விவசாயிகள் நஷ்டமடைந்து வருகின்றனர். ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் அனுப்ப விவசாயிகள் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லாததால் வேதனையடைந்துள்ளனர்.
தேவதானம் சாஸ்தா கோயில் ரோட்டில் ஆயிரக்கணக்கான ஏக்கர் தென்னை, மா, வாழை உள்ளிட்ட தோப்புகள் கண்மாய் பாசன பரப்பை ஒட்டி நெற்பயிர்கள் சாகுபடி நடந்து வருகிறது. சாஸ்தா கோயில் நீர்த்தேக்கம் அருகே கடந்த சில மாதங்களாக சுற்றி வரும் ஒற்றை யானை அப்பகுதி விவசாய நிலங்களில் புகுந்து சேதம் ஏற்படுத்தி வருகின்றன.
இப்பகுதியில் ராஜபாளையம் சீனிவாச ராஜா தென்னை, நெற்பயிர் என 22 ஏக்கர் விவசாயம் நிலம் வைத்துள்ளார். தேவதானத்தை சேர்ந்த வனராஜ் குத்தகை எடுத்து சாகுபடி செய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் இரவு இப்பகுதியில் ஒற்றை யானை நகரி ஆற்றுப்பகுதியில் இருந்து இரும்பு தடுப்பு கதவை உடைத்து தோப்பிற்குள் உள்ளே புகுந்தது.அப்பகுதியில் உள்ள 10 தென்னங்கன்றுகளின் குருத்துகளை பிய்த்தும், வாழை கன்றுகளையும், பால் பிடித்துள்ள நெற்பயிர்களையும் சேதப்படுத்திச் சென்றுள்ளது.
இதுகுறித்து வனராஜ்: காட்டு யானை புகுந்தது குறித்து அருகில் உள்ள வனத்துறை செக் போஸ்டில் சென்று தகவல் தெரிவித்து அழைத்தாலும் ஒத்துழைப்பு இல்லை. இப்பகுதியில் முகாமிட்டு சுற்றிவரும் ஒற்றை யானையால் தொடர்ந்து பிரச்னை ஏற்படுகிறது. வருட கணக்கில் பாதுகாத்து வளர்த்த தென்னை மரங்கள் உள்ளிட்ட பயிர்கள் கண்முன்னே யானையால் சேதம் ஏற்பட்டு வருவதை தடுக்க முடியவில்லை. சுற்றி திரியும் ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டி மீண்டும் நுழையாதவாறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், என்றார்.

