/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
சட்டத்தின் பிடிக்குள் வருவரா நீதிபதிகள்?
/
சட்டத்தின் பிடிக்குள் வருவரா நீதிபதிகள்?
PUBLISHED ON : மார் 31, 2025 12:00 AM

அ.குணசேகரன்,
வழக்கறிஞர், புவனகிரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
உயர்
நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி மீது, முதல் முறையாக ஊழல் வழக்கு பதிவு
செய்யப்பட்டது என்றால், அது, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்த
கே.வீராசாமி மீது தான்!
கடந்த 1976ல் சி.பி.ஐ., அவர் மீது ஊழல்
வழக்கு பதிவு செய்து, நீதிபதிகளும் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் தான் என்று
நிலைநாட்ட முயன்றபோது, 'ஓர் உயர்நீதிமன்ற நீதிபதி மீது வழக்கு பதிவு செய்ய
வேண்டும் என்றால், அதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெற
வேண்டும்' என்று, 1991ல், நீதிபதிகள் ஐவர் கொண்ட அமர்வு, வீராசாமி வழக்கில்
தீர்ப்பளித்தது.
இப்படி உச்ச, உயர் நீதிமன்றங்களுக்கும், சட்டம்
இயற்றும் ஆட்சியாளர்களுக்கும் இடையே அடிக்கடி முட்டல் மோதல்கள் ஏற்பட்டன.
அதன் உச்சம்தான், இந்திரா பிரதமராக இருந்தபோது அறிவித்த எமர்ஜென்சி!
ஒருவகையில்,
அவர் நீதித்துறையை அடக்கி வைத்து இருந்தார். ஆனால், 1990க்கு பின்,
மத்தியில் வலிமையான ஆட்சி அமையவில்லை; மீண்டும் நீதித்துறையின் கைகள்
ஓங்கின.
விளைவு... உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் வரை ஊழல்
குற்றச்சாட்டில் சிக்கினர். ஆனால், சட்டப் பாதுகாப்பு இருப்பதால் தப்பித்து
வருகின்றனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, 2014ல் மோடி அரசு,
அனைத்துக் கட்சிகளையும் கூட்டி, 'நீதித்துறையும், அரசும் இணைந்து ஒரு குழு
அமைத்து, அதன்வாயிலாக நீதிபதிகள் பணிநியமனம் நடைபெற வேண்டும்' என்று, ஒரு
மனதாக சட்டம் நிறைவேற்றியது.
அதற்கு உச்ச நீதிமன்றம், 'நாங்களே
தான் நீதிபதிகளை நியமிப்போம்' என்று தீர்ப்பு அளித்தது. இப்போது, நீதிபதி
யஷ்வந்த் வர்மாவின் ஊழலை மூடி மறைக்க முயற்சி செய்துள்ளது.
இனியும்
மத்திய அரசு தாமதிக்காமல், அரசும், நீதித்துறையும் இணைந்த குழு வாயிலாக
நீதிபதிகள் பணி நியமனம் சட்டத்தை உச்ச நீதிமன்றம் ஏற்க வலியுறுத்த
வேண்டும். அது மட்டும்தான் ஓரளவு நேர்மையான நீதிபதிகள் பணிநியமனத்திற்கு
வழி வகுக்கும்.
அத்துடன், தற்போது ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள
யஷ்வந்த் வர்மா, சமாஜ்வாதி கட்சியின் அரசியல் வழக்கறிஞராக பணிபுரிந்து
உள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத் துறை வழக்கை விசாரித்த
நீதிபதிகள் இருவரும், அந்த வழக்கை விசாரிக்க மறுத்து ஒதுங்கியுள்ளதற்கு
காரணம், அவர்கள் தி.மு.க.,விற்கு ஆதரவாக வழக்குகள் நடத்தியவர்கள் என்று
கூறப்படுகிறது.
எனவே, வருங்காலத்தில், உயர் நீதிமன்ற நீதிபதி
பணிநியமனங்களின்போது, அவர்கள் எந்தவொரு அரசியல் கட்சியைச் சாராதவராக இருக்க
வேண்டும். அத்துடன், கீழமை நீதிமன்ற நீதிபதி பணியிடங்களுக்கு, ஐ.ஏ.எஸ்., -
ஐ.பி.எஸ்., தேர்வுகள் போன்று, ஐ.ஜே.எஸ்., தேர்வும் கடுமையாக வைத்து தேர்வு
செய்ய வேண்டும்.
மேலும், தற்போது நீதிபதிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள சட்டப் பாதுகாப்பை விலக்க, பார்லிமென்டில் சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும்.
காலத்தின் கட்டாயம் இது!
என்ன நன்மை?
ஆர்.பிரேம்சுதாகர், பெரியகுளத்தில் இருந்து எழுதுகிறார்:
தொகுதி மறுசீரமைப்பின் வாயிலாக, தமிழக எம்.பி.,க்களின் எண்ணிக்கை, 39 லிருந்து, 31 ஆக குறையப்போகிறது என பதறுகிறார், தமிழக முதல்வர். ஆனால், இதுகுறித்து தமிழக மக்களுக்கு எவ்வித பதற்றமும் இல்லை; ஏனெனில், எம்.பி.,க்களின் செயல்பாடு அந்த லட்சணத்தில் உள்ளது.
அவர்கள் சார்ந்த கட்சி தலைமைக்கு ஆதரவாக குரல் எழுப்பவும், மக்கள் நலன் சாராத உப்புமா பிரச்னைகளுக்காக பார்லிமென்ட்டை முடக்கவும் தான் பதவியை பயன்படுத்துகின்றனர். அத்துடன், பதவியின் வாயிலாக பல சலுகைகளை பெற்று, தொழில் துவங்கி, தங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்கின்றனர். ஓட்டுப் போட்ட மக்களுக்கும், தொகுதி மேம்பாட்டுக்கும் என்ன செய்துள்ளனர்?
பார்லிமென்ட் கூடும் நாட்கள் எல்லாம் தினசரி சந்தைக்கடை போல் கூச்சலிடும் இவர்கள், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்க போராடினரா? நெல்லை மற்றும் கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை துவங்க வேண்டும் என்று உண்ணாவிரதம் தான் இருந்தனரா? 50 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத திண்டுக்கல் - சபரிமலை திட்டத்தை வலியுறுத்தி குரல் எழுப்பினரா? மதுரை - காரைக்குடி ரயில்பாதை வேண்டி போராடினரா?
எதற்கு, 39 எம்.பி.,க் கள்? பார்லிமென்ட் கேண்டீனில் ஆலு போண்டாவும், பன்னீர் டிக்காவும் சாப்பிடவா?
ஒவ்வொரு எம்.பி.,க்கும் மாதம், 3 லட்சம் ரூபாய் சம்பளம் மற்றும் படிகள் என கணக்கிட்டால், ஆண்டுக்கு, 36 லட்சம் ரூபாய் அழ வேண்டும். 5 ஆண்டுகளுக்கு ஒரு எம்.பி.,க்கு, ஒரு கோடியே, 80 லட்சம் ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் இருந்து துாக்கி கொடுக்க வேண்டும். இதுபோக ஓய்வூதியம் வேறு!
எந்த எம்.பி., தன் தொகுதி மக்களை மாதம் ஒரு முறை சந்திக்கிறார்? தன் தொகுதியில் எத்தனை அலுவலகங்கள் திறந்து, மக்கள் குறைகளை காது கொடுத்துக் கேட்கிறார்?
எனவே, மத்திய அரசு எம்.பி.,க்களின் எண்ணிக்கையை பாதியாக குறைத்து, பார்லிமென்ட்டில் வீண் கூட்டத்தை கூட்டாமல், ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்தி, மக்களுக்கு பணியாற்ற ஆவன செய்ய வேண்டும்.
அதிக எம்.பி.,க்களால் அதிக நன்மைகள் விளையாது; மாறாக, மக்களின் வரிப் பணம் தான் வீணாகும்!
ரயில்வே துறை ஆலோசிக்குமா?
பா.பாலசுப்ரமணியன், புதுச் சேரியில் இருந்து எழுதுகிறார்:
தெற்கு ரயில்வேயின் காலி நிலத்தில், தனியார் மற்றும் பொதுமக்கள் தங்கள் நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ள, இடம் வாடகைக்கு விடப்படும் என்று, தென்னக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
காலி இடத்தில் கண்காட்சி, இசை நிகழ்ச்சி, சர்க்கஸ் போன்றவற்றை நடத்தலாம்; ஆனால், திருமணம், வளைகாப்பு, பிறந்த நாள் போன்ற குடும்ப விழாக்களை எப்படி நடத்த முடியும்?
அதற்குப் பதில், காலி இடத்தின் ஒரு பகுதியில், திருமண மண்டபங்களை கட்டி, வாடகைக்கு விட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
தரைத் தளத்தை வாகன நிறுத்துமிடமாகவும், முதல் மற்றும் இரண்டாம் தளத்தில் திருமண மண்டபங்களும் கட்டலாம்!
பயணியரின் கட்டணத்தை உயர்த்தாமல், மாற்று வழிகளில் வருவாயை பெருக்க இந்த யுக்தி கையாளப்படுவதாக ரயில்வே துறையின் அறிக்கை கூறுகிறது.
கட்டண உயர்வின்றி வருவாயை பெருக்க, பயணியர் எதிர்பார்க்கும் சில வசதிகளுக்கு ஏற்ப, ரயில் பெட்டிகளை கட்டமைத்து, அதற்கு தகுந்தாற்போல் கட்டணத்தை நிர்ணயிக்கலாம்.
உதாரணமாக, தற்போது ரயில்களில், 'ஏசி'யுடன் கூடிய படுக்கை வசதி கொண்ட முன்பதிவு பெட்டிகளில், '2 ஏ, 3 ஏ' எனும் பெயர்களில் இரண்டடுக்கு மற்றும் மூன்றடுக்கு பெட்டிகள் உள்ளன.
ஆனால், 'ஏசி' இல்லாத பெட்டிகளில், எஸ்.எல்., எனும், மூன்றடுக்கு மட்டுமே உள்ளது. இதிலும், இரண்டடுக்கு பெட்டியை விரும்பும் பயணியர் அதிகம் உள்ளனர். இதுகுறித்தும் ரயில்வே துறை சிந்திக்கலாமே!