PUBLISHED ON : மார் 05, 2025 12:00 AM

அ.சேகர், கடலுாரில்
இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசியலுக்கும், தமிழ்
சினிமாவுக்கும் எப்போதும் நெருங்கிய தொடர்பு உண்டு.
கடந்த
1970க்கு முன், சினிமா கதாநாயகர் அனைவருமே ஏதாவதொரு அரசியல் கட்சியைச்
சார்ந்தவராக தங்களை காட்டி, அதற்கேற்ப திரைப்படங்களில் வசனம் பேசி
நடித்தனர்.
அதில், மிகப்பெரிய வெற்றி பெற்றவர் எம்.ஜி.ஆர்., மட்டுமே!
அதன்பின்,
அவரால் அடையாளம் காட்டப் பட்ட ஜெயலலிதா மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
மற்றபடி பல நடிகர்கள் வந்தனர், சென்றனர் என்பதே இன்றுவரை தொடரும் நிலை!
நடுவில்,
நடிகர் விஜய்காந்த் கட்சி ஆரம்பித்து, எதிர்க்கட்சித் தலைவராக
உயர்ந்தாலும், குடும்பத்தினரின் தவறான வழிகாட்டுதலால், கட்சி வீழ்ச்சி
அடைந்ததுடன், அவரது உடல்நலமும் பாதிக்கப்பட்டு, இயற்கை எய்தினார்.
'எம்.ஜி.ஆர்.,
வழியில் அரசியல் கட்சி துவங்கி, ஆட்சி செய்வேன்' என்று கூறி தன் ரசிகர்களை
உசுப்பேற்றிய ரஜினி, பின் பல்டி அடித்து ஓடியதும், கமல்ஹாசன் பெயரளவில்
கட்சி ஆரம்பித்து, ஒரு ராஜ்ய சபா சீட்டுக்காக தி.மு.க.,விடம் விலை போய்
விட்டதும் நாம் அறிந்ததே!
இந்நிலையில், தி.மு.க., மற்றும்
அ.தி.மு.க., வுக்கு மாற்றாக த.வெ.க., என்ற கட்சியை ஆரம்பித்துள்ள விஜய்,
கட்சி ஆரம்பித்து ஓராண்டு நிறைவடைந்தும், இதுவரை, ஆளுங்கட்சிக்கு எதிராக,
எந்தவொரு போராட்டமும் செய்யவில்லை; ஏழை - எளிய மக்களின் பிரச்னைக்காக
களத்தில் இறங்கி குரல் கொடுக்கவும் இல்லை. ஏன்... விக்கிரவாண்டி
மாநாட்டிற்கு வந்தபோது, விபத்தில் சிக்கிய தன் தொண்டர்களுக்கு கூட
நிதியுதவி செய்யவில்லை.
த.வெ.க., கட்சி தி.மு.க., - அ.தி.மு.க., விற்கு மாற்று என்கிறார் விஜய்!
எந்த வகையில், அவர்களில் இருந்து த.வெ.க., மாறுபட்டுள்ளது?
இரு
கழகத்தினரும் பேசுவது ஒன்றாகவும், செயல் வேறாகவும் வாழ்பவர்கள். விஜயும்
அப்படித்தானே உள்ளார்? மும்மொழி கல்வியை எதிர்த்துக் கொண்டு சி.பி.எஸ்.இ.,
பள்ளியை நடத்தும் இவரது இந்த ஒரு செயல் போதுமே... திராவிட கட்சிகளுடன் இவர்
எப்படி இரண்டுற கலந்துள்ளார் என்பதற்கு!
கருவாடு மீனாக முடியாது;
விஜய் ஒருபோதும் எம்.ஜி.ஆர்., மற்றும் விஜய்காந்தாக முடியாது என்பதை காலம்
உணர்த்தும்போது, தமிழக அரசியலில் வந்து சென்ற சினிமா நட்சத்திரங்களில்
இவரும் ஒருவராக இருப்பார் என்பது சர்வ நிச்சயம்!
செங்கோலின் பெருமை அறியாதவர்கள்!
ஆர்.ஈஸ்வர் சந்திரசேகரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திராவிட மாடல் ஆட்சியாளர்களை பொறுத்தவரை, எந்த ஒரு விஷயத்தையும் தாங்கள் செய்தால், அதை பெருமை பேசுவதும், மற்றவர்கள் செய்தால் அவதுாறு பரப்புவதும் அவர்களின் பிறவி குணம்!
பொதுகூட்டங்களில் செங்கோல், வீரவாள் பரிசளிப்பதையும், மலர் கிரீடங்கள் சூட்டுவது, ஏழெட்டு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டிகளில் ஊர்வலம் வருவதையும் தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர்களே தி.மு.க.,வினர் தான்!
ஆனால், அதையெல்லாம்மறந்து, கடந்த ஆண்டு புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பின் போது, பிரதமர்மோடி செங்கோலை வணங்கியதை, கேலி செய்தும், கீழ்த்தரமாக விமர்சித்தும், அவதுாறு பரப்பியும் அற்ப சந்தோஷம் அடைந்தனர்.
தேவாரம், திருவாசகம் முழங்க, பயபக்தியுடன் செங்கோலை வாங்கி, அதை வணங்கி, பார்லிமென்ட் வளாகத்தில் கண்ணாடி பேழையில் வைத்து மரியாதை செலுத்தினார், மோடி.
ஆனால், முதல்வர் ஸ்டாலினோ, அமைச்சர் சுப்பிரமணியன் பிறந்த நாள் பரிசாக கொடுத்த செங்கோலை, இந்த கையால் வாங்கி, அந்த கையால் அடிபொடிகளிடம் கொடுத்து விட்டார்.
அந்த செங்கோலுக்கு வணக்கமும் செலுத்தவில்லை; மரியாதையும் கொடுக்கவில்லை.
பொதுக்கூட்டங்களில் இவர்களுக்கு போடும் மாலைகளுக்கு கிடைக்கும் மரியாதைதான், அந்த செங்கோலுக்கும் கிடைத்தது.
இவர்கள் தான், தமிழர்களின் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் காக்க வந்தவர்கள்?
பிரதமர் செங்கோலை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிய போது, அதை நடிப்பு என்று கேலி பேசிய இக்கூட்டம் தான், இன்று செங்கோலை அவமரியாதை செய்கிறது!
வெறுமனே தமிழைக் காப்போம்; தமிழ் பண்பாட்டைக் காப்போம் என்று ஓரங்க நாடகம் நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு, செங்கோலின் பெருமையும், மரபும் எங்கே தெரியப்போகிறது?
எழுத்தறியாதவன் கையில் எழுதுகோல் கிடைத்து என்ன பயன்... செங்கோலின் பெருமை அறியாதவர்களுக்கு அதைக் கொடுத்து என்ன புண்ணியம்?
கள்ளக்கூட்டணி வைத்திருப்பது யார்?
கே.எஸ்.தியாகராஜபாண்டியன், காரைக்குடி, சிவகங்கை மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும் மாறி மாறி, பா.ஜ., வுடன் கள்ளக்கூட்டணி வைத்திருப்பதாக மேடைதோறும் முழங்கி வருகின்றனர்.
ஆனால், நிஜமான கள்ளக் கூட்டணி யார் என்றால், தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் தான். இது, சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாயிலாக நிருபணம் ஆகிஉள்ளது.
அ.தி.மு.க., ஓட்டுகள் தி.மு.க.,விற்கு கிடைத்துள்ளதாக அக்கட்சி அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார்!
இந்த இரு கட்சிகளும் எதிரிகள் என்ற நிலைப்பாடு, ஜெயலலிதாவுடன் முடிந்து விட்டது.
ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் கட்சி இருந்த போது, ஏதாவது ஒரு திருமண நிகழ்வில் எதிரும், புதிருமாக சந்தித்துக் கொண்டால், நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும்கூட ஒருவரையொருவர் பார்த்து சிரிக்க மாட்டார்கள்.
அந்த அளவு கட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார் ஜெயலலிதா.
பழனிசாமிக்கு அந்த ஆளுமை இல்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், ஜெயலலிதா மறைவுக்கு பின், பழனிசாமியும், ஸ்டாலினும் பங்காளிகளாகிவிட்டனர் என்பதே உண்மை.
இருவரின் மறைமுக ஒப்பந்தமே, 'தமிழகத்தை நீ ஆள வேண்டும் இல்லை, நான் ஆள வேண்டும்; எக்காரணம் கொண்டும் பா.ஜ.,வை உள்ளே நுழைய விடக் கூடாது. பா.ஜ., இங்கு ஆட்சியில் அமர்ந்து விட்டால் நீயும், நானும் ஜென்மத்துக்கும் முதல்வராக முடியாது' என்பதுதான்!
இதை, இருதரப்பு இன்னாள், முன்னாள் அமைச்சர்கள் அவ்வப்போது, செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படையாகவே உளறி உள்ளனர்!
அதனால்தான், பா.ஜ., எதிர்ப்பில் இருவரும் ஒற்றுமையாக உள்ளனர்.
ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா குடிநீர், உணவகம், மருந்தகம், மினி கிளினிக், சிமென்ட், பசுமை வீடுகள், தாலிக்கு தங்கம், பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் என பல்வேறு திட்டங்களை முடக்கி விட்டது, தி.மு.க.,
இதை எதிர்த்து, பழனிசாமி எப்போதாவது குரல் கொடுத்தாரா அல்லது பெரிய அளவில் போராட்டம் தான் நடத்தினாரா?
என்ன செய்தார் பழனிசாமி?
மேம்போக்காக அறிக்கை வெளியிடுவதுடன் நின்று விடுகிறார்.
இப்போது புரிகிறதா... கள்ளக்கூட்டணி வைத்து இருப்பது யார் என்று?