PUBLISHED ON : மார் 21, 2024 12:00 AM

ஆர்.மணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கூடியிருக்கும் கூட்டத்தினர் முன்பாக, மைக்கில் எதை பேசினாலும் நம்பி விடுவர் என்ற நம்பிக்கையில், புருடா விடுவதை என்னவென்று அழைப்பது!
'மாநில அரசிடம் பணம் வாங்கி, திட்டங்களுக்கு மத்திய அரசு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறது' என தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் நடந்த அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் போது, முழங்கி இருக்கிறார்.
'தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களையும் சமமாக மதித்து நாம் செயல்படுகிறோம். ஆனால், மத்திய அரசு அப்படி மாநிலங்களை சமமாக மதிக்கவில்லை. மாநிலங்களையே அழிக்க நினைக்கிறது.
'தேர்தல் நெருங்கி வருவதால், பிரதமர் மோடி தமிழகத்துக்கு அடிக்கடி சுற்றுப்பயணம் வருகிறார். 2019ல் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி, இப்போது நடப்பதாக நாடகம்; தேர்தல் நடந்ததும் பணியை நிறுத்தி விடுவர்.
'பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு மாநில அரசு 75 சதவீத நிதி வழங்குகிறது. 'ஜல் ஜீவன்' திட்டத்திற்கு, 50 சதவீதம் மாநில அரசின் பணம் வாங்கி, இத் திட்டங்களுக்கு மத்திய அரசு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறது' என்கிறார் ஸ்டாலின்.
மத்திய அரசின் திட்டங்களில், கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதியோடு, ஸ்டாலின் மனைவி துர்கா நீங்கலாக மற்ற பிற அனைத்து கட்சியினரின் படங்களையும் அச்சடித்து ஸ்டிக்கர் ஒட்டி வேடிக்கை காட்டி கொண்டிருப்பது எந்த ஆட்சி என்பது, தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல; இந்த பரந்த உலகில் தமிழர்கள் எங்கெங்கு வாழ்கின்றனரோ, அவ்வளவு பேருக்கும் தெரியும்.
அதை விடுங்கள்... ஸ்டாலினுடைய கோணத்திலேயே பார்ப்போம்!
மத்திய அரசுக்கே நிதியுதவி அளிக்கும் அளவுக்கு, தமிழ்நாடு அரசின் கஜானா நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது அல்லவா!
பிறகு ஏன் எதற்கெடுத்தாலும், 'மத்திய அரசு நிதியுதவி வழங்கவில்லை. மத்திய அரசு நிதியுதவி வழங்கவில்லை' என்று புகார் கூறக் கொண்டிருக்க வேண்டும்?
எய்ம்ஸ் மருத்துவமனை என்பது, தமிழக மக்களுக்கான மருத்துவமனை தானே? அந்த திட்டத்திற்கான முழு செலவையும், மாநில அரசே மனமுவந்து வழங்கி கட்டி முடித்திருக்கலாமே!
வீடு கட்டும் திட்டத்திற்கு 75 சதவீதமும், ஜல் ஜீவன் திட்டத்திற்கு 50 சதவீதமும் ஏன் பங்கு கொடுக்க வேண்டும்? மொத்த செலவையும் தமிழக அரசே பார்த்துக் கொள்ளலாமே?
நியாயமாக சிந்திப்பவர்களுக்கு, பிறழ்ந்து பேசத் தெரியாது. பிறழ்ந்து பேசுபவர் மனசாட்சிக்குப் புரியுமா அது?
காலத்தின் கோலம்!
குரு பங்கஜி,
சென்னையில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உலகம் முழுதும் உள்ள
முருக பக்தர்கள் பங்கேற்கும் வகையில், பழனியில் அனைத்து உலக முத்தமிழ்
முருகன் மாநாடு, வரும் ஜூன் அல்லது ஜூலையில் இரண்டு நாட்கள்
நடத்தப்படுமென்று, திராவிட மாடல் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு
அறிவித்துள்ளதை கண்டு, அழுவதா, சிரிப்பதா என, தெரியவில்லை!
ஆட்டை
கடித்து, மாட்டை கடித்து, கடைசியாக மனிதனையே கடித்த கதையாக, ஜாதி, மொழி,
இனம் போன்ற பேதங்களை உருவாக்கி, குளிர் காய்ந்த திராவிட மாடல், கடைசியாக
இந்து தெய்வங்களையும், விட்டு வைக்கவில்லை!
ஹிந்து கடவுள், தமிழ் கடவுள்; ஆரிய தெய்வம், திராவிட தெய்வம் என்று, கூறு போட ஆரம்பித்து விட்டது!
திராவிட மாடல்களின், பொங்கி வழியும் திடீர் முருக பக்தியின் பின்புலத்தை, சிறிது உற்று நோக்குவோம்!
ஹிந்து
விக்கிரகங்களை உடைத்து உற்சாகம் கண்ட, திராவிட கழகத்தின் வழித்தோன்றல்கள்,
லோக்சபா தேர்தல் நெருங்கும் சமயம், முருக கடவுளுக்கு மாநாடு என காவடி
துாக்குவது, உள்ளபடியே வியப்பை தருகிறது!
திராவிட மாடல் ஆசான்
ஈ.வே.ரா, 'முன்னேற்றக் கழகத்துக்காரன் ஓட்டு பிச்சை வாங்க, எதற்கும் தயங்க
மாட்டான்! தன் வீட்டுப் பெண்களையும், அடகு வைப்பான்!' என முன்பு கூறியது,
நினைவுக்கு வருகிறது!
'கடவுள் இல்லை. இல்லவே இல்லை. கடவுளை
நம்புபவன் முட்டாள். வணங்குபவன் காட்டுமிராண்டி!' என்ற சித்தாந்தப்
பரம்பரையில் வந்தவர்கள், முருக புராணம் பாட துவங்கியிருப்பது, ஆச்சரியப்பட
வைக்கிறது!
தன் வாழ்நாளையே, முருக பிரானுக்கு அர்ப்பணித்த,
திருமுருக கிருபானந்த வாரியாரை, முன்பு நெய்வேலியில் தாக்கியவர்களின் வழித்
தோன்றல்கள், தற்போது முருக கடவுள் மாநாடு, கூட்டம், காவடி என கிளம்பி
இருப்பது, காலத்தின் கோலம் அன்றி வேறென்ன!
மனுக்களுக்கு தீர்வே கிடைக்காதா?
நா.தசரதராமன்,
திருவானைக்கோவில், திருச்சி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: தமிழகத்தில், மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் குறைதீர்
கூட்டங்களில், ஒவ்வொரு வாரமும், 500 முதல் 1,000 மனுக்களும், சிறப்பு
முகாம்களில், பல ஆயிரக்கணக்கான மனுக்களும் பெறப்படுகின்றன.
இவற்றில்
பல, நியாயமான கோரிக்கைகளை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக்
கொடுக்கப்படுபவை. முதல்வரின் தனிப் பிரிவுக்குக் கூட, இதே மனுக்கள்
அனுப்பப்படுகின்றன.
இம்மனுக்களுக்கு தீர்வே கிடைக்காத வகையில்,
நியாயமில்லாத, சம்பந்தமில்லாத பதில்களைக் கொடுத்து அதிகாரிகள், பதிவுகளை
முடித்து வைத்து விடுகின்றனர்.
இதனால் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டு,
அலுவலர்களுக்கு பணிச்சுமையும் ஏற்படுகிறது. மக்களுக்கோ மன உளைச்சல்
ஏற்பட்டு, அன்றாட இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்படுகிறது. தேர்தல் முடிந்த
பிறகாவது, முதல்வர் இதை கவனிப்பாரா?
என்ன மர்மம் என தெரியவில்லை!
என்.ஏ.நாக
சுந்தரம், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: தமிழகத்தில் அ.தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்து முன்பு
ஜெயலலிதா செய்த ஆர்ப்பாட்டமான அரசியல், தி.மு.க.,வின் கருணாநிதி ஆட்சியை
துரத்தியடித்தது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் வந்த அ.தி.மு.க.,
பழனிசாமியின் ஆட்சியில், துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு, மதுவுக்கு
எதிரான அரசியல் என, எதிர்க்கட்சியாக தி.மு.க., செய்த ஆர்ப்பாட்டங்கள்,
பழனிசாமியின் ஆட்சியைக் கவிழ்த்தன.
ஆனால் இப்போது, அ.தி.மு.க., ஆட்சியை விட மோசமான நிகழ்வுகளை கண்ணெதிரே காண்கிறோம்.
கோவை
கார் குண்டு வெடிப்பு துவங்கி, மணல் கொள்ளை, டாஸ்மாக் விலை உயர்வு, கஞ்சா
விற்பனை உட்பட அதிர்ச்சியடைய வைக்கும் சம்பவங்கள் நடந்தேறுகின்றன.
ஆனால்
பழனிசாமியோ,அறிக்கை அளிப்பதோடு தன் கடன் முடிந்தது என்ற நின்று
விடுகிறார். எதிர்க்கட்சியின் கடமை தான் என்ன என்று கேட்கும் அளவுக்கு,
பம்மிப் பதுங்குகிறார் பழனிசாமி. என்ன மர்மம் என தெரியவில்லை!

