PUBLISHED ON : டிச 29, 2024 12:00 AM

வி.சி.கிருஷ்ணரத்னம், காட்டாங்குளத்துார், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில், தனியார் வங்கிகளை விட நகைக் கடனுக்கு வட்டி குறைவு என்பதால் தான், ஏழை - நடுத்தர மக்கள், தங்களது நகையை தேசிய வங்கிகளில் அடமானம் வைத்து, கடன் பெறுகின்றனர்.
கடன் பெற்று ஓராண்டு முடியும்போது, வட்டி கட்டி நகைகளை மீண்டும் புதுப்பித்து, தங்களது நகை ஏலத்திற்கு செல்லாமல் பாதுகாத்தனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக நகைக் கடனை புதுப்பிக்க, வங்கி நிர்வாகம் அனுமதி மறுத்து வருவதால், நகை ஏலத்திற்கு செல்வதை தடுக்க, வேறு வழியின்றி, அதிக வட்டிக்கு குறிப்பாக, மீட்டர் வட்டிக்கு வெளியில் பணம் வாங்கி, நகையை மீட்டு, மீண்டும் அதே வங்கியில் அடகு வைக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இது குறித்து, வங்கி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, நகைக் கடனை புதுப்பிக்கும் வகையில் மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பதே, என் போன்ற ஏழை வங்கி வாடிக்கையாளர்களின் வேண்டுகோள்!
அரசு வங்கிகள் இதை கவனத்தில் கொள்ளுமா?
lll
வரவேற்கப்பட வேண்டிய மாற்றம்!
என்.வைகை
வளவன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மத்திய அரசு
நடத்தும் கேந்திர வித்யாலயா, நவோதயா மற்றும் சைனிக் பள்ளிகளில், இனி,
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவரை யும், ஆல் - பாஸ் ஆக்கும்
முறை ரத்து செய்யப் படுவதாக கூறி, கல்விக் கொள்கையில் புதியமாற்றம் கொண்டு
வந்து உள்ளது, மத்திய அரசு.
மாணவர்களின் கற்கும் திறமையை
சோதிப்பதற்காக தான் தேர்வுகளே நடத்தப்படுகின்றன. 'ஆல் பாஸ்' என்று
அறிவித்து விட்டால், எந்த மாணவனும் கஷ்டப்பட்டு படித்து, தேர்வு எழுத
முன்வர மாட்டான்.
அந்தக் காலத்தில், ஒவ்வொரு ஆண்டும் தேர்வுகள்
நடத்தி, அதில் குறைவான மதிப்பெண் பெறும் மாணவர்கள் தோல்வி அடைந்ததாக,
பள்ளியில் நோட்டீஸ் ஒட்டும் வழக்கம் இருந்தது.
அதனால், தேர்வில் தேர்ச்சி பெற கடுமையாக உழைத்தனர், மாணவர்கள்.
ஆரம்ப
பள்ளியிலிருந்து, உயர்நிலைப்பள்ளியில் சேருவதற்கு நுழைவுத் தேர்வு நடத்தி,
அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே, ஆறாம் வகுப்பில் சேர
அனுமதிக்கப்பட்டனர்.
திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தான், மாணவர்களின் கல்வித் திறன் பாதிக்கும் அளவிற்கு, தேர்வில் மாற்றங்கள் கொண்டுவரப் பட்டன.
எனவே,
மத்திய அரசு கொண்டு வரும் திட்டத்தை எல்லாம் எதிர்க்க வேண்டும் என்ற
கொள்கையில், தீவிரமாக இருக்கும் திராவிட மாடல் அரசு, இதையும் ஏற்காததில்
ஆச்சரியம் இல்லை!
lll
அரசு உணருமா?
கே.மணிவண்ணன்,
கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசு பதவி ஏற்று,
மூன்றாண்டு நிறைவடைந்து, நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது.
முதல்
ஆண்டு மத்தியில் இருந்தே வீட்டு வரி, மின் கட்டணம், பத்திரப் பதிவு
கட்டணம் போன்ற வற்றை அபரிமிதமாக ஏற்றி, மக்களை பெரும் துயரத்தில்
ஆழ்த்தியது, திராவிட மாடல் அரசு.
தற்போது, நில வழிகாட்டி மதிப்பு பலமடங்கு உயர்த்த போவதாக, பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது.
ஏற்கனவே,
பத்திரப் பதிவு கட்டணம் உயர்ந்துள்ளதால், சிறிதளவு நிலம் வைத்திருப்போர்
திருமணம், மருத்துவ செலவுகளுக்கு நிலத்தை விற்பனை செய்ய முடியாமல்,
அவதிப்பட்டு வருகின்றனர். இதில், நில வழிகாட்டி மதிப்பும் உயர்ந்தால்,
மேலும் வீட்டு விற்பனை தொய்வு அடையும்.
கட்டுமான பொருட்களின் விலை
கடுமையாக உயர்ந்திருக்கும் நிலையில், வழிகாட்டி மதிப்பும்
உயர்த்தப்பட்டால், கட்டுமான தொழிலைச் சார்ந்த உப தொழில்கள் அனைத்தும்
முடங்கும் அபாயம் உள்ளது; இதனால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள்
பாதிக்கப்படுவர்.
அத்துடன், வீட்டு வரி உயர்வால், வீட்டு வாடகை
உயர்ந்து, வாடகை வீட்டில் குடியிருப்போர் பெரிதும் அவதிப்பட்டு வரும்
நிலையில், ஏற்கனவே உயர்த்திய மின்கட்டணத்தை, மேலும் உயர்த்துவது நடுத்தர
மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திஉள்ளது.
'காக்கைக்கு தெரியுமா
எருதுவின் நோவு' என்பது போல், அரசு விதித்துள்ள வரியால், மக்கள் திண்டாடிக்
கொண்டிருக்கும் நிலையில், மின்கட்டணம் உயர்வு, நில வழிகாட்டி மதிப்பை
உயர்த்தியுள்ளது, 'எறும்பு தலையில் பாறாங்கல்லை வைப்பதற்கு சமம்' என்பதை
அரசு உணர வேண்டும்!
lll
ஏன் இந்த ஆணவம்?
கிருஷ்ணமூர்த்தி
ராமசுப்பிரமணியன், ஆசிரியர் (பணி நிறைவு), நைனார் மண்டபம், புதுச்சேரியில்
இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில், தி.மு.க., செயற்குழு
கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், 'மக்களால் நிராகரிக்கப்பட்டு,
ஓரங்கட்டப்பட்டவர் பழனிசாமி' என்று கூறியுள்ளார்.
பழனிசாமி
மக்களால் நிராகரிக்கப்பட்டவர் என்றால், ஜெயலலிதாவிடம், தொடர்ச்சியாக
இருமுறை தோற்று, மண்ணைக் கவ்விய கருணாநிதியும், மக்களால்
ஓரங்கட்டப்பட்டவர் தானே?
அப்படி மக்களால் நிராகரிக்கப்பட்ட
கருணாநிதிக்கு, எதற்காக மக்கள் வரிப்பணத்தில் பஸ் நிலையமும்,
மருத்துவமனைகளும், நினைவு மண்டபமும் கட்ட வேண்டும்?
கூட்டணி தயவு இன்றி, தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெற்று, தன் செல்வாக்கை எதிர்க்கட்சிகளுக்கு பறைசாட்டியவர், ஜெயலலிதா!
'தமிழின
தலைவர், நவீன தமிழகத்தை உருவாக்கிய சிற்பி கருணாநிதி' என்று வாய்க்கு வந்த
கதையெல்லாம் அடித்து விடும் ஸ்டாலின், ஜெயலலிதாவைப் போன்று, தேர்தலில்
தனித்து நின்று, நவீன சிற்பியின் செல்வாக்கை நிரூபிக்கலாமே!
தற்போது ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால், தி.மு.க.,வால் ஆட்சி அதிகாரத்தைப் பற்றி நினைத்துப் பார்த்திருக்க முடியுமா ?
மீண்டும்
பழைய ஓய்வூதியம், அனைத்துப் பெண்களுக்கும் உரிமைத் தொகை, ஓய்வூபெற்ற
போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட போலி
வாக்குறுதிகளின் வாயிலாகவும், கூட்டணி கட்சிகளின் தயவாலும் தான் இன்று
ஆட்சியில் உள்ளது, தி.மு.க.,
தற்போது, அ.தி.மு.க., பிளவு பட்டு உள்ளதால் தானே இத்தகைய ஆணவ பேச்சு?
நீங்கள் பிளவு படாமல் இருக்கும் கட்சி தானே... தைரியம் இருந்தால், கூட்டணி இல்லாமல், தேர்தலில் நில்லுங்கள் பார்ப்போம்!
உங்களால் முடியாது; பின், ஏன் இந்த ஆணவ பேச்சு?
lll

