PUBLISHED ON : ஏப் 02, 2026 03:43 AM

வ.ப.நாராயணன்,
ஊரப்பாக்கம், செங்கல் பட்டு மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: வரும் தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும்
தங்கள் கூட்டணியில் உள்ள சில கட்சிகளுக்கு, தங்கள் சின்னத்தில் மட்டுமே
தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் தொகுதிகளை ஒதுக்கியுள்ளன.
இது எப்படி இருக்கிறது என்றால், படையப்பா என்ற படத்தில் நடிகர்
ரஜினி, தமாஷ் நடிகர் செந்திலை காட்டி, 'மாப்பிள்ளை இவர் தான்; ஆனால்,
அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது' என்று கூறுவார். அதைப்போல் உள்ளது
இக்கட்சிகளின் செயல்பாடு!
பதவி ஆசையில், ம.தி.மு.க., -
கொ.ம.மு.க., - த.மா.கா., - ஐ.ஜே.கே., - புதிய பாரதம் போன்ற கட்சிகள்,
எப்படியோ, 'சீட்' கிடைத்தால் போதும் என்று, 'சட்டை யாருடையதாக இருந்தால்
என்ன... மாப்பிள்ளை நாங்கள்தானே! எப்படியோ பெண் கிடைத்து, திருமணம்
நடந்தால் சரி' என்று, நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டு விட்டன.
இரு
திராவிடக் கட்சிகளின் நிபந்தனைகளை ஏற்காத ஒன்றிரண்டு தன்மானமுள்ள
கட்சிகள், கூட்டணியை விட்டு வெளியே வந்து, சொந்தச் சின்னத்தில் களம்
காண்கின்றன.
அதாவது, 'பெண் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை... உங்கள் சட்டையே வேண்டாம்' என்று சொல்லி விட்டன.
ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கும்; அக்கொள்கையை ஏற்றுக்
கொள்வோர் அக்கட்சிக்கு ஓட்டு அளிக்கின்றனர். அப்படி இருக்கும் போது,
மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதற்கு எதற்கு ஒவ்வொரு
கட்சிக்கும் தனி சின்னம், கொடி?
அரிவாள் இருந்து என்ன பயன்?
பி.கார்த்திக்குமார், கோ வையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மத்திய அரசின் சூரிய மின் நிலைய திட்டத்திற்கு மானியம் அளித்தும், தமிழகத்தில் ஆர்வம் இல்லை என்று, 'தினமலர்' நாளிதழ் சமீபத்தில் செய்தி வெளியிட்டது.
பொதுவாக, மத்திய அரசு என்னதான் மக்கள் நல திட்டங்களை வெளியிட்டாலும் அதை தி.மு.க., அரசு செயல்படுத்துவதில்லை. காரணம், மத்திய பா.ஜ., அரசுக்கு நல்ல பெயர் கிடைத்து விட்டால், அக்கட்சி தமிழகத்தில் காலுான்றி விடுமே!
அவ்வகையில், சூரிய மின் நிலைய திட்டத்திற்கு பெரிதாக ஒத்துழைப்பு வழங்கவில்லை, தி.மு.க., அரசு. அதேநேரம், வரும் 2030க்குள் தமிழகத்தின் பொருளாதாரத்தை, 1 டிரில்லியன் டாலராக உயர்த்தப் போவதாக சூளுரைத்துள்ளார், முதல்வர் ஸ்டாலின்.
தொழில் வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரமே மின்சாரம் தான்; தி.மு.க., அரசு எத்தனை மின் உற்பத்தி நிலையங்களை துவக்கியுள்ளது?
ஒரு காலத்தில் மின் சக்தி துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக இருந்தது, தமிழகம். இன்றோ பக்கத்து மாநிலங்களிடம் கையேந்திக் கொண் டிருக்கிறது.
தன் தந்தை கருணாநிதிக்கு சிலைகள் அமைப்பதிலும், கலை நிகழ்ச்சிகள் நடத்துவதிலும், மாநாடுகள் நடத்துவதில் காட்டும் ஆர்வத்தில் சிறிதளவாவது மின் உற்பத்தியில் காட்டி இருந்தால், இன்று தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்திருக்க மாட்டோம்; மின்வாரியமும் நஷ்டத்தில் தத்தளித்துக் கொண் டிருக்காது.
மத்திய அரசின் பிரதமர் சூரிய சக்தி மின் நிலைய திட்டத்தையாவது செயல்படுத்தி இருந்தால், மின் வாரியத்தின் சுமை குறைந்திருக்கும்; தமிழக மக்களின் மின் கட்டணத்திலும், 'ஷாக்' அடித்திருக்காது.
இத்தனைக்கும் மூன்று கிலோ வாட் சூரிய மின் நிலையத்திற்கு, 78,000 ரூபாய் மானியம் வழங்குகிறது மத்திய அரசு.
அப்படியும் இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.
இப்படி மின்வாரியம் தனியார் நிறுவனங்களிடம் கையேந்திக் கொண்டிருக்கையில், தமிழகம் எப்படி 1 டிரில்லியன் பொருளா தாரம் உள்ள மாநிலமாக முன்னேறும்?
அறுக்கத் தெரியாதவன் கையில் ஐம்பத்தெட்டு அரிவாள் இருந்து என்ன பயன்... அறுவடை வீடு வந்து சேர வேண்டுமே!
துாண்டிலில் சிக்கினால், 'ரோஸ்ட்' தான்!
சுக.மதிமாறன், நத்தம், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., கடந்த தேர்தலில், 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அள்ளி வழங்கியது. ஆட்சிக்கு வந்த பின்போ, தமிழகத்திற்கு போதுமான நிதி வழங்காததால், வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்று மத்திய அரசு மீது பழி போட்டு வருகிறது.
தற்போது, சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பல்வேறு கவர்ச்சி திட்டங்களையும், இலவச அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார், தி.மு.க., முதல்வர் ஸ்டாலின்.
வரும் 2029 வரை மத்தியில் பா.ஜ., தான் ஆட்சியில் இருக்கும் எனும் நிலையில், இத்தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்றால், இந்த இலவச திட்டங்களுக்கு நிதி எப்படி பெறுவார்?
முதல்வரும், அவரது அமைச்சர்களும், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் எல்லாம் தங்கள் சொத்துகளை விற்று இத்திட்டங்களுக்கு நிதி அளிக்கப் போகின்றனரா அல்லது இத்திட்டங்களை நிறைவேற்ற வீட்டு வரி, குடிநீர் வரி, சாக்கடை வரி என்று பல்வேறு வரிகளை மக்கள் தலையில் சுமத்த திட்டமா? ஏற்கனவே, மது, கஞ்சா, போதை பொருட்களால் தமிழகம், 'போதைமிகு' மாநிலமாக உருமாறிக் கொண்டிருக்கிறது.
இந்த இலவச திட்டங்களை நிறைவேற்ற இவற்றை எல்லாம் தாராளமயமாக்க திட்டமிட்டுள்ளாரா தி.மு.க., முதல்வர்?
கடந்த தேர்தலின் போது, மகளிர் அனைவருக்கும் உரிமை தொகை என்று கூறி ஓட்டு வாங்கி, ஆட்சியில் அமர்ந்தபின், உரிமை தொகை குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது, 'எப்போது தருவோம் என்று நாள் நட்சத்திரம் குறிப்பிட்டா சொன்னோம்?' என்று அலட்சியம் செய்தனர் தி.மு.க., அமைச்சர்கள்.
மூன்று ஆண்டுகள் கடந்த பின், பார்லிமென்ட் தேர்தலை முன்னிட்டு, அனைத்து மகளிருக்குமான உரிமை தொகை, தகுதி வாய்ந்த மகளிருக்கு மட்டும் என்று மாற்றம் பெற்றது.
அந்த, 1,000 ரூபாய்க்கே மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது. இப்போது, 2,000 ரூபாயாக உரிமை தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், இதற்கும், 2029 பார்லிமென்ட் தேர்தல் வரை காத்திருக்க வேண்டுமா?
இதில், 'டிவி' பிரிஜ், வாஷிங் மிஷின், மிக்ஸி, மைக்ரோவேவ் ஓவன், மின் அடுப்புகள் வாங்க, 8,000 ரூபாய் கூப்பன் வழங்கப்படும் என்று வாக்குறுதி வழங்கியுள்ளார், ஸ்டாலின்.
'ஆரிய கூத்தாடினாலும் காரியத்தில் கண் வை' என்பது போல், 8,000 ரூபாயை வங்கிக் கணக்கில் செலுத்தினால், உடன் பிறப்புகள் சம்பாதிக்க முடியாதே என்று எண்ணி, கூப்பன் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
துாண்டிலில் சிக்கும் வரை தான் மீனுக்கு பாதுகாப்பு; சிக்கி விட்டால், 'ரோஸ்ட்' தான்!
தமிழக மக்களே உஷார்!
