sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

ஜாதி பெயர்களில், 'ர்' சேர்த்தால் வேற்றுமை ஒளிந்து விடுமா?

/

ஜாதி பெயர்களில், 'ர்' சேர்த்தால் வேற்றுமை ஒளிந்து விடுமா?

ஜாதி பெயர்களில், 'ர்' சேர்த்தால் வேற்றுமை ஒளிந்து விடுமா?

ஜாதி பெயர்களில், 'ர்' சேர்த்தால் வேற்றுமை ஒளிந்து விடுமா?


PUBLISHED ON : அக் 08, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 08, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எஸ்.ரகுராமன், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஜாதி பெயர்களின் இறுதி எழுத்து, 'ர்' என்று முடியும் வகையில் மாற்றம் செய்து, மக்களுக்கு உரிய மரியாதை கிடைக்கச் செய்ய பிரதமருக்கு கோரிக்கை வைத்துள்ளேன். வேற்றுமை, பகைமைகளை விரட்ட, சமூக நீதி, சமத்துவம், கல்வி உரிமை ஆகியவை வேண்டும். அது உருவாக பாடுபடுகிறேன்' என்று, தத்துவ மேதை சாக்ரடீஸ் ரேஞ்சுக்கு கதை அளந்துள்ளார், தமிழக முதல்வர் ஸ்டாலின்.

ஜாதி பெயர்களின் இறுதி எழுத்தில், 'ர்' விகுதி சேர்த்து அழைப்பதால் மட்டும் சமூக மாற்றம், சமத்துவம், கல்வி உரிமை கிடைத்து விடுமா?

தமிழக அரசு வெளியிட்டுள்ள ஜாதி பெயர் பட்டியலில், ஐயர், ஐயங்கார், தேவர், முதலியார், வெள்ளாளர், வேளாளர், இருளர், குறும்பர் என்று பல பெயர்கள் மரியாதையோடு தான் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதில், இவர் புதிதாக எங்கே, 'ர்' சேர்க்கப் போகிறார்?

'தோட்டி' என்று ஒரு ஜாதி உள்ளது. அந்த பெயரில் எப்படி, 'ர்' விகுதி சேர்த்து அழைப்பது?

சிறுபான்மை இனத்தில், 'லப்பை' என்ற ஜாதி உள்ளது. அப்பெயரை எப்படி, 'ர்' விகுதிக்குள் அடைப்பது?

ஜாதி பெயரில், 'ர்' சேர்ப்பதால் மட்டும் சமூகநீதியும், சமத்துவமும் கிடைத்து விடாது. அனைவருக்குமான சமூகநீதி கிடைக்க வேண்டும் என்றால், மனம் விசாலமாக வேண்டும். அதற்கு தெளிவான அறிவு வேண்டும்.

அந்த அறிவும், மனமும் இல்லாததால் தான், தி.மு.க.,வின் மூத்த தலைவர் களில் ஒருவரான பொன்முடி, பொதுக்கூட்டத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து, 'நீ எஸ்.சி., தானே' என ஏளனமாக கேட்டார்.

குறவர் சமூகத்தை சேர்ந்த தலைவரை, அமைச்சர் ராமச்சந்திரன் நிற்க வைத்து பேசினார். ஏன்... வார்த்தைக்கு வார்த்தை சமூக நீதி பேசும் முதல்வர் ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவரான திருமாவளவனை சமமாக உட்கார வைத்து பேசாமல், இரண்டு நாற்காலிகள் தள்ளி அமர வைத்து பேசினார்.

எனவே, ஜாதி பெயரின் இறுதி எழுத்தை மாற்றம் செய்வதாலேயே சமூகநீதி மலர்ந்து, சமத்துவம் தழைத்து விடாது!

அதனால், இதுபோன்ற உப்புச்சப்பற்ற அறிவிப்புகளை வெளியிடுவதற்கு பதில், ஆக்கப்பூர்வமான வேலைகளை திராவிட அரசு செய்யலாம்!



பாகிஸ்தானுடன் விளையாட்டு தேவையா? எஸ்.ஆர்.த்ராவிட், சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பஹல்காம் சம்பவத்திற்கு, 'ஆப்பரேஷன் சிந்துார்' வாயிலாக பதிலடி தரப்பட்டாலும், அந்த நெருப்பு இன்னும் ஒவ்வொருவரின் மனதிலும் கனன்று கொண்டு தான் இருக்கிறது. அவ்வளவு எளிதில் அணையாது.

அப்படி இருக்கும் போது, மதத் தீவிரவாதத்தை வெளிப்படையாக ஆதரிக்கும் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடலாம் என்ற முடிவை மத்திய அரசோ, பி.சி.சி.ஐ.,யோ எவர் எடுத்திருந்தாலும் அது மிகப் பெரிய தவறு.

பஹல்காம் சம்பவத்தால் ஏற்பட்ட சோகமும், கோபமும் நீர்பூத்த நெருப்பாக இருக்கும் போது, அந்நாட்டுடன் கிரிக்கெட் விளையாடுவது எந்த விதத்தில் சரி?

தென்னாப்ரிக்காவுக்கும், நமக்கும் எந்தப் பகையும் இல்லை. அப்படி இருந்தும், அந்நாட்டின் நிறவெறி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 1974ல் நாம் கஷ்டப்பட்டு 'டேவிஸ் கப்' இறுதிப் போட்டியில் நுழைந்தும், 'தென்னாப்ரிக்காவுடன் விளையாட மாட்டோம்' என்று காங்கிரஸ் அரசு கூற, நமக்கு கிடைத்த அரிய வாய்ப்பை புறக்கணித்தோம்.

மேலும், மத்திய கிழக்கில் இஸ்லாமிய நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடித்ததால், 1962, 1982, 1986களில் ஏசியன் ஒலிம்பிக்கில் இஸ்ரேல் பங்கு பெறக்கூடாது என்று கூறி, இஸ்ரேலுக்கு நிரந்தர தடை விதித்த போது, அதை அப்படியே ஏற்றது இந்திய அரசு.

அதனால், 1987ல் அர்ஜென்டினா அணியை போராடி ஜெயித்த பின், அடுத்த மேட்ச் இஸ்ரேலுடன் விளையாடி இறுதிப் போட்டிக்கு போக வேண்டிய நிலையில், இஸ்ரேலுடன் விளையாட மறுத்து, அந்த வாய்ப்பையும் இழந்தோம்.

இத்தனைக்கும் நமக்கும், இஸ்ரேலுக்கும் எந்த பகைமையும் இல்லை. இஸ்லாமிய நாடுகளின் வற்புறுத்தலுக்கு அன்றைய காங்., அரசு பணிந்து இம்முடிவை எடுத்தது.

ஆனால், பஹல்காமில் நம் சகோதரிகளின் கணவர்களையும், பிள்ளைகளையும் துடிக்கத் துடிக்க கொன்றனர், பாகிஸ்தான் பயங்கரவாதிகள்.

அந்த வடு ஆறுமுன், அந்நாட்டுடன் கிரிக்கெட் விளையாடியது எந்த வகையில் நியாயம்?

இஸ்ரேலால் இஸ்லாமிய நாடுகள் பாதிப்புக்குள்ளாகிறது என்று இந்தியா, இஸ்ரேலுடன் விளையாட மறுத்தது. அதே இஸ்லாமிய நாடான பாகிஸ்தான் நம் நாட்டின் மீது பயங்கரவாத தாக்குதலை நடத்தி வரும் நிலையில், அந்நாட்டுடன் இந்தியா விளையாட்டு உறவு வைப்பது சரியா?



இதற்கு பெயர் தான் ஜனநாயகமா? எஸ்.உதயம்ராம், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரிதாரம் பூசியவர்களை ஆண்டவனாகப் பார்க்கும் அறியாமை, அநியாயமாய் கரூரில், 41 உயிர்களைப் பறித்து விட்டது.

நேரடி ஒளிபரப்பு இருக்கும் இக்காலத்திலும், நேரில் சென்று பார்க்கத் துடித்த மக்களின் சினிமா மோகமும், அரசியல் அனுபவமில்லாத தமிழக வெற்றிக் கழக தொண்டர்களின் ஆர்வக் கோளாறும், கூட்டம் சேர்ப்பதற்காக கடும் வெயிலில் மக்களைக் காக்க வைத்து, தாமதமாய் வந்த நடிகர் விஜய்யின் மனிதாபிமானமில்லாத அலட்சியமும், குறுகிய இடத்தில் கூட்டம் நடத்த அனுமதி தந்து, நெரிசலுக்கு வாய்ப்பு தந்த அரசின் மெத்தனமும், அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையும் சேர்ந்து, கரூரை கண்ணீர் பூமியாக்கி விட்டது.

'எரியும் வீட்டில் பிடுங்கியது வரை லாபம்' என்பது போன்று, மரணத்திலும் அரசியல் செய்யும் கேவலம் மீண்டும் அரங்கேறி உள்ளது.

ஒவ்வொரு கட்சியும் நிவாரணம் என்ற பெயரில், ஐ.பி.எல்., ஏலத்தில் வீரர்களுக்கு விலை நிர்ணயிப்பது போல், இறந்த உயிருக்கு விலை நிர்ணயித்து, அபலைகளின் கண்ணீரை ஓட்டுகளாக மாற்ற முயற்சிக்கின்றன.

உழைப்புக்குக் கிடைக்காத ஊதியமும், மரியாதையும் இதுபோன்ற அவலமான நிகழ்வில் உயிரை விட்டால்தான் கிடைக்கும் என்ற கொடிய கொள்கை, இந்த தேசத்திற்கே அவமானம்.

இத்தனை உயிர்களை பலி கொடுத்த பின்தான், கட்சிக் கூட்டங்கள் நடத்துவது குறித்து, புதிய வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்று அரசுக்கும், பேரணிகள், ரோடு ஷோக்களை கண்டிப்பதற்கு நீதி மன்றத்திற்கும் தோன்றியதா?

அறியா ஜனங்களை பலி கொடுத்து, அரியாசனம் காண்பதற்கு பெயர் தான் ஜனநாயகம் என்றால், கட்டுப்பாடற்ற இந்த ஜனநாயகம் தேவையில்லை!








      Dinamalar
      Follow us