PUBLISHED ON : அக் 17, 2025 12:00 AM

அ.அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை, நாகை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தனக்கென தனி சித்தாந்தம், கொள்கை, கோட்பாடு உண்டு என்றும், 'இயேசு மீது சத்தியமாக யாருடனும் கூட்டணி வைக்க மாட்டோம்' என்று கூறி, தனி பாதையில் சென்று கொண்டிருப்பவர், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
இவரது அரசியல் நிலைப்பாட்டில் வெறுத்துப் போன கட்சி நிர்வாகிகள் பலர் கூடாரத்தை காலி செய்த நிலையில், நடிகர் விஜயின் அரசியல் வரவு, தன் ஓட்டு வங்கியை மேலும் கரைத்து விடுமோ என்ற பீதியில் சீமான் நிலை தடுமாறுகிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது.
காரணம், சில மாதங்களுக்கு முன்வரை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, 'அண்ணன்' என்று அரவணைத்து கொண்டிருந்தவர், தமிழக முதல்வர் ஸ்டாலினின் அண்ணன் முத்துவின் இறப்புக்கு துக்கம் விசாரிக்க முதல்வர் வீட்டிற்கு சென்று திரும்பிய பின், உடன்பிறப்புகளை விட ஓவராக, தி.மு.க., அரசுக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
'கரூர் துயரத்திற்கு சி.பி.ஐ., விசாரணை எதற்கு? இது மாநில தன்னாட்சிக்கு எதிரானது' என்கிறார். 'எங்கள் காவல் துறைக்கு என்ன குறை...' என்று கேட்டு பொங்குகிறார்.
அதேபோன்று, வி.சி., தலைவர் திருமா வளவன் சென்ற கார், முன்னால் சென்று கொண்டிருந்த ஸ்கூட்டர் மீது மோத, அதையடுத்து நடந்த அடிதடியை தடுக்காமல் வேடிக்கை பார்த்ததுடன், 'நாலு தட்டு தான் தட்டினாங்க... இன்னும் பலமாக அடிச்சிருக்கலாம்' என்று கூறி வருத்தப்பட்ட திருமாவளவனை கண்டிக்காமல், அதற்கும் முட்டுக்கொடுத்து, 'அண்ணனை முறைத்தால் நானே அடிப்பேன்...' என்கிறார், சீமான்.
முறைத்தாலே அடிப்பவர்களுக்கு பெயர் தலைவர்கள் அல்ல; சர்வாதிகாரிகள்!
இதுபோன்ற தலைவர்களால் தான், இன்று சாதாரண மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. ஆட்சி அமைக்க வலுவில்லாத இதுபோன்ற உதிரி கட்சிகளால் அரசியல் குழப்பங்கள் தான் ஏற்படுகிறதே தவிர, இவற்றால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை.
எனவே, தேர்தலில் போட்டியிடாத கட்சிகள், குறிப்பிட்ட சதவீத ஓட்டும், எம்.பி., - எம்.எல்.ஏ., பதவிகளை பெற முடியாத கட்சிகளின் அங்கீகாரத்தையும் ரத்து செய்வது போல, குறிப்பிட்ட காலத்திற்குள் ஆட்சியமைக்க முடியாத கட்சிகளின் அங்கீகாரத்தையும் ரத்து செய்து, கட்சிகளின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்த வேண்டும்.
அப்போது தான் ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகும்!
மாரத்தான் ஓடினால் விபத்து குறைந்து விடுமா? ஆர்.நடராஜன், கோவையில்
இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சாலை விபத்துகளால் ஏற்படும்
உயிரிழப்புகளை தடுக்க, கோவை மாவட்ட நிர்வாகம், மாநகர காவல் துறை மற்றும்
'உயிர்' அமைப்பு சார்பில், மாரத்தான் ஓட்டம், மனித சங்கிலி, உறுதிமொழி
ஏற்பது போன்ற விஷயங்களை செய்து வருகிறது, திராவிட மாடல் அரசு. நல்ல விஷ
யம் தான்.
ஆனால், ஒரு வாகன ஓட்டியின் தவறால் விபத்து நடந்தது
என்றால், அதற்கு வாகன ஓட்டி பொறுப்பு. ஆனால், குண்டும் குழியுமான சாலையில்
வாகனம் விபத்துக்குள்ளாகி உயிர்பலி ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு?
உதாரணமாக, கோவை கவுண்டம்பாளையம், ஜி.என்.மில்ஸ் ரயில்வே கேட்டில் இருந்து,
வெள்ளகிணறு என்ற இடம் வரை, 3 கி.மீ., துாரத்திற்கு சாலை பழுதடைந்து,
வாகனங்கள் செல்ல முடியாதபடி இருக்கிறது.
பிள்ளைகளை பள்ளிக் கு
அழைத்துச் செல்லும் பெற்றோர் முதல், கல்லுாரி மாணவர்கள் வரை குண்டும்
குழியுமான இந்த சாலையில் தான் பயணிக்கின்றனர்; இதனால், அடிக்கடி விபத்துகள்
ஏற்படுகின்றன.
இந்த விபத்தை தடுப்பது எவர் கையில் உள்ளது?
அதேபோல், பள்ளி துவங்கும் காலை நேரத்திலும், பள்ளி முடியும் மாலை
நேரத்திலும் கனரக வாகனங்கள், தண்ணீர் லாரிகள் பள்ளிகள் இருக்கும் சாலையில்
செல்லக்கூடாது என்பது காவல் துறை உத்தரவு.
ஆனால், இந்த உத்த ரவை கனரக வாகன ஓட்டி களும் மதிப்பதில்லை; காவல் துறை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.
அதேபோன்று, சில மாதங்களுக்கு முன், கோவை கருமத்தம்பட்டி அருகே, பேனர்
சரிந்து விழுந்ததில், அவ்வழியே சென்ற மூன்று தொழிலாளி கள் பலியாயினர்.
இந்த விபத்துக்கு யார் காரணம்?
நீதிமன்ற உத்தரவு இருந்தும், அதை மதிக்காமல் பேனர் வைப்பதற்கு கோவை மாநகராட்சி அனுமதி கொடுத்ததால் மூன்று உயிர்கள் பலியாயின.
இதுதான் இப்படி என்றால், மொபைல் போனில் பேசியபடி சிலர் வாகனம்
ஓட்டுகின்றனர். இவர்கள் எதிரில் அல்லது பின்னால் வரும் வாகனத்தையோ
கவனிக்காமல் விபத்தை ஏற்படுத்துகின்றனர்.
இதில், மொபைல் போனில்
பேசியபடி வாகனம் ஓட்டுபவர், முதல் குற்றவாளி என்றால், அவ்வாறு பேசிக்கொண்டு
வருபவரை கண்டுகொள்ளாத போக்குவரத்து காவலர் இரண்டாவது குற்றவாளி.
எனவே, சாலை விபத்துகள் குறைய வேண்டும் என்றால், மக்கள் விழிப்புணர்வுடன்
இருந்தால் மட்டும் போதாது; சாலை பராமரிப்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
பேனர்கள் வைக்க மாநகராட்சிகள் தடை விதிக்க வேண்டும்.
போக்குவரத்து விதிமுறைகளை காவல் துறை கடுமையாக நடைமுறைபடுத்த வேண்டும்.
அப்போது தான், விபத்தில்லாத கோவையை மட்டுமல்ல; விபத்தில்லா தமிழகத்தை யே
உருவாக்க முடியும்.
அதைவிடுத்து, மாரத்தான் ஓடுவதாலோ, உறுதிமொழி எடுப்பதாலோ, மனித சங்கிலி நடத்துவதாலோ எந்த நன்மையும் ஏற்படாது!
தங்கம் மீதான மோகம் குறையுமா? கோ.திருநாவுக்கரசு, சென்னையில் இருந்து
அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த ஆறு மாதங்களுக்கு முன், 1 கிராம்
தங்கத்தின் விலை 7,000 ரூபாய்; இன்று, 12,000 ரூபாயை நெருங்கியுள்ளது.
தங்கம் விலை இப்படி ஜெட் வேகத்தில் ஏறிக் கொண்டே போனாலும், நகைக்கடைகளில்
மக்கள் கூட்டம் குறைந்தபாடில்லை. காரணம், நாளை இன்னும் விலை அதிகரித்து
விடுமோ என்ற பயம் தான்.
இதில் கொடுமை என்னவென்றால், சிலர் தங்கள் நிலத்தை விற்பனை செய்து, தங்கம் வாங்குகின்றனராம். இது எவ்வளவு பெரிய தவறான செயல்!
தங்கம் என்ன பசியை போக்க போகிறதா இல்லை, குடியிருக்கும் வீடாக போகிறதா...
இன்று, 1 கிராம் தங்கம் வாங்கும் விலையில், சிறு நகரங்களில் 5 சதுர அடி
நிலத்தை வாங்கலாம். 20 சவரன் நகை வாங்கும் பணத்தில், கிராமத்தில் ஓர்
இடத்தை வாங்கி, 1,000 சதுர அடியில் வீடு கட்டி சுகமாக வாழலாம். அது, நம்
சந்ததியினருக்கு பெரும் உதவியாக இருக்கும்.
மேலும், தங்கத்தின் மீது முதலீடு செய்வதை நிறுத்தி, நிலம் போன்ற வேறு வழிகளில் முதலீடு செய்தால், தங்கம் விலை தானாக குறையும்.
நகை மோகம் கொண்ட பெண்கள் யோசிக்க வேண்டும்!