PUBLISHED ON : ஜன 20, 2024 12:00 AM
எஸ்.ராமசுப்பிரமணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காவி உடையணிந்த திருவள்ளுவர் படத்துடன், 'பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவி' என்ற வாழ்த்து செய்தியை கவர்னர் ரவி வெளியிட்டது, தி.மு.க.,வினரை கொதிப்படைய செய்துள்ளது. கவர்னர் ரவிக்கு பதிலளிக்கும் வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், 'வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது' என, கண்டித்துள்ளார்.
ஆனால், ஒருவர் மீது குறை சொல்லி குற்றம் சாட்டுவதற்கு முன், தங்களுக்கு அந்த தகுதி உள்ளதா என்று பல முறை சிந்தித்து தெளிந்த பின், குற்றம் கூறுவது தான் அறிவுடையோருக்கு அடையாளம். அதிலும் பொறுப்பான பதவியில் இருப்போர், ஓராயிரம் முறை சிந்தித்து தான் வார்த்தைகளை கூற வேண்டும்.
வள்ளுவருக்கு, 133 அடியில் ஒரு சிலையை நிறுவி, தலைநகரில் வள்ளுவர் பெயரில் ஒரு கோட்டமும் கட்டி வைத்து விட்டால் மட்டும், அவருக்கு புகழ் சேர்த்தது போலாகி விடுமா?
தமிழகத்தின் ஆட்சி கட்டிலில் அமர்ந்து கோலோச்சிக் கொண்டிருக்கும் திராவிட மாடல் ஆட்சியாளர்கள், வள்ளுவர் வலியுறுத்திய வாழ்க்கை நெறிமுறைகளை, 1 சதவீதமாவது கடைப்பிடிக்கின்றனரா...? அவர்கள் மனசாட்சியை தொட்டு பதில் சொல்லட்டும்...
திருக்குறளில், கள்ளுண்ணாமை என்ற அதிகாரத்தில், 'நாட்டில் வாழும் குடிமக்களே, குடிக்கக் கூடாது' என்று வலியுறுத்தி, 10 குறள்களை எழுதியிருக்க, அவர் வழியில் நடப்பதாக கூறும் திராவிட மாடல் அரசு, தெருவுக்கு தெரு மதுக்கடைகளை திறந்து வைத்து, வியாபாரம் செய்து வருகிறது.
இப்போது சொல்லுங்கள்... வள்ளுவரையும், அவர் கூறிய கருத்துகளையும் கறைப்படுத்தி கொண்டிருப்பவர் கவர்னரா இல்லை முதல்வரா?
எனவே, அரசு நடத்தி கொண்டிருக்கும் மது விற்பனையை நிறுத்தி, தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் மது தொழிற்சாலைகளுக்கு மூடுவிழா நடத்தி, பின் வள்ளுவருக்கும், அவரது சிலைக்கும், அவர் பெயரில் அமைந்துள்ள கோட்டத்திற்கும் பெருமை சேருங்கள்.
பன்னீர்செல்வத்துக்கு சில கேள்விகள்...!
என்.ராமகிருஷ்ணன்,
பழனி, திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: 'பழனிசாமியை பற்றி,
நான் பல ரகசியத்தை சொன்னால், அவர் திஹார் சிறைக்கு செல்ல
வேண்டியிருக்கும்' என்று பன்னீர் செல்வம் கூற, அதற்கு பழனிசாமி, 'அந்த
ரகசியத்தை தைரியம் இருந்தால் கூறட்டும்' என்று சவால் விடுகிறார்.
ஆனால், பன்னீர்செல்வமோ, 'நேரம் வரும்போது கூறுவேன்' என்கிறார். இதிலிருந்தே அவர் பேசுவது பொய் என்று தெரிகிறது.
இப்போது, பன்னீர்செல்வத்துக்கு சில சில கேள்விகள்...
ஜெயலலிதா இறந்த பின், முதல்வராக இருந்தவர், யாருடைய நிர்பந்தந்தால் பதவியை
ராஜினாமா செய்தார்? எதற்காக தர்மயுத்தம் நடத்தினார். ஜெ., மரணம் குறித்து
விசாரணை கமிஷன் வைக்க சொன்ன இவர், பலமுறை டிமிக்கி கொடுத்து ஆஜராகாமல்
இருந்தது ஏன்?
ஆறுமுகசாமி ஆணையம் கண்டிப்பு காட்டியவுடன், நேரில்
ஆஜராகி, 'எனக்கு எதுவுமே தெரியாது' என்று கூறி, பல்டி அடித்தாரே... அந்த
ரகசியங்களையும் கூற வேண்டும்
'கருணாநிதிக்கு கடற்கரையில், 40 கோடி
செலவில் சமாதி கட்டப்படும்' என்று சட்டசபையில், முதல்வர் ஸ்டாலின்
கூறியவுடன், முதல் ஆளாக எழுந்து அதை ஆதரித்து பேசியதுடன், கருணாநிதியை
வானளாவ புகழ்ந்தாரே... அது ஏன் என்ற ரகசியத்தையும் மக்களுக்கு சொல்ல
வேண்டும்
இவருடைய மகன் ரவீந்திரநாத், ஸ்டாலின் ஆட்சியை புகழ்ந்து
பேசி, அ.தி.மு.க., தொண்டர்களின் கடும் கண்டனங்களுக்கு ஆளானாரே... அந்த
ரகசியத்தையும் மக்களுக்கு சொல்ல வேண்டும்
எதிரியான தி.மு.க.,
வுக்கு எதிராக அரசியல் செய்யாமல், தினமும் பழனிசாமிக்கு எதிராக
அறிக்கைவிட்டு அரசியல் செய்வது எதற்காக என்ற ரகசியத்தையும் கூற வேண்டும்
பா.ஜ., தயவும் வேண்டும். தி.மு.க., தயவும் வேண்டும் என்று டபுள் கேம் விளையாடுகிறாரே... அந்த ரகசியத்தையும் கூற வேண்டும்
இதற்கெல்லாம் பன்னீர் செல்வம் மனசாட்சியுடன் பதில் அளித்து விட்டு, பழனிசாமியை விமர்சித்தால், தாராளமாக வரவேற்கலாம்.
மக்கள் வரிப்பணத்தை காப்பாற்ற வேண்டும்!
அ.குணா,
கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தன்மானம் உள்ள தமிழன்
ஒவ்வொருவரும், பொங்கல் பண்டிகையை, தன் சொந்த வருவாயில் கொண்டாட முடியாமல்,
அரசின் இலவச பொருட்கள் மற்றும் 1,000 ரூபாய் வாங்கி தான் பொங்கல் வைத்து
கொண்டாடும் நிலையில் உள்ளான்.
சமீபத்தில் மழை, வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட எட்டு மாவட்ட மக்களில் பெரும்பாலான மக்கள், தங்களது
வாழ்க்கையை ஜீரோவில் இருந்து துவங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர்.
இந்த சூழலில் ஆளுகின்ற தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் சேவை மனம்
படைத்தவர்களிடம், கையேந்தி நிதியுதவி கேட்டு வருகிறது.
ஆயினும்,
கடந்த ஏழு மாதங்களாக சிறையில் இருக்கும், இலாகா இல்லாத அமைச்சர் செந்தில்
பாலாஜிக்கு மாதம் ஊதியமாக 1 லட்சம் ரூபாய்க்கு மேல் வழங்கப்படுகிறது.
இது
போக, அவருக்கு சிறப்பு நேர்முக உதவியாளர் ஒருவர், மூத்த நேர்முக உதவியாளர்
ஒருவர், இளநிலை நேர்முக உதவியாளர் ஒருவர், அரசியல் உதவியாளர் ஒருவர்,
அலுவலக உதவியாளர் மூவர், ஒரு டிரைவர் பாதுகாவலர்களாக எஸ்.ஐ.,க்கள்
மூவர்...
சில போலீசார் மற்றும் அரசு பங்களா பராமரிப்பு பணிகளுக்கு
குறைந்தது ஐந்து ஊழியர்கள் என, ஒரு பட்டாளமே ஏழு மாதங்களாக வேலையே
செய்யாமல், அரசிடம் சம்பளம் வாங்குகிறது.
செந்தில் பாலாஜி மற்றும்
அவரது பணியாளர்கள் என, மாதத்திற்கு தோராயமாக, 10 லட்சம் முதல் 12 லட்சம்
ரூபாய் வரை, மக்களின் வரிப்பணத்தில் இருந்து வெட்டியாக செலவிடப்படுகிறது.
நல்ல
வேளையாக, பொன்முடி தண்டிக்கப்பட்டு விட்டார். அதனால், அவர் மக்கள்
பிரதிநிதிகள் சட்டத்தின்படி உடனடியாக பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு
விட்டார்; இதனால், மக்களின் வரிப் பணம் மிச்சமானது.
எந்தவொரு
வழக்கிலும் ஒரு அரசு ஊழியர் கைது செய்யப்பட்டு, 48 மணி நேரம் சிறையில்
இருந்து விட்டாலே, அவர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு விடுவர். ஆனால்,
அரசியல் சாசன பதவி வகிக்கும் அமைச்சர் மட்டும் எத்தனை மாதங்கள் ஆனாலும்,
பதவியில் நீடிக்கலாம் என்றால் என்ன அர்த்தம்?
எனவே, 'மக்கள்
பிரதிநிதிகளும் ஊழல், கிரிமினல் வழக்குகளில் கைதாகி, சிறையில்
அடைக்கப்பட்டாலே, அவர்கள் பதவி பறிக்கப்படும்' என சட்ட திருத்தம் கொண்டு வர
வேண்டும். அப்படி செய்தால் தான், அப்பாவி மக்களின் வரிப்பணம்
காப்பாற்றப்படும்.